tamilnadu

img

மருத்துவப்படிப்பில் சமூக அநீதிக்கு எதிர்ப்பு : தமிழகம் ஒன்றுதிரண்டு நீதி கேட்பது வரவேற்கத்தக்கது

சென்னை:
அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து  தமிழ்நாடு  ஒன்றுதிரண்டு நீதிமன்றத்தில்நீதி கேட்பது வரவேற்கத்தக்கதாகும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிதெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூகநீதிக்கு ஆபத்து மத்திய அரசாலோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகள் மூலமோ ஏற்படும்போதெல்லாம் - எல்லோரும் தனித்தனி கட்சிகள்தான் என்றாலும், இந்த சமூகநீதிப் பறிப்பை எதிர்க்கும் நிலைப்பாட்டில் ஓர் குரல், ஓர் அணி என்றே திரளும் உறுதிப்பாடு தமிழ்நாட்டையே இப்பிரச்சனையில் இந்திய நாட்டிற்கு உயர்த்திக் காட்டுகிறது.அண்மையில் மத்திய தொகுப்பில் மருத்துவப் படிப்பு இடங்களில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பில், கடந்த 3 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு அமலானகாலத்திலிருந்து அண்மை வரை, பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு வெறும் பூஜ்ஜியமாக இருப்பது எவ்வளவு பெரிய சமூக அநீதி? 

இதனை நாம் சுட்டிக்காட்டியநிலையில், தி.மு.க.வின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்ததுடன், உச்சநீதி மன்றத்தில் நீதி கேட்டு உடனடியாக வழக்கும் தொடர்ந்தார்.  மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதிமுக அரசும் உச்சநீதிமன்றத்தில் இப்போது  வழக்குத் தொடுத்து, இப்பிரச்சினையில் சமூகநீதி கேட்க முன்வந்திருப்பதும் வரவேற்கத்தக்கதேயாகும்.கட்சிகளால் பிரிந்திருந்தாலும், சமூகநீதிக்குப் போராடுவதில் தமிழ்நாடு ஓர் முகம், ஓர் குரல், ஓர் அணி என்று இருப்பது - இந்த மண் எப்போதும் பெரியார் மண்தான், சமூகநீதி மண்தான் என்பதை உலகிற்குப் பிரகடனப்படுத்துகிறது. வடபுலத்தில் உள்ள லாலுபிரசாத் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.), உ.பி.யின் அகிலேஷ் யாதவ் தலைமை தாங்கும் சமாஜ் வாடி கட்சியும் கூட குரல் கொடுக்கமுன்வந்துள்ளது. ‘நீட்’  தேர்வை ரத்து செய்து, பழையபடி, அந்தந்த மாநில நுழைவுத்தேர்வு முறைகளையே மீண்டும் அனுமதித்தால், நீண்ட கால கண்ணோட்டத்தில் இது வெகுவான பலன் அளிப்பது உறுதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;