states

img

பொய்யை மெய்யாக்கும் கூலிப்படை கூடாரத்தில் யூடியூபர் மணீஷ் காஷ்யப்

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள்  தாக்கப்படுவதாக பொய் செய்தி  வெளியிட்டவர். மக்களவைத் தேர்தலுக்கு  கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.26)  நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜகவில் பிரதமர் முதல் அடிமட்டத்  தலைவர்கள் வரை  பொய்யான தகவல்களை பரப்பி  மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.  முதல்கட்டத்  தேர்தல் முடிவடைந்த மாநிலங்களில் பாஜகவுக்கு ஒன்றும் கிடைக்காது என்ற தகவல் அக்கட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த நிலையில் மீதமுள்ள 6 கட்டத்தேர்தல்களில் ‘கவுரவமான தோல்வியை’ பெற அக் கட்சி போராடி வருகிறது. வடமாநிலங்களில் இருந்து  வரும் தகவல்கள் பாஜக படுதோல்வியை  சந்திக்கப்போவதை உறுதிப்படுத்துகின்றன. இதனால் பிரதமர் நரேந்திரமோடி உள்பட அக் கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் பதற்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது குறிப்பாக காங்கிரஸ் இடது சாரிக்கட்சிகள் மீது பாய்ந்து வருகிறார்கள். பாஜகவில் குற்றவாளிகள் பெருமளவில் சேர்ந்த நிலையில் தற்போது  பொய்களை மூலதனமாக்கி  பிழைப்பு நடத்தும் படுமோசமான நபர்கள் அக்கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.  தமிழகத்தில்  பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்ச் செய்தி பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் தற்போது பாஜகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.  

இவர் மக்களவைத் தேர்தலில் பீகாரில் உள்ள மேற்கு சம்பரண் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்தார். மேற்கு சம்பரனின் முஹ்னவா துமாரி கிராமத்தைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப், புனேவில் 2016 இல் சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு, 2018 இல், ‘சச் தக் நியூஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கினார். தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பியதாக யூடியூபர் மணீஷ் காஷ்யப் மீது புகார் எழுந்தது. பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோக்களை வெளியிட்ட காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மீது தமிழ்நாடு காவல்துறை மற்றும் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு  தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்ததையடுத்து அவர் ஜகதீஷ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் சரணடைந்த பிறகு, தமிழ்நாடு காவல்துறையால் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் நான்கு மாதங்களுக்கு மேல் இருந்தார். பின்னர், அவர் மீண்டும் பீகாருக்கு கொண்டு செல்லப்பட்டு பாட்னாவில் உள்ள பீர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு, பாட்னா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக பொய்செய்தி பரப்பிய மணிஷ் காஷ்யப்புக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. முக்கியமான கட்சிகள் அவரை ஆதரிக்க மறுத்துவிட்ட நிலையில் பாஜகவில் அவர் அடைக்கலமாகியுள்ளார். பொய்யை மெய்யாக்கி அரசியல் ஆதாயம் தேடும் கயவர்களின் தாயகம் பாஜகதானே. அதனால் தான் அவர் சரியான இடத்தை தேர்வு செய்துள்ளார்.  -

அ.விஜயகுமார்

;