tamilnadu

img

கொரோனா ஊரடங்கிலும் கொடூரத்தாக்குதல்கள் ஆணவப்படுகொலை, சாதிய வன்கொடுமைகள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை:
கொரோனா ஊரடங்கு  நேரத்திலும்  தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மற்றும்  பழங்குடியின மக்கள் மீது  கொடூரமான தாக்குதல்கள், படுகொலைகள், பாலியல் வல்லுறவு, ஆணவப்படுகொலை, சொத்துக்கள் அழிப்பு, தாக்குதல்கள் என  தொடர்கின்றன. இத்தகைய வன்கொடுமைகள் மீது தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. வன்கொடுமை தடுப்புச் சட்டம், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள், மாநில, மாவட்ட அளவிலான தீண்டாமை ஒழிப்பு கமிட்டிகள், சிறப்பு நீதிமன்றங்கள் என பல நிர்வாக அமைப்புகள் இருந்த போதும் இம்மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளன.கொரோனா தொற்று கொடுந்துயர காலத்திலும் கூட இம்மக்கள் மீதான தாக்குதல்கள் நின்றபாடில்லை என்பது மட்டுமல்ல,  பல மடங்கு அதிகரித்துக் கொண்டும் உள்ளன.

கொரோனா பாதிப்பு துவங்கிய கடந்த மார்ச் மாதம் முதல் இப்போது வரையில் உள்ள குறுகிய காலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள பல்வேறு  தாக்குதல் விபரங்களை கீழே தொகுத்து அளித்துள்ளோம்.
இக்காலத்தில் சுமார் 9 கொலைகள், 3 ஆணவப் படுகொலைகள், பல பாலியல் வன்முறைகள், 60க்கும் மேற்பட்ட தாக்குதல்கள், சொத்துகள் அழிப்பு, அவமானப்படுத்துதல் போன்றவை நடந்துள்ளன. அதன் விபரங்களையும் கீழே தந்துள்ளோம்.  இவை, நடந்த மொத்த வன்கொடுமைகளின் ஒரு பகுதியே.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிட்டு குரலெழுப்பிய சம்பவங்களை மட்டும் கீழே அளித்துள்ளோம்.  இவற்றின் மீது சில இடங்களில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு  வழக்கு பதிவுசெய்துள்ளனர்.  குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால் பெரும்பகுதியான  இடங்களில் காவல்துறையினர்  உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி, மிகுந்த வற்புறுத்தலுக்கு பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன  என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

கொலைகள்
1. தூத்துக்குடி மாவட்டம், உடைய குளம் பலவேசம் (SC) என்பவர் சண்முகசுந்தரம் (BC) என்பவரிடம் பத்திரத்தை அடகு வைத்து 40 ஆயிரம் வட்டிக்கு வாங்கி அசலையும் வட்டியையும் கொடுத்துவிட்டார். பத்திரத்தை திருப்பி கேட்டதற்காக பலவேசமும், அவரது மருமகனும் 07.05.2020 அன்று படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2.கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் மேலப்பாளையூர் கிராமம் ராஜூ மற்றும் இருவர் (SC) மருந்துக் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது அப்பகுதி MBC இளைஞர்களில் சில சமூகவிரோதிகள் தாக்கியுள்ளனர். இதில் ராஜூ மரணமடைந்துள்ளார். மற்ற இருவர் மருத்துவ மனையில் உள்ளனர்.

3.கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி வட்டம், ஆனந்தா நகர், காந்தி காலனியில் வினோத் (SC) என்பவரை கடந்த 2.5.2020 அன்று ஜெனிஸ்டன் (BC) என்பவர் கத்தியால் குத்தியதில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

4. சேலம் மாவட்டம், ஓமலூர் புதுக்கடை காலனியைச் சேர்ந்த விஷ்ணுப்பிரியன் (SC) என்பவரை கடந்த 8.5.2020 அன்று செந்தில்குமார் (BC) உள்ளிட்ட வன்கொடுமை கும்பல் ஊருக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். பலருக்கும் படுகாயங்களையும் ஏற்படுத்திவிட்டனர்.

