tamilnadu

img

மக்களுடன் உயிரோட்டமான தொடர்பை புதுப்பிப்போம்; வீழ்ச்சியிலிருந்து உறுதியுடன் மீள்வோம்

கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் கொடிய ஆட்சிக்கு எதிரான மக்களது உணர்வுகளை தன்வசப்படுத்துவதில் பல்வேறு சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு சாதித்துக் கொண்டது பாரதிய ஜனதா கட்சி என,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழு கூறியுள்ளது. 

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைமையிலான இடது முன்னணிக்கு தேர்தலில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவிலிருந்து மீள்வோம் என்றும், மக்களுடன் உயிரோட்டமான தொடர்பினை மீண்டும் புதுப்பித்து வலுப்படுத்தி உறுதியுடன் முன்னேறுவோம் என்றும் கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழு உறுதியேற்றுள்ளது. 

மேற்குவங்கத்தில் இடது முன்னணிக்கு தேர்தலில் வீழ்ச்சி ஏற்பட்டது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்கமாநிலக்குழு ஒரு பூர்வாங்க ஆய்வினை  மேற்கொண்டது. அதன் விவரம் வருமாறு:

புல்வாமா மற்றும் பாலக்கோட் நிகழ்வுகளைத் தொடர்ந்து பாஜகவினால் பரப்பப்பட்டபோலி தேசியவாத பிரச்சாரமும், மோடிக்கு எதிரான கட்சிகளிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையும் மேற்கு வங்க வாக்காளர்கள் மனதில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தின.இத்துடன் மக்கள் மத்தியில் எதேச்சதிகாரம், ஊழல், அராஜகம், வாழ்வாதாரங்களுக்கான போராட்டம், வேலையின்மைப் பிரச்சனை போன்றவற்றை மறக்கச்செய்யும் விதத்திலும், அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் ஓர் ஆய்வினை மேற்கொள்ள முடியாத விதத்திலும்  மதவெறி அரசியல் சிந்தனை களும் மிகவும் திட்டமிட்டு விதைக்கப்பட்டன.

இத்துடன் ஊடகங்கள் மத்தியில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே மட்டும்தான் போட்டி என்கிற ரீதியிலும், மாநி லத்தில் இடதுசாரிக் கட்சிகளோ அல்லது வேறெந்தக் கட்சியுமோ இல்லை என்கிற ரீதியிலும் மிகவும் திட்டமிட்ட முறையில் பிரச்சா ரம் மக்களிடையே வேரூன்றப்பட்டது. தேர்தல் வீழ்ச்சிக்கு இவை மிகப்பெரிய காரணங்கள் என்று கட்சியின் மாநிலக்குழு கருதுகிறது.மேலும், இவ்வாறான அதீதமான மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அரசியல் நிலைமைகள் மாறியிருந்த நிலையில் இவை குறித்தும், தேர்தல் தொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்ட நிலைப்பாடு குறித்தும் மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் விஷயங்களை எடுத்துச் செல்லாதது, மக்களுக்கும் கட்சிக்கும் இடையே ஓர் இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்றும் மாநிலக்குழு சுட்டிக்காட்டி இருக்கிறது.
2018 பஞ்சாயத்துத் தேர்தல்களின்போது மிகவும் விரிவான அளவில் நடைபெற்ற திரிணாமுல்லின் அராஜக நிலைமை, அப்போது மாநிலதேர்தல் ஆணையமும், காவல்துறையும் மற்றும்நிர்வாகமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலைமை, திரிணாமுல் கட்சி முழுமையாகவாக்குகளைச் சூறையாடிச் சென்றமை மக்கள் மனதில் கவலை தரும் அம்சங்களாக இன்றளவும் எரிந்து கொண்டிருக்கின்றன. பாஜக, இதனைத் தங்களுக்குச் சாதகமாக மிகவும் தந்திரமாக,மிகவும் ஆழ்ச்சிகரமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

பாஜக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராகத் தொடர்ந்து தன் பலத்தைக் காட்டும் விதத்தில் கூர்மையான ஆயுதங்களுடன் “ராம நவமி” போன்ற பண்டிகைக் காலங்களில் ஊர்வலங்கள் நடத்தி வந்ததும், பாஜகவின் மாநிலத் தலைவர்களையும் மற்றும் மத்திய அரசாங்கத்திலிருந்து வரும் தலைவர்களையும் பேச வைத்ததும்,  திரிணாமுல் காங்கிரசின் அடாவடித்தன மான நடவடிக்கைகளை ஒழித்துக்கட்ட பாஜகவினால் மட்டுமே முடியும் என்ற உணர்வை மக்களிடையே தோற்றுவித்தது. இத்துடன் நாடு தழுவிய அளவில் பாஜகவிற்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களும்,  பாஜக மிகப் பெரிய அளவில் பணத்தை வாரி 
இறைத்ததும் பாஜகவின் பக்கம் மக்களை நெட்டித்தள்ள உதவின என்று மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, திரிணாமுல் காங்கிரசின் அராஜக ரவுடித்தன நடவடிக்கைகளை கடந்த எட்டு ஆண்டுகாலமாகவும் சென்ற பஞ்சாயத்துத் தேர்தலின்போதும் இடதுசாரிகள் எதிர்த்து வந்த போதிலும், ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவா ரங்கள் இவை அனைத்தையும் தங்களுக்குச் சாதகமாக மிகவும் தந்திரமானமுறையில் மாற்றிக்கொண்டன என்றும் மாநிலக்குழு சுட்டிக்காட்டி இருக்கிறது.

இது ஒரு பூர்வாங்க அறிக்கை மட்டுமே என்றும், கட்சியின் அனைத்துத்தரப்பினரிடமும் மிகவும் ஆழமானமுறையில் ஆய்வினை மேற்கொண்டபின்னர், ஒரு விரிவான அறிக்கை அளிக்கப்படும் என்றும் மாநிலக்குழு கூறியிருக்கிறது.இந்த நிலைமை நிலையானது அல்ல என்றும், வரவிருக்கும் காலங்களில் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும், ஜனநாயக உரிமைகள் மீதும் ஆட்சியாளர்களால் தாக்குதல்கள் ஏவப்பட இருக்கின்றன என்றும் மாநிலக்குழு கூறியிருக்கிறது. எனவே, மக்களின் நலன் களைக் காத்திட இயக்கங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் மாநிலக்குழு சுட்டிக்காட்டி இருக்கிறது.  இவ்வாறு இயக்கங்களைக் கட்டும் சமயத்தில் உள்ளூர் மக்களின் பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் மாநிலக்குழு சுட்டிக்காட்டி இருக்கிறது. மாநிலம் முழுதும் மக்களிடையே உயிரோட்டமான தொடர்பினைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும், கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் தங்கள் வேலைமுறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மாநிலக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது.(ந.நி.)

;