tamilnadu

img

ஜனநாயக விரோதம் : கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் எதிர்ப்பு

திருவனந்தபுரம்:
வரலாற்றில் முதல் முறையாக மாநில அரசின் கடன் பெறுவதற்கான பத்திரங்களுக்கு நிபந்தனை விதிக்கப்படுவதும், மத்திய அரசு கூறுவதுபோல் செலவிட வேண்டும் என்பதும் ஜனநாயக விரோதம் என கேரள நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

பதினைந்தாவது நிதிக்குழு தொடாமல் விட்ட உத்தரவுதான் கூடுதல் கடன் என்கிற பெயரில் இப்போது அமலாகிறது. மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளில் பெரும்பாலானவற்றை பின்பற்றுவதில் கேரளத்திற்கு சிரமம் இல்லை. நிபந்தனைகளை சம்மந்தப்பட்ட துறைகள் ஆய்வு செய்து கொள்கை ரீதியான முடிவு எடுக்கும்.

1) தேசிய அளவிலான ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்த வேண்டும். (இதை அமல்படுத்த கேரளம் தயாராக உள்ளது)  

2) தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எளிமையாக்கப்பட வேண்டும் (கேரளத்தின் ரேங்கிங் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளப் பட்டது).

3) நகர் பகுதிகளில் கட்டிட வரிக்கு தரை வீதத்தை நிர்ணயிப்பதன் மூலம் அவ்வப்போது வரியை அதிகரிக்க வேண்டும். (கேரளத்தில் மாடிகளுக்கு கட்டணம் உள்ளது. அதை உயர்த்தும் செயல்முறை முடக்கப்பட்டுள்ளது).

4) குடிநீர், வடிகால் மற்றும் கழிவுகள் ஆகியவற்றிற்கான பயனர் கட்டணம் தரை விகிதத்தில் நிர்ணயிக்கப்பட்டு பணவீக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவு சிக்கலை உருவாக்கும்.

5) மின் துறைக்கான உத்தரவுகளுக்கும் கொள்கை முடிவு தேவை.

மத்திய அரசின் நிபந்தனைகள் புதிய முன்னுதாரணத்தை உருவாக்குவதாகும். சாதாரண நிலையில் கிடைத்து வந்த 3 சதவிகித கடன் மீதும் எதி்ர்காலத்தில் நிபந்தனைகள் திணிக்கப்படலாம். கடன் தொகையும் வட்டியும் சேர்த்து மாநிலம் திருப்பிச் செலுத்துகிறது. இது மாநிலத்தின் விருப்பங்களுக்கு ஏற்ப செலவிடப்படுகிறது. மத்திய அரசு கூறுவது போல்தான் செலவிட வேண்டும் என கூறுவது ஜனநாயக விரோதமாகும். கேரளம் ரூ.6000 கோடி கடன் கேட்ட நிலையில் அதற்கு 9 சதவிகிதம் வட்டியை வங்கிகள் கேட்டன. ரெப்போ விகிதத்தில் மாநிலங்களின் பத்திரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வாங்க வேண்டும். பெரும்பாலான நாடுகள் இதைத்தான் செய்கின்றன என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;