5.நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகரில் 29.5.2020 அன்று சிஎம் மருத்துவமனையில் (SC) பெண் பிரியதர்ஷினி என்ற  செவிலியர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

6. திருப்பூர் மாவட்டம், அந்தியூர், வாகைமரத்து கொடிக்கால் கிராமம் கார்த்திகா (SC) என்பவரை புகழேந்தி (BC) என்பவர் காதலிப்பதாக ஏமாற்றி, புகைப்படங்கள் எடுத்து, வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதால் கார்த்திகா கடந்த 13.05.2020 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

7. விழுப்புரம் மாவட்டம், சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பால்முருகன் (SC) என்பவரை கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் ரெட்டிக்குப்பம் என்ற கிராமத்தில் MBC பிரிவில் சில சமூகவிரோதிகள் கொலை செய்து, மின்சார ஒயர் மீது வீசி விட்டு சென்றுள்ளனர்.

8.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர் தனியார் அடுக்ககத்தில் (apartment) இரவுக்காவலராக பணிசெய்து வந்த நடராஜன்(SC) 25.04.2020 அன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்துள்ளார்.

9.தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் நகர் மணி(SC) என்பவர் மீது திருட்டு குற்றம் சாட்டி காவலர்கள் தாக்கிய நிலையில் அவரது சடலம் 10.06.2020 அன்று தேவாரி ஆத்தங்கரையில் தூக்கு மாட்டிய நிலையில் கிடந்தது.

பாலியல் வல்லுறவு குற்றங்கள்: ( பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை குறிப்பிடவில்லை) 
1. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம் தியாகரசனபள்ளியை சேர்ந்த  பெண்ணை (SC)  13.05.2020 அன்று ரமேஷ், மது, ராஜா (BC) ஆகியோர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.

2. மதுரை மாவட்டம், எருவார்பட்டி கிராமம் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை (SC), போதுராஜா (BC) என்பவர் பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.

3. திண்டுக்கல் மாவட்டம் பெரியார் நகரைச் சேர்ந்த 19 வயது SC பெண்ணை  கே. ராமநாதபுரத்தைச் சேர்ந்த  ரவிக்குமார் (BC)என்பவர் காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டான்.

4. விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டம், கோட்டைக்கரை கிராமத்தில் சதீஷ் (MBC) என்பவர், 18 வயதுக்கு குறைவான பெண்ணை  (SC மைனர்)  திருமணம் செய்து கொள்வதாக கூறி  கர்ப்பமாக்கி ஏமாற்றியுள்ளார்.

சாதி ஆணவப்படுகொலைகள்-சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் மீது தாக்குதல்கள்
1. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், மொரப்பன் தாங்கல் கிராமம், ஒட்டர் சமூகத்தைச் சார்ந்த சுதாகர் என்பவரை, இதே வட்டம்  ஒண்டிக்குடிசை கிராமம் மூர்த்தி(BC) என்பவரின் மகள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் 29.03.2020 அன்று சுதாகரை இரும்பு கம்பியால் அடித்து  கொலை செய்யப்பட்டுள்ளார்.

2. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் இடையவலசை கிராமம் சாவித்திரி(BC) தோப்புக்கொல்லை கிராமம் விவேக்(BC) இருவரும் திருமணம் செய்து கொள்ள 07.06.2020 அன்று கோயம்புத்தூர் செல்லும் வழியில் குளித்தலை காவலர்கள் வழிமறித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் 11.6.2020 அன்று சாவித்திரியை அவரது பெற்றோர்கள் கொலைசெய்துள்ளனர்.

3. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் கிளியூர் கிராமம் இளங்கோவன் (SC) என்பவரும், பூவனூர் கிராமம் சுகன்யா(MBC) என்பவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டனர். இதனால் ஜூன் 12 அன்று 150 க்கும் மேற்பட்ட  இளைஞர்கள் MBC, SC குடியிருப்பிற்குள் தாக்குதல் நடத்த சென்றுள்ளனர். அங்கிருந்த காவல்துறையினர் தடுக்கவே அவர்களைத் தாக்கியுள்ளனர். பின்னர் வந்த காவல் துணைக் கண்காணிப்பாளரையும் தாக்கியுள்ளனர்.

4. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், கோட்டைபட்டி கிராமம் தமிழ் செல்வன்(SC) என்பவரும் கவிதா(BC)என்பவரை திருமணம் செய்து கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறி பெரியகுளம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை எடுத்து கொண்டு 22.4.2020 அன்று கோட்டைபட்டி கிராமத்திற்கு வந்தநிலையில், கவிதாவின உறவினர்கள் பயங்கர ஆயுதங்களுடன் 27.4.2020 அன்று குடியிருப்புக்குள் புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் 15க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

5. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்த முருகானந்தம்(SC)பானுப்பிரியா(BC) இருவரும் 21.4.2020 அன்று திருமணம் செய்து கொண்டதால், முருகானந்தத்தை கடுமையாக தாக்கி பானுப்பிரியாவை கடத்தி சென்றுள்ளனர். பிறகு அவர் மீட்கப்பட்டார்.

எஸ்.சி. ஊராட்சித் தலைவர்களுக்கு அவமரியாதை
1. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அரியாகுஞ்சூர் ஊராட்சி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி ஆகும். தற்போது ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இருளர் (SC) சமூகத்தைச் சார்ந்த முருகேசன் என்பவரை  அக்கிராமத்தில் இறந்த ஒருவரின் சடலத்தைப் புதைப்பதற்கு 2.6.2020 அன்று குழி வெட்ட வைத்துள்ளனர்.

2. சேலம் மாவட்டம், கோனகபாடி SC பஞ்சாயத்து தலைவரான அம்சவள்ளி என்பவரை 22.4.2020 மோகன்(BC) என்பவர் பணி செய்ய விடாமல் தடுத்து சாதிரீதியாக பேசியுள்ளார்.

3. திருப்பூர் மாவட்டம் கவுண்டச்சி புதூர் SC பஞ்சாயத்து தலைவரான செல்வி என்பவரை கடந்த 4.5.2020 அன்று  குப்புசாமி என்பவர் சாதிரீதியாக இழிவாகப் பேசியுள்ளார்.

கல்வி நிலையத்தில் தீண்டாமை
1. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம்  இடையர்காடு தி.தி.அ.க நல்மேய்ப்பர் உயர் நிலை பள்ளியில் SC குழந்தைகளை பள்ளிக் கூடத்தின் துப்புரவு பணி செய்ய கட்டாயப்படுத்தி வந்துள்ளனர். மார்ச் மாதத்தில் இவ்வாறு கழிவறை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டதில் 2 தலித் மாணவர்கள் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மயானப் பிரச்சனைகள்
1.திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கே.அய்யம்பாளையம் முத்தாண்டிபாளையத்தில் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளியான சண்முகத்தின் மனைவி சசிகலாவின் உடலை பொதுமயானத்தில் புதைக்க விடாமல் (BC) பகுதியினர் தடுத்துள்ளனர்.

2. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் ராஜகோபாலபுரம் கிராமத்தில் SC மக்களுக்கு மயானம் இல்லை. 4.6.2020 அன்று இறந்த பெரியவரின் உடலை வைத்துக் கொண்டு மயானம் கேட்கும் நிலையே உள்ளது.

டாக்டர் அம்பேத்கருக்கு அவமரியாதை
1. கடலூர் நகர், மஞ்சக் குப்பம், அம்பேத்கர் சிலைக்கு சமூக விரோதிகள் சிலர் 1.5.2020 அன்று செருப்பு மாலை போட்டு இழிவு செய்துள்ளனர்.

2. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரில் சமூக விரோதிகள் சிலர் அம்பேத்கர் உருவப்படத்தை சாணம் பூசி இழிவுபடுத்தியது குறித்து நிருபர் ஆதி சுரேஷ் என்பவர் தொலைக்காட்சியில் செய்தியாக்கியதற்காக 23.4.2020 அன்று தாக்கப்பட்டார்.

அரசு பணியாளர்களின் பாரபட்சம்.
1. காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், வடபட்டிணம் கிராமம் மணிகண்டன்(SC) என்பவர் 13.4.2020 அன்று மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கூவத்தூர் உதவி ஆய்வாளர் சரவணன் மணிகண்டனை அடித்து அவரது கிராமத்துக்கு அருகாமையில் சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

2. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சி ஆணையர் சசிகலா அவர்கள் 11.04.2020 அன்று  சொரியங்கிணத்து பாளையம் என்ற SC குடியிருப்பு பகுதிக்கு சென்று மாட்டுக்கறி வைத்திருப்பதாக வீடுவீடாக சோதனை நடத்தியதுடன் கொரோனோ பாதித்த பகுதியாக முடக்கி விடுவேன்” என்றும் மிரட்டியுள்ளார்

3. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் தோக்கவாடி பகுதியை சார்ந்த கௌதம பிரியன்   த/பெ. ஆறுமுகம் SC என்பவரை  இதே வட்டம் புதுப்பாளையம் காவல்நிலைய காவலர் ஈஸ்வரன் (MBC)என்பவர் 31.03.2020 அன்று தெருவில் முட்டி போட வைத்து, கௌதம பிரியன் அணிந்திருந்த அம்பேத்கர் படம் அச்சிடப்பட்ட பணியினை  கிழித்து, வயரால் கடுமையாகத் தாக்கியுள்ளார். (காரணம்: கௌதம பிரியன் தனக்கு அறிமுகமான MBC பெண்ணுடன் பேசியதற்காக)

கொத்தடிமை
1. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சொட்டமாயனூர் நந்தகோபால்(SC) என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(BC)என்பவரிடம் கந்து வட்டியாக,ரூபாய் 25ஆயிரம் பெற்று, 1லட்சத்திற்கு மேல் கொடுத்துள்ளார்.மேலும் 1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கடத்திச் சென்று பண்ணை தோட்டத்தில் கொத்தடிமையாக  வேலைக்கு வைத்துள்ளார்.

தாக்குதல்கள்
நிலம் மற்றும் சொத்துக்களைப் பறிப்பதற்காக என்பதில் துவங்கி இருசக்கர வாகனத்தில் செல்வதை தடுப்பது வரை என பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீது எண்ணற்ற தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு வந்த விபரங்களை மட்டும் தருகிறோம். உண்மையில் இதைவிட அதிகமாகவே தாக்குதல்கள் நடந்திருக்கும் என்பதையும் கவனப்படுத்துகிறோம்.

1. திருவண்ணாமலை மாவட்டம்,கீழ்பெண்ணாத்தூர் வட்டம், சூரியந்தாங்கல் SC குடியிருப்பில் 25.03.2020 அன்று MBC இளைஞர்கள் புகுந்து தாக்குதல். ஐந்து இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, மூன்று வீடுகள் மற்றும் பொருட்கள் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் தனசேகர், அலமேலு, ரவி, சின்னப்பையன் ஆகியோரை  கொடூரமான முறையில் தாக்கியும் உள்ளனர்.

2. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கீழ்பாஞ்சார் கிராமத்தில் SC மக்களின் பயன்பாட்டில் இருந்த நிலத்தை அபகரிக்கும் விதத்தில், ரவீந்திரன் மற்றும் பலர் (SC, லம்பாடி) பிரிவினர் 24.4.2020 அன்று அம் மக்களைத் தாக்கியதில் 12 பேர் (SC) படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3. விழுப்புரம் மாவட்டம், அரசூரில் 8.5.2020 அன்று பாக்கியராஜ்(SC) என்பவரை அருள்(MBC) என்பவர் குடிபோதையில்  வாகனத்தை சேதப்படுத்தி, அவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

4. விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தை சேர்ந்த SC இளைஞர்களை,தொட்டிக்குடிசை என்ற கிராமத்தை சேர்ந்த MBC இளைஞர்கள் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

5.விழுப்புரம் மாவட்டம்,மேலமங்கலம் கிராமத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து விட்டு ஊர் திரும்பியவர்களை கிராமத்திற்குள் அனுமதிக்கும் பிரச்சனையில் 7.5.2020 அன்று தகராறு ஏற்பட்டு ராஜவேணி என்ற SC பெண் கடுமையாக தாக்கப்பட்டார்.

6.கடலூர் மாவட்டம் நல்லூர் வட்டம் என்.புதூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரையின் மணல் கொள்ளையை எதிர்த்ததால் மேமாத்தூர் கிராம SC இளைஞர்கள் 8.5.2020 அன்று தாக்கப்பட்டனர்.

7. காஞ்சிபுரம் மாவட்டம்,செய்யூர் வட்டம், இல்லீடு கிராமத்தில் காட்டுநாயக்கர் சமூகத்தினர் ஏரியில் தண்ணீர் எடுக்கும் போது BC (யாதவர்)சமூகத்தில் உள்ள சில சமூகவிரோதிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

8. திருவள்ளூர் மாவட்டம், கம்லூர் ளுஊ குடியிருப்பை ஒட்டிய சாலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பு ஏற்படுத்தியதற்காக 07.05.2020 அன்று 25க்கும் மேற்பட்ட MBC தரப்பினர் SC  குடியிருப்பில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

9. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் அய்யாபட்டி கிராமம் தேவராஜ், ஹரிஹரன், (SC) ஆகியோர் 24.4.2020 அன்று ஸ்ரீரங்கம்பட்டி சென்று கொண்டிருந்த போது ராஜேஸ்வரன்(BC)என்பவர் உள்ளிட்ட ஒரு கும்பல் தாக்கியுள்ளது.

10. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் லிங்கவாடி கிராமம், பாலகிருஷ்ணன்(SC) என்பவரின் மாந்தோப்பில் 28.04.2020 அன்று சுப்பையா(BC) என்பவர் உள்ளிட்டு 4 பேர் மாங்காய்  திருடியதோடு பாலகிருஷ்ணனையும் தாக்கியுள்ளனர்.

11. தேனி மாவட்டம்,பொம்மைய கவுண்டமன்பட்டி கிராமம் கவியரசன், ஆனந்த்(SC)ஆகியோர் 24-5-2020அன்று BC தெருவில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்ததற்காக தாக்கப்பட்டுள்ளனர்.

12. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மானகசேரி கிராமம் மாரிமுத்து(SC)என்பவர் வீட்டிற்கு அருகில் இருந்த இடத்தை பயன்படுத்துவது தொடர்பான பிரச்சனையில் கருப்பணத்தேவர் மகன் காளிராஜ் என்பவர்,மாரிமுத்து மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோரை கடுமையாக தாக்கி யுள்ளார்.

13. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், அழகு தேவேந்திரபுரம் கிராமம் பூலான்,ஜெயக்குமார்(SC) ஆகியோர்களை 18.5.2020 அன்று ரஞ்சித் குமார்,சுரேஷ், கருப்பசாமி, அருண், மாதவன், சச்சின், ராஜா, ரஞ்சித், வீரணன், மணி ஆகிய (BC) தரப்பினர் அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தியுள்ளனர்.

14. தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருகே தோப்பூர் கிராமம்  SC மக்களை 24. 3 .2020 அன்று (BC) இளைஞர்கள்  வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் உள்ளார் .

15. திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம், தேவம்பாளையம் கிராமத்தில் 7.5.2020 லோகனாதன் (SC)என்பவரின் ஆடு மூர்த்தி என்பவரின் தோட்டத்துக்குள் சென்றதால் லோகநாதனையும் அவரது  தங்கையையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

16. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் சின்னார் பாளையம் கிராமம் 7.5.2020 அன்று BC இளைஞர்கள் டூவீலரில் சென்ற SC இளைஞர்களை தாக்கியுள்ளனர். கிராம பெரியவர்களிடம் முறையிட சென்ற பொழுது மீண்டும் தாக்கியுள்ளனர்.

17. நாமக்கல், வகுரம்பட்டி SC வழக்கறிஞர் சசிகுமார் என்பவர் மீது கடந்த 9.5.2020 அன்று கோபிநாத்(BC) உள்ளிட்ட வன்கொடுமை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

18. நாமக்கல் மாவட்டம், பிலிப்பாகுட்டை சமத்துவபுரத்தைச் சேர்ந்த SC பெண் அனிதா என்பவர் மீது 15.04.2020 அன்று சரசு மற்றும் அவரது கணவர் ரவி(BC) ஆகியோர் தாக்குதல் தொடுத்துள்ளனர்.

19. புதுக்கோட்டை மாவட்டம், கரம்பவிடுதி கிராமம், மனோகரன்(SC) உள்ளிட்ட மூன்று பேரை கடந்த 7.5.2020 பால்ராஜ்(BC)உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ளனர்.

20. புதுக்கோட்டை, வேப்பன்பட்டி பாரதிராஜா (SC) என்பவர் வீரலட்சுமி(BC)என்பவரை கடந்த 6.4.2020 அன்று திருமணம் செய்து கொண்டதால் வீரலட்சுமியின் பெற்றோர்கள் தம்பதியினரை மிரட்டி வருகின்றனர்.

21. புதுக்கோட்டை மாவட்டம்,கன்னியான்கொல்லை கிராமத்தில் SC குடியிருப்பின் அருகில் வேகத்தடை அமைத்ததால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் உள்ளிட்டவர்கள் (BC) 21.05.2020 அன்று SC மக்களைத் தாக்கியுள்ளனர்.

22. திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வட்டம் வேப்பன்பாடு SC இளைஞர்களை கடந்த 27.04.2020 அன்று சுபாஷ்(BC)உள்ளிட்ட கும்பல் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.

23. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம்,செல்வமருதூர் கிராமம் செந்தூரபாண்டி(SC) உள்ளிட்ட 3 பேரை 16.05.2020 அன்று அரவிந்த்(BC) உள்ளிட்ட 14க்கும் மேற்பட்டோர்  அரிவாளால் வெட்டித் தாக்கியுள்ளனர்.

24. கோவை மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழகம் அருகே வசிக்கும் வழக்கறிஞர் ஈஸ்வரன்(SC) என்பவரை கடந்த 7.5.2020  வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் என்பவர் சாதிரீதியாக இழிவாகப் பேசி லத்தியால் தாக்கியதில் இடது முழங்கை முறிப்பு ஏற்பட்டுள்ளது.

25. கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கரவழிமாதப்பூர் கிராமம் பழனிச்சாமி (SC) என்பவரை சிவகுமார்(BC) மற்றும் அவரது உறவினர்கள் சாதியை சொல்லி இழிவாக பேசி தாக்கியுள்ளனர்.

26. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் செங்கோட்டை கிராமம் தலித் பகுதியைச் சேர்ந்த சேகர்(SC)என்பவரை, ராமு(BC)உள்ளிட்ட  கும்பல்  3.4.2020 அன்று தாக்கியுள்ளனர்

27. சிவங்கை மாவட்டம்,மூங்கில்ஊரணி, லட்சுமி மற்றும் அவரது கணவர் பாக்கியராஜ்(SC) ஆகியோரை 5.4.2020 சுரேஷ்(BC) உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது.

28. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் நடுவலசை கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்(SC)உள்ளிட்ட 3 இளைஞர்களை கடந்த 21.05.2020 அன்று பிரசாந்த்(BC) உள்ளிட்ட 4 பேர் கொண்ட வன்கொடுமை கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளது.

29. சிவகங்கை, பெத்தணேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன்(SC) உள்ளிட்ட 3க்கும் மேற்பட்டோரை  17.05.2020 அன்று அரவிந்த்(BC)உள்ளிட்ட 30 பேர் கொண்ட  கும்பல் தாககியுள்ளது.

30. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் விசவனூர் கிராமத்தில் SC இளைஞர்கள் மீது சாதியவாதிகள் வன்கொடுமை தாக்குதல் நடத்தியுள்ளனர்

31. சிவகங்கை மாவட்டம் சோமாத்தூரில் SC இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

32. கரூர் மாவட்டம்,தான்தோன்றிமலை ஒன்றியம் விக்னேஷ் நகர் மருதமுத்து(SC)என்பவர் மீது 13.5.2020 அன்று  பெருமாள்(BC) உள்ளிட்ட இருவர் தாக்கியுள்ளனர்.

33. கரூர் மாவட்டம்,மலைப்பட்டி கிராமம் ருக்குமணி(SC)உள்ளிட்ட 3 பேரை கடந்த 20.5.2020 அன்று  தங்கமணி(BC) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட  கும்பல் தாக்கியுள்ளது.

34. மதுரை மாவட்டம், அயோத்திபட்டி கிராமம் பெரியகருப்பன் (SC)என்பவர் மீது கடந்த 24.5.2020 அன்று  பாஸ்கரன் (BC) உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது.

35. மதுரை மாவட்டம்,உசிலம்பட்டி வட்டம் வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கண்ணுச்சாமி என்பவரது மகன் சிவன்ராஜா(SC) என்பவர் கடந்த 27- 5 -2020 அன்று பேருந்து நிழற்குடை யில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார் என்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த (BC) இளைஞர்கள் அவரை தாக்கியதில் சிவன்ராஜாவின் பற்கள் உடைந்து விட்டன.

36. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம்,கீழ மாதரை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (SC) மற்றும் நான்கு பேரையும் அவர்களது வீடுகளையும் கடந்த 07.05.2020 அன்று (BC) பிரிவைச் சார்ந்த 8 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது.

