tamilnadu

img

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்போம்!

கோவை, மே 6–ஜெயலலிதா அரசியலில் எதிரியாக இருந்தாலும், அவர் அனைவருக்கும் முதல் அமைச்சராக இருந்தவர். அத்தகையவரின் மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வருவேன். அவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சிறையில் அடைப்போம் என சூலூர் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா. பழனிச்சாமி போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை சூலூர் தொகுதியில் நடைபெற்ற தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக, வாகாராயன் பாளையத்தில் அவர் பேசுகையில், கலைஞர் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது. மத்தியில் சர்வாதிகாரத் தன்மையுடன் நடைபெறும் மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் விதத்தில் கடந்த 18 ஆம் தேதி வாக்களித்து இருக்கின்றீர்கள். அதேபோல் வரும் மே 19 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலிலும் திமுகவிற்கு வாக்களித்து எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதிமுக ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், பிரதமர் மோடியால் முட்டு கொடுத்து அவரது தயவுடன் இந்த ஆட்சி நீடிக்கின்றது என்றார். 

“தற்போது 97 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக கூட்டணியில் இருக்கின்றனர். இடைத்தேர்தலில் 18 சட்டமன்ற தொகுதியிலும் திமுகதான் வெற்றி பெறப் போகின்றது. 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக அணிதான் வெற்றி பெறும். 234 உறுப்பினர்களில் 118 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே ஆட்சி நீடிக்க முடியும். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், திமுக அணியில் 119 உறுப்பினர்கள் இருப்பார்கள். எனவே, அதிமுக ஆட்சி நிலைக்க எந்த வாய்ப்பும் இல்லை. அதிமுக அனைத்து தொகுதியிலும் தோற்கப்போகிறது என்று தெரிந்துதான் குழப்பம் ஏற்படுத்த 3 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் என்ற சதித் திட்டம் போட்டுள்ளனர். ஆனால் நாம் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். ஆகவே, தேர்தல் முடிவுகளுக்கு பின் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது. ஜெயலலிதா மரண விவகாரத்தை முதன்முதலில் வெளியில் கொண்டு வந்தவர் ஓ.பி.எஸ்.தான். சிபிஐ விசாரணை தேவை என கேட்டார். ஆனால் இப்போது துணை முதல்வர் பதவி கிடைத்தவுடன், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையில் அவர் ஆஜராக மறுக்கிறார். ஆறு முறை சம்மன் அனுப்பியும் ஓ.பி.எஸ். விசாரணைக்கே போகவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் முதல் வேலை ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பேன் என்றும் ஸ்டாலின் தமது உரையில் கூறினார். 

மேலும், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் போல் இந்தியாவில் எங்கும் நடைபெறவில்லை. பொள்ளாச்சியில் கடந்த 7 வருடமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்துள்ளன. பெரம்பலூர் ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் புகார்கள் குவிகின்றது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காமல், இதுகுறித்த புகார் கொடுத்த வக்கீலைப் பிடித்து உள்ளே போட்டு இருக்கின்றனர். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இந்த ஆட்சியை அகற்றுவதற்கான வாய்ப்பை சூலூர் தொகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொங்கலூர் நா. பழனிச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறவைக்க வேண்டும்” என்றும் மு.க. ஸ்டாலின் பேசினார். 

;