tamilnadu

img

இன்ஸ்ட்ருமென்டேசன் லிமிடெட் நிறுவனத்தை கேரள அரசு வாங்குவதை தடுக்க முயற்சி ரூ.600 கோடி கேட்கிறது மத்திய அரசு

கஞ்சிக்கோடு, செப்.29- மத்திய பொதுத்துறை நிறுவனமான இன்ஸ்ட்ருமென்டேசன் லிமிடெட் நிறுவனத்தை வாங்க கேரள அரசு முன்வந்துள்ள நிலையில் காலம் கடத்தி அதை தடுக்கும் முயசியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாநில அரசு வாங்கிய நிலத்தின் விலையாக ரூ.600 கோடி வழங்குமாறு கேரள தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிலம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்ட பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை நிறுவனம் கையகப்படுத்தலை தாமதப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது. நில மதிப்பு அடிப்படையில் ரூ.64 கோடியை வழங்கி கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.   கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்ஞிக்கோடில் மத்திய அரசால் 1974இல் செயல்படத் தொடங்கியது இன்ஸ்ட்ருமென்டேசன் லிமிட்டெட் நிறுவனம். அனல் மற்றும் அணு மின் நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், உருக்கு, ரசாயன தொழிற்சாலைகளுக்கு தேவையான வால்வுகள் தயாரிக்கும் நாட்டின் ஒரே பொதுத்துறை நிறுவனம் இதுவாகும்.   இதன் தாய் நிறுவனம் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் செயல்பட்டு வந்தது. ரூ.163 கோடி நட்டம் ஏற்பட்டதாக கூறி அந்த நிறுவனம் மூடப்பட்டது. எனவே, பாலக்காடு ஆலையை சுயேச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து அன்றைய மக்களவை உறுப்பினர் எம்.பி.ராஜேஷ் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதில் இந்த நிறுவனத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். அதன் அடிப்படையில் பணம் கொடுத்து நிறுவனத்தை மாநில அரசுக்கு சொந்தமாக்க பினராயி விஜயன் அரசு நடவடிக்கை எடுத்தது. 1966இல் கஞ்ஞிக்கோடு ஆலை தொடங்க 120 ஏக்கர் நிலத்தை மாநில அரசு இலவசமாக வழங்கியது. இந்த இடத்திற்கு இப்போது ரூ.600 கோடி கொடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுள்ளது. சந்தை விலை மற்றும் தொழிலாளர்களின் நலன் அடிப்படையில் ஏற்கனவே ரூ.64 கோடிக்கு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிறுவனத்தை மாநில அரசு ஏற்பதை பாஜக எதிர்த்து வருகிறது. தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என அக்கட்சியின் கேரள நிர்வாகிகள் கொடுத்து வரும் அழுத்தமே தற்போது புதிய நிபந்தனை விதிக்க காரணமாகும்.

;