மேற்கண்டவாறு தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீது தாக்குதல்கள், கொலைகள் மற்றும் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறான வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. மேற்சொல்லப்பட்ட பெரும்பாலான வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் குரல் கொடுத்திருக்கிறோம். சட்ட ரீதியான நீதி மற்றும் நிவாரணம் பெற்றிட மாநிலம் முழுவதும் பணிசெய்து வருகிறோம். ஆனால் நாளுக்குநாள் சாதிய பாகுபாடுகளும், வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.

அரசு இத்தகைய கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட வேண்டும். அதற்காக பின்வரும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோருகிறோம்.

கோரிக்கைகள்
1. மேற்கண்ட  ஒவ்வொரு சம்பவத்திலும் மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உரிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்களா, பாதிக்கப்பட்டவர்களுக்கு  உரிய பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதா, போன்றவை குறித்து   ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  குற்றம் இழைத்துள்ளவர்கள் எந்த சூழ்நிலையிலும்  தண்டனையிலிருந்து தப்பி விடாதவாறு உரிய நீதிமன்ற நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இச்சம்பவங்களில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் செயல்பாடுகள் குறித்தும் உரிய பரிசீலனை மேற்கொண்டு, தவறிழைத்துள்ள அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். 

2. எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் படி விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்கிற முறையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட வேண்டிய பரிசீலனை கூட்டத்தை நடத்திட வேண்டும். மாவட்ட அளவில் இந்த கண்காணிப்புக்குழு கூட்டங்களை முறையாக நடத்திட வேண்டும்.  இக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு அறிக்கையாக செய்திகள் வெளியிட வேண்டும்.

3. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நிதி, நிலம், நிவாரணம் மற்றும் அரசு வேலையை போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தாமதமின்றி வழங்கிட வேண்டும்.

4. வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதிப்படுத்தக் கூடிய விதத்தில் உறுதியான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி பதிவு செய்யப்படுகிற வழக்குகளில் 60 தினங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, 120 தினங்களில் வழக்கை முடித்திட வேண்டும். சில வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக (கடலூர் மாவட்டம், விருதாசலம் வட்டம், புதுக்கூரைப்பேட்டை முருகேசன், கண்ணகி தம்பதியினர் கொலை  வழக்கு) நடந்து வருவது குற்றவாளிகள்  தப்பிப்பதற்கே வழிவகை செய்யும்.  எஸ்.சி.,/எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகள் 4(5)ன் படி பாதிக்கப்பட்டவர்கள் கோருகிற  வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்.

5. தற்போது 6 சிறப்பு நீதிமன்றங்களே உள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும்.

6. எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் படி மாநில காவல் இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இணைந்து மாநிலத்தில் வன்கொடுமைகள் அதிகம் நடைபெறக்கூடிய பகுதிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்த அறிக்கையை மாநில அரசிற்கு வழங்கிட வேண்டும்.

7. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு  வழக்கில் (WP 26991ன் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும் என்கிற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எண் 460/2017) சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்ட அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அறிவித்திருக்கிற சிறப்பு பிரிவுகள் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

8. சாதியக்கொடுமைகளும், சாதிய ஒடுக்குமுறையும் தொடர்வது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, நாகரிக  சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாகும். சாதிய உணர்வுகளை, வெறியைத் துடைத்தெறியும் வகையில் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். துவக்கப்பள்ளி முதல் பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு பாடங்களை சேர்ப்பது, சாதிய வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் தொலைக்காட்சி விளம்பரங்கள், சமூகப் பிரச்சார இயக்கங்களுக்கு அரசு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

9.சமூக நீதி பாரம்பரியத்தை வலியுறுத்துகிற நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளை தமிழக அரசே நிதியுதவி செய்து நடத்திட வேண்டும்.

10.அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கம் உள்ளிட்ட மக்கள் அமைப்புகள் தீண்டாமை மற்றும் சாதிய கொடுமைகளை  எதிர்த்து குரலெழுப்ப வேண்டுமென உறுதிமொழி ஏற்கும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும்.

11. உறுதியான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் பட்டியலின பழங்குடி மக்கள் கையில் நிலம் கிடைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் அதேபோல் பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்

மேற்கண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தி சாதிய ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தின்  நகல் தமிழ்நாடு காவல்துறை இயக்குநருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

;