states

img

மூன்றாம் முறை ஆட்சி கனவாகிடுமோ எனும் கலக்கத்தில்... -

மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்தபின்னர் இரு நாட்கள் கழித்து, ஏப்ரல் 21 அன்று பிரதமர் ஆற்றிய மதவெறி மற்றும் வெறுப்பைக் கக்கும்  பேச்சுக்கள், இந்தியாவிலும் வெளிநாடு களிலும் விரிவான அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்தின ருக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் விதத்தில் மதவெறி நஞ்சை அவர் உமிழ்ந்ததும், 2002இல் அவர் குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது முஸ்லிம்களுக்கு எதிராக நடை பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருந்தன என்று அவர் குற்றம்சாட்டியதை நினைவூட்டுவதாக இருந்தன. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் இவ்வளவு விரைவாக மீண்டும் அவ்வாறு அவர் பேசவேண்டியதன் தேவையை ஆய்வு செய்வது முக்கியமாகும்.

வெறுப்புப் பாய்ச்சல்

ஏப்ரல் 19 அன்று 102 இடங்களுக்குத் தேர்தல் நடந்துள்ளது. இவற்றில், தமிழ்நாடு மற்றும்  பாண்டிச்சேரியில் தேர்தல் நடைபெற்றுள்ள 40 இடங்களிலும் பாஜக அநேகமாக துடைத் தெறியப்பட்டுவிடும். மீதம் உள்ளவை ராஜஸ்தானில் 12, உத்தரப்பிரதேசத்தில் 8,  மத்தியப் பிரதேசத்தில் 6, உத்தரகண்ட், மகாராஷ்ட்ரா , அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தலா 5, பீகாரில் 4, மேற்கு வங்கத்தில் 3, வட கிழக்கில் 6, சத்தீஸ்கரில் 1, ஜம்மு-காஷ்மீரில் 1 ஆகியவைகளாகும்.   சென்ற தேர்தலின்போது இம்மாநிலங்களில் பாஜக முழுமையாக வெற்றி  பெற்றிருந்தது. எனினும், இந்தத் தடவை உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் பீகாரில் பாஜக-வின் செயல்பாடுகள் முன்பிருந்ததைவிட மிகவும் கீழானதாகவே இருந்திடும் என்றும், இந்த நிலை தொடரு மானால், மீண்டும் மூன்றாவது தடவையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திடும்; அதன் கனவுகள் கனவாகவே நீடித்திடும்.  எனவேதான், முஸ்லிம்களுக்கு எதிராக நாய் ஊளையிடுவது போல் அவர் செயல்படத் தள்ளி யிருக்கிறது என்றே தெரிகிறது. அதேபோன்று முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீதும் அவர் வெறுப்புடன் பாய்ந்திருக்கிறார்.

இந்துப் பெண்களிடம் வெறியுணர்வைக் கிளப்ப

ஒருசில மாதங்களுக்கு முன் கணிசமான அளவில் பெரும்பான்மையுடன் கூடிய வெற்றி யை பாஜக-விற்கு அளித்த ராஜஸ்தான் மாநி லத்தில் இப்போது ஏப்ரல் 19 அன்று நடைபெறும் தேர்தலில் அந்த அளவிற்கு இடங்கள் கிடைக்காது, அது வெட்டிக்குறைக்கப்படலாம் என்பதை உணர்ந்த அவர், அம்மாநிலத்தில் பன்ஸ்வாரா என்னுமிடத்தில் பேசும்போது,  முஸ்லிம்களை ‘நாட்டிற்குள் ஊடுருவியவர்கள்’ என்றும், ‘நாட்டில் அதிக குழந்தைகளைப் பெறு கிறவர்கள்’ என்றும் ஜாடையாகக் குறிப்பிட்டது டன், அந்த முஸ்லிம்களுக்கு நாட்டின் வளங்களில் முதல் பங்கை வழங்குவதற்கு காங்கிரஸ் உறுதி பூண்டிருக்கிறது என்று கெடு நோக்கத்துடன் குற்றச்சாட்டுகளையும் வாரிவீசி யிருக்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்குறுதி அளித்ததாக  உண்மைக்குப் புறம்பாக  அவர் கூறினார்.  மேலும் அவர், ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமானால், அது  இந்து பெண்களின் தாலியை அபகரித்து, முஸ்லிம்களிடம் கொடுத்துவிடும் என்று கூறும் அளவிற்குச் சென்றுள்ளார். இந்துக்கள் மத்தியிலிருந்து, அதிலும் குறிப்பாக இந்து பெண்கள் மத்தியிலிருந்து, வெறியுணர்வைக் கிளப்பிவிட வேண்டும் என்ற கெடுநோக்கத்து டனே இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். 

இடஒதுக்கீடு பற்றிய பொய்... 

ராஜஸ்தான் மாநிலத்தில் மற்றோர் இடத்தில் அவர் பேசும்போது, தலித்துகள் மற்றும் பழங்குடியினர்க்கான இட ஒதுக்கீட்டு இடங்களை, முஸ்லிம்களுக்கு அளித்திட காங்கிரஸ் விரும்புