tamilnadu

img

மின்சாரம் தாக்கி கை, கால்களை இழந்தவருக்கு செயற்கை கை, கால் பொருத்தி கோவை அரசு மருத்துவமனை சாதனை!  

கோவையில் மின்சாரம் தாக்கி கை,கால்களை இழந்த தொழிலாளிக்கு செயற்கை கை,கால்களை பொருத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.  

கோவை அன்னூர் பகுதி வேப்பம்பள்ளம் குமரன் குன்றை சேர்ந்தவர் சுபாஷ் (22). இவர் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார விபத்தில் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்தார். இவரின் பெற்றோர்களும் கட்டிட பணிக்கு சென்று வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிற நிலையில், அனைத்து தேவைகளுக்கும் மற்றவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இருந்தார்.  

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார். இதனையடுத்து கோவை மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வசந்தகுமார் மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா அவர்களிடம் சுபாஷுக்கு செயற்கை கை கால் பொருத்தும்படி ஆவன செய்ய உத்தரவிட்டார்.  

கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் நிர்மலா மற்றும் முட நீக்கியல் இயக்குநர் மருத்துவர் வெற்றிவேல் செழியன் தலைமையில் செயற்கை அங்க வடிவமைப்பாளர்கள் பாலச்சந்தர், ஆனந்த்பாபு, கோகுல்ராஜ், ஜெகன் ஆகியோர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு தமிழக அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எடை குறைந்த இரு செயற்கை கைகள் மற்றும் இரு செயற்கை கால்கள் இலவசமாக பொருத்தப்பட்டது.  

மேலும் இவருக்கு மனப்பயிற்சி, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவை முடநீக்கியல் மருத்துவ நிபுணர்கள்,மனநல மருத்துவ நிபுணர்கள்,உடற்பயிற்சி நிபுணர்களால் வழங்கப்பட்டன. இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்தவருக்கு தமிழ்நாட்டில் இதுவே முதன் முறையாக விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த செயற்கை அங்கங்களை தனியாரிடம் தருவிப்பதற்கு குறைந்தபட்சம் ஆகும் செலவு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவாகும். ஆனால் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இரு செயற்கை கைகள் மற்றும் இரு செயற்கை கால்கள் இலவசமாக பொருத்தப்பட்டன. தற்போது சுபாஷ் இயல்பாக தனது வேலைகளை செய்யும் அளவிற்கு உடல் நலம் மற்றும் மனநலம் தேறிவிட்டார்.

இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தார். முன்னதாக வெற்றிகரமாக இந்த சிகிச்சையை மேற்கொண்ட கோவை அரசு மருத்துவ மனையின் மருத்துவ குழுவினருக்கு கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலரும் பாராட்டினர். 

;