tamilnadu

img

சென்னை சேலம் எட்டு வழி சாலை எதிர்ப்பு: களம் கண்ட போராளிகளுக்கு பாராட்டு விழா

சேலம், ஏப். 15 -சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்து விவசாயிகளையும் விவசாய நிலத்தையும் பாதுகாக்க போராடிய போராளிகளுக்கு பாராட்டுவிழா சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகிலுள்ள சீரிக்காடு பகுதியில் நடைபெற்றது,எட்டு வழி சாலை எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். அய்யாதுரை வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலபொதுச்செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், நிலம் நமது உரிமை எனவும் தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான திட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். குறிப்பாக எட்டு வழி சாலை திட்டம், விளைநிலங்களில் மின் கோபுரம், எரிவாயு குழாய் பதித்தல் உள்ளிட்ட திட்டங்களால் விவசாயிகளின் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்டுச் சொன்னால் சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய பாஜகஅரசும் மாநில அதிமுக எடப்பாடி அரசும் கையிலெடுத்து விவசாயிகளை சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியது.


ஆரம்ப கட்டத்தில் உண்ணாமலை அம்மா அவர்களின் செறிவு மிக்க போராட்டத்தை தொடர்ந்து, முதன்முதலில் இருவர் கைது செய்யப்பட்டனர் அன்று முதல் இன்று வரை விவசாயிகளின் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது. உண்ணாமலை அம்மா அவர்களின் செறிவு மிக்க பேச்சு நீதிபதிகளைக் கூட துயரப்பட வைத்தது போலும். அதனால் தற்போது எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்தும், சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்பு விவசாயிகளிடம் கருத்து கேட்கவும் உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. இதுவரை அரசு கையகப்படுத்திய நிலங்களை இரண்டு வார காலத்திற்குள் திரும்பி ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இதுவரை இதுபோன்ற தீர்ப்பு இந்தியாவில் வேறு எங்கும் வழங்கப்படவில்லை. இந்த தீர்ப்பு இனி வரும் காலங்களில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது முதலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக 8 என்ற வார்த்தையை உச்சரித்தாலே காவல்துறையினர் கைது செய்யும் நிலை இருந்து வந்தது. நமது சொந்த நிலத்தில் அடுத்தவர் வீட்டு ஆடு மாடு மேய்ந்தால் கூட விடாத நாம், நம் நிலத்தில் அத்துமீறி வருவாய் துறையினர் காவல் துறையினர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் வந்து நிலத்தை அளந்து சென்றனர்.


அதைத் தடுக்க முயன்ற போது அடித்து துன்புறுத்திய சம்பவம் தமிழகத்தில் தான் ஏற்பட்டது. தற்போது நீதிமன்ற தீர்ப்பின்படி சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்த முயன்ற வருவாய் துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதுவரை 180 வழக்குகள்விவசாயிகள் மீது போடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொய் வழக்குகள். எட்டு வழிச் சாலை திட்டம் குறித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து ஒரு வார காலம் ஆகியும் தமிழக முதல்வர் எடப்பாடி இது சம்பந்தமாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை தமிழகத்தில் 5 மாவட்டங்களை பாதிப்படையச் செய்த இத்திட்டத்தை பற்றி முதல்வர் பேச மறுக்கும் காரணம் என்ன என்றுதெரியவில்லை. திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் தமிழகத்தில் வெற்றி பெற்று எட்டு வழிச் சாலைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். எது நடந்தாலும் விவசாயிகள் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் போராட்டம்தான். மேலும் நகல் எரிப்பு கருப்புக்கொடி கட்டுதல் இவைஅனைத்தும் தனிப்பட்ட மனிதனின் செயல். இதில் அரசு சொத்து எங்கேயும் சேதப்படுத்த வில்லை.ஆனால் அரசு சொத்தை சேதப்படுத்தியதாக எண்ணற்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


விளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதேபோல் மீத்தேன்திட்டம் எரிவாயு குழாய் பதித்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராகவும் விவசாயிகள் கூட்டாக போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் தமிழகத்தில் உள்ளது. பெண்கள் தற்போது விவசாயிகள் போராட்டங்களில் அதிகம் பங்கெடுத்து வருகின்றனர். உயர்மின் கோபுரம் அமைப்பதை தடுக்க வலியுறுத்தி போராடியவர்கள் 15 நாட்கள் கோவைமத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அனைத்து தரப்பு மக்களும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தற்போது போராடி வருகிறார்கள். எதிர்வரும் காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும்பெ.சண்முகம் கேட்டுக்கொண்டார்விழாவில், எட்டு வழி சாலை குறித்து தீர்ப்பளித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்தும், எட்டு வழி சாலை திட்டம் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பினை மாநில அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும், எட்டு வழி சாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்நிகழ்ச்சியில் சிபிஎம் (எம்எல்) செயலாளர் மோகனசுந்தரம், சிபிஐ மாவட்டச் செயலாளர் மோகன், தமாகா மாவட்டதலைவர் சுசீந்திரகுமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல், சேலம் மாவட்ட உழவர் உற்பத்தியாளர் சங்க செயலாளர் நாராயணன், பொருளாளர் சிவகாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, தலைவர் பொன்னுசாமி, துணை தலைவர் பி.தங்கவேலு உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

;