tamilnadu

img

எகிறும் வெப்ப அலை! எதிர்கொள்வது எப்படி? டாக்டர் கு. கணேசன்

கடந்த சில வாரங்களாகத் தமிழகம் முழுவதிலும் கோடைகால வெப்பஅலை ஆக்ரோஷம் காட்டி வருகிறது. வெளியில் சென்றாலே அனல் காற்று முகத்தில்  அறைகிறது. எந்த ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் அக்னி காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயிலின் தாக்கம் பலமடங்கு அதிகரித்திருக்கிறது. அதனால் பலதரப்பட்ட வெப்ப நோய்களும் அதிகரித்துள்ளன.

கொளுத்தும் கோடை வெயில் வயது  வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கி்றது. அதிலும் முக்கியமாக, சாலையில் செல்லும் முதியோர்கள் திடீர் திடீரென்று மயங்கி விழும் செய்திகள் ஊடகங்களில் உலா வந்து மற்ற வர்களுக்கும் பீதி கொடுக்கின்றது. இந்தியா வில் இதுவரை 30,000 பேர் வரை வெப்பத்தாக்கு தலால் உயிரிழந்துள்ளதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தச் சூழலில் கோடை வெயில் கொடுக்கும் முக்கியமான உடல் பாதிப்புகளை யும் அவற்றைச் சமாளிக்கும் வழிகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

உடலில் ஏற்படும் நீரிழப்பு
தகிக்கும் வெயில் காரணமாக உடலில்  நீர்ச்சத்து குறைந்து, நீரிழப்பு ஏற்படுகிறது.  உடலுக்குத் தேவையான தாதுச்சத்துகள் குறைந்துவிடுகின்றன. இதனால், நாக்கு வறட்சி அடைந்து தாகம் அதிகரிக்கிறது. தொண்டை காய்கிறது. உடலில் அசதி  ஆட்கொள்கிறது. கண்கள் எரிகின்றன. கைகால் தசைகள் இறுக்கம் அடை கின்றன. முக்கியமாக, அடிவயிறு இழுத்துப் பிடிப்பதுபோல் இருக்கிறது. கெண்டைக்கால் தசைகள் அடிக்கடி இழுத்துக்கொள்கின்றன. சிறுநீர் செல்வது குறைந்து எரிச்சல் உண்டா கிறது.

நீர்க்கடுப்பு
கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தருகிறது. அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதும் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததும்தான் இதற்கு முக்கியக் காரணங்கள். குடிக்கும் தண்ணீரின் அளவு  குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்து விடும். இதனால் சிறுநீரில் வெளியேற வேண்டிய பல உப்புகள் படிகங்களாக மாறி சிறுநீர்ப்பாதையில் படிந்துவிடும். அப்போது நீர்க்கடுப்பு ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சனை சரியாகிவிடும். என்றாலும், அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால், சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று அல்லது சிறுநீரகக்கல் இருக்க வாய்ப்புள்ளது.

வெப்ப மயக்கம்
வெயிலின் தகிப்பு கடுமையாக இருக்கும்போது வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்கிறவர்களுக்கும் சாலையில் நடந்து செல்லும் வயதானவர்களுக்கும் உடலின் வெப்பம் 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும். இதற்கு ‘வெப்பத் தளர்ச்சி’ (Heat Exhaustion)  என்று பெயர்.

இந்த நேரத்தில் அவர்கள் நிழலுக்கு வந்து ஓய்வெடுத்துக்கொண்டு, போதிய அள வுக்குத் திரவ ஆகாரங்களைக் குடித்து விட்டால் தளர்ச்சி குறைந்துவிடும். தவறினால்,  திடீரென்று உடல் வியர்த்து மயக்கம் வந்து விடும். இது ‘வெப்ப மயக்க’த்தின் (Heat Syncope) விளைவு.

வயிற்றுப்போக்கும் டைபாய்டும்
கோடையில் சமைத்த உணவுகள் விரை வில் கெட்டுவிடும். அவற்றில் கிருமிகள் சீக்கி ரத்தில் வளர்ந்துவிடும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, காலரா, மஞ்சள்காமாலை போன்ற நோய்கள் வரும். மற்ற காலங்களை விடக் கோடையில் டைபாய்டு காய்ச்சல் வருவது அதிகம். சுகாதாரம் குறைந்த உணவும் தண்ணீரும்தான் டைபாய்டு வருவதற்கு முக்கியக் காரணங்கள்.

வேனல்கட்டியும் புண்களும்
கோடைக் காலத்தில் நம் உடலின் வெப்பத் தைக் குறைப்பதற்கு இயற்கையிலேயே அதிக அளவில் உடல் வியர்க்கிறது. அப்போது உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். இதனால், வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது.  குளித்து முடித்தபின் வியர்க்குரு பவுடர், காலமின் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். 

கொட்டும் வியர்வை காரணமாக சிலருக்குச் சருமத்தின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியக்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். வேனல் கட்டி  வரும். மற்ற வயதினரைவிட, குழந்தை களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் கோடைக்காலத்தில் அடிக்கடி சருமத்தில் புண்கள் வந்து சீழ் பிடிக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப் பூச்சுக் களிம்புகள் ஆகியவற்றைப் பயன் படுத்தினால், இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கலாம்.

