tamilnadu

img

வள்ளியூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம்...சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட டிஜிபிக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை:
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல்அருகே உள்ள கப்பியறை கிராமத்தைச் சேர்ந்த லீலாபாய் என்பவரை கூடங்குளம் காவல்துறை ஆய்வாளர் அடித்து, துன்புறுத்தியதில் மரணமடைந்துள்ளார். இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்வதுடன், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும்,  பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமெனவும் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வியாழனன்று, தமிழக காவல்துறைத்தலைவருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:

கப்பியறை கிராமத்தைச் சேர்ந்த லீலாபாய் என்பவரை விசாரணைக்காக வள்ளியூர் காவல்நிலையத்தைச் சார்ந்தகாவலர்கள் 17.8.2019 அன்று அழைத்துச் சென்றுள்ளனர். 18.8.2019 அன்று லீலாபாய் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கூறியுள்ளனர். இதுகுறித்த விசாரணையில் கூடங்குளம் ஆய்வாளர் அசோகன் என்பவர் லீலாபாயை காவல்நிலையத்தில் வைத்து அடித்து, துன்புறுத்தி, லத்தியால் குத்தியதில் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக வள்ளியூர் நீதிபதிக்கு வள்ளியூர் காவல்நிலைய காவலர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் மேற்கண்ட தகவல்களையும் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.எனவே, தாங்கள் உடன்தலையிட்டு, இவ்வழக்கை கொலை வழக்காக பதிவுசெய்து, கூடங்குளம் ஆய்வாளர் அசோகன் மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும், இவ்வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகளை தண்டிப்பதற்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;