tamilnadu

img

தோழர்கள் திருப்பூர் சத்தியமூர்த்தி, கோவில்பட்டி பால்வண்ணம் மறைவு.... சிபிஎம் மாநில செயற்குழு இரங்கல்....

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தோழர் சத்தியமூர்த்தி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினரும், 50 ஆண்டுகளுக்கு மேலாக அப்பழுக்கற்ற  பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரருமான  தோழர் ப.கு.சத்தியமூர்த்தி கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 3.5.2021 அதிகாலை  காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.  அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு செவ்வஞ்சலி செலுத்துகிறது. தோழர் சத்தியமூர்த்தி (75) 1989-90 களில் கட்சியின் ஒன்றுபட்ட பல்லடம் தாலுகா கட்சியின் செயலாளராக 23 ஆண்டுகளும், ஒன்றுபட்ட கோவை மாவட்டக்குழு உறுப்பினராகவும், திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்டு தோழர்.கே.சி.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பயணத்தில் பங்கேற்று இளைஞர்களை திரட்டியவர்.பல்லடம் பகுதி கிராமங்களின் சாதாரண மக்கள் அல்லும் பகலும் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவரது வீட்டின் கதவுகளை உரிமையோடு தட்டுவார்கள். விவசாயிகள் நலன்களுக்காகவும் விசைத்தறி தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், விசைத்தறி தொழில் பாதுகாப்பிற்கும் பாடுபட்டவர்.சிஐடியு தொழிற்சங்கங்களிலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகளிலும்  பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர். பல்லடம் நகர்மன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர்.அவருக்கு  சொர்ணலட்சுமி என்ற மனைவியும்,  கவிதா என்ற மகளும், நாகேந்திரன்  என்ற மகனும் உள்ளனர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தோழர் பால்வண்ணம்
தோழர் பால்வண்ணம்  (75) உடல்நலக்குறைவு காரணமாக அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மே 2ஆம் தேதிகாலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ
னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  செவ்வஞ்சலி செலுத்துகிறது. அவர் 1972 - 73 காலத்தில், வங்கிப் பணியில் சேர்ந்ததிலிருந்து நடுத்தரவர்க்க ஊழியர்கள் மத்தியில் கட்சியை கட்டுகிற பணியை மிகச் சிறப்பாக ஆற்றி வந்தார். ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்திலும், பின்னர் தூத்துக்குடி மாவட்டத்திலும், அதன் பிறகு சென்னைக்கு இடம் பெயர்ந்தவர் தென் சென்னை மாவட்டத்தில் கட்சி அரங்கிலும், தொழிற்சங்க அரங்கிலும், மிகச் சிறப்பான பணிகளை ஆற்றினார்.

பாரத ஸ்டேட் வங்கி ஊழியரான அவர் வங்கி ஊழியர் இயக்கத்தில் சமரசம் இல்லாமல் போராடக்கூடிய அமைப்புகளை உருவாக்கினார். பாரதி புத்தகாலய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.  கலை இலக்கிய ஈடுபாட்டின் காரணமாக தமுஎகச-வில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றினார். எப்பொழுதும் கட்சி ஊழியர்களோடு மிக நெருக்கமான தொடர்பில் இருந்தார்.  புதிய புத்தகங்களை வாசிப்பது, நல்ல புத்தகங்களை தோழர்கள் படிக்க பரிந்துரைப்பது ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.  முன்னுதாரணமான முறையில் தோழர்களை  உற்சாகப்படுத்தி கட்சிக்கு கொண்டு வருவது என்ற பணியைஅவர் கடைசி மூச்சு வரை திறம்பட செய்து வந்தார். அவரை இழந்து வாடும் அவரது மகள் ராணிக்கும், அவரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் கட்சியின் மாநில செயற்குழு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

;