சருமத்தில் எரிச்சல்
வெயில் கொளுத்தும்போது புற  ஊதாக்கதிர்களின் உக்கிரத்தைத் தாங்கமுடி யாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக் குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். இதன்  விளைவால் சருமத்தில் எரிச்சலும் வலியும் ஏற்படும். ‘வெப்பப் புண்’ (Sun Burn) என்று அழைக்கப்படும் இந்தப் பிரச்சனையை எளிதில் தடுத்துவிடவும் முடியும். வெயி லில் செல்வதற்கு முன்பாக, உடலில் வெளியே தெரியும் பகுதிகளில்  சன்ஸ்கிரீன் லோஷ னைத் தடவி, அரை மணி நேரம் கழித்துச் செல்வது, புற ஊதாக் கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும் எளிய வழி.

அதுமட்டுமல்லாமல், பருத்தி ஆடைகளை அணிவதும், சருமத்தை முழுமையாக மறைக்கக்கூடிய குளோஸ் நெக் மற்றும் முழுக்கை பருத்தி ஆடைகளை அணிவதும் சருமத்துக்குப் பாதுகாப்பு தரும் கவசங்கள்.

சூரிய ஒளி ஒவ்வாமை
உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை என்று இருப்பதுபோல், ஒரு சிலருக்கு சூரிய ஒளியே ஒவ்வாமையை உண்டாக்கும். இவர்கள் வெயிலுக்குச் சென்றுவிட்டால் போதும், உடலெங்கும் அரிக்கத் தொடங்கி விடும். சருமம் சிவந்து வட்ட வட்டமாகத் தடிப்பு கள் தோன்றும். அவற்றில் நீர் கோத்துக் கொள்ளும். இதைத் தொடர்ந்து சருமம் உரியும். ‘சோலார் அர்ட்டிகேரியா’ (Solar Urticaria)  என்று அழைக்கப்படும் இந்தத் தொல்லை யைத் தடுக்க ‘சன் பிளாக்’ லோஷன்களைப் பயன்படுத்த வேண்டும்.

வெப்ப அலைகளை வெல்வது எப்படி?
கோடை வெயிலை சமாளிக்கவும், வெப்ப நோய்கள் வராமல் தடுக்கவும் 3 லிருந்து  4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். ஏசி அறையில் வேலை பார்த்தாலும் இந்த  அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர் மற்றும் வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்களைக் குடிப்பதைவிட மோர், பதநீர், பழச்சாறு, பானகம், இளநீர் ஆகிய  இயற்கை பானங்கள் குடிப்பதை அதிகப் படுத்துங்கள். எலுமிச்சைச் சாற்றில் உப்பு  சேர்த்துக் குடிப்பதும், சர்பத் குடிப்பதும், இஞ்சி கலந்த மூலிகைத் தேநீர் அருந்துவ தும் நல்லது. தர்பூசணி, நுங்கு, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, கிர்ணி, மாதுளை போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள். வெயிலை எதிர்கொள்ள அற்புத  நிவாரணி வெள்ளரி. அதை இளம்பிஞ் சாகவோ, பழமாகவோ, பச்சடியாகவோ, சாலட்டாகவோ சாப்பிடுங்கள். கோடையில் மாம்பழம் வேண்டவே வேண்டாம்.

வெயில் காலத்தில் தினமும் இரு வேளை  குளிப்பதும் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதும் நல்லது.  வீட்டின் மொட்டை மாடி யில் ஓலைக் கூரையால் மேற்கூரை அமைப்பது  வெப்பத்தைக் குறைக்கும். வெளியில் செல்லும்போது தொப்பி/ கறுப்புக் குடை யோடும் தண்ணீர் பாட்டிலோடும்தான் செல்ல  வேண்டும். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயாளிகள், உடல்நலம் குறைந்தவர்கள் வெயிலில் அலைவது கூடாது. இருச்சக்கர வாகனங்களில் வெயிலில் அதிக நேரம்  பயணிப்பவர்கள் கண்களுக்குச் சூரியக்  கண்ணாடியை (Sunglass) அணிந்துகொள்ள லாம். கோடையில் ஜிம் போன்ற கடுமையான உடற்பயிற்சிகள் அதிகம் வேண்டாம்.

வெயில் காலத்தில்  குளிர்சாதனப் பெட்டியின் உபயோகத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். உடனுக்குடன் சமைத்துச் சாப்பிடுங்கள். தாகம் தணிக்க மண்பானைத் தண்ணீர் குடியுங்கள். காரம், மசாலா நிறைந்த  உணவுகள், மைதா உணவுகள், எண்ணெய்ப்  பலகாரங்கள், பேக்கரிப் பண்டங்கள், பாக்கெட்  உணவுகள், துரித உணவுகள், அசைவம் ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

இட்லி, இடியாப்பம், தயிர்ச்சாதம், மோர்ச்சாதம், கம்பங்கூழ்,  கேப்பைக்கூழ், வெங்காயப் பச்சடி, கீரைகள், பீட்ரூட், காரட், முள்ளங்கி, பாகல், தக்காளி, நூல்கோல், பீர்க்கை, புடலை ஆகியவை சிறந்த கோடை உணவுகள். இவற்றை அதிகப்படுத்துங்கள். வெளியிடங்களில் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிருங்கள். வெயிலுக்கு இதம் தருவது வீட்டுச் சாப்பாடுதான் என்பதை உணருங்கள். நலம் தரும் பழங்களும் நிழல் தரும் மரங்களும் கோடை வெயிலைச் சமாளிக்க உதவும் மிக முக்கிய அரண்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

;