tamilnadu

img

கொரோனா பாதிப்பு புதுச்சேரி மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குக! பிரதமருக்கு டி.கே.ரங்கராஜன் எம்.பி., கடிதம்

சென்னை,ஏப்.2- கொரோனா பாதிப்பினால் சிரமப்படுகிற புதுச்சேரி பிரதேச மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளையும், கூடுதல் நிவாரணங்களையும் வழங்கி, அந்த மக்களின் துயரைப் போக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்  அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கு வந்திருக்கிற நிலைமையில் பிரதமரும், நிதியமைச்சரும், மாநில முதல்வரும் பல்வேறு நிவாரணங்களை அறிவித்திருக்கின்றனர். இந்த நிவாரணங்கள் புதுச்சேரி மக்களுக்கு சென்றடையாததால் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தச் சூழலில், நிரந்தரப் பணியில் இருப்பவர்கள் ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டாலும், ஒப்பந்த ஊழியர்கள், விவசாயத் தொழிலாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள், கடைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்வோர் ஆகியோர் மிகக் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருக்கக் கூடிய வங்கிக் கணக்குக்கு நேரடிப் பணமாற்றம் ஆகிய ரூ. 2 ஆயிரம் முழுவதும் மக்களைச் சென்றடையவில்லை. போதுமான தாகவும் இல்லை. பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வெளியே வர முடியாமலும் சிரமப்படுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் கீழ்க்கண்ட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்க ளுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும். அவற்றை அரசுப் பணியாளர்கள் மூலமும், சிறப்பு தன்னார்வலர்கள் மூலமும் வீடுகளுக்கே கிடைக்கச் செய்ய வேண்டும். மத்தியத் தொகுப்பிலிருந்து புதுவைக்குப் பெற வேண்டிய அரிசி, தானியங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும். மீதித் தேவையை அரசு கொள்முதல் மூலமாக விவசாயிகளிடம் வாங்க வேண்டும். தொழில் முதலாளிகள், சிறு நிறுவனங்கள் ஆகியவை பணியாளர்களுக்கு உடனடியாக முழு சம்பளத்தையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

வயதானவர்கள், பென்சன் வாங்குவோர் மற்றும் நலிவுற்ற பகுதியினருக்கு அண்டை மாநிலங்களில் வழங்குவதைப் போல் உணவு உள்பட அனைத்து உதவிகளையும் அவர்கள் வீடுகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். இந்தக் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடுகிற மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் ஆகியோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதையும், கூடுதல் நிதியுதவி செய்வதையும் அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். புதுவை யூனியன் பிரதேசத்தில் பசி மற்றும் பிற நெருக்கடிகளாலும் மக்களுக்கு பெருந்துயரம் ஏற்படுவதிலிருந்து காப்பதற்கு மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாகச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கடிதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை யூனியன் பிரதேச  செயலாளர்  ஆர்.ராஜாங்கம், புதுவை பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோருக்கு அனுப்பினார்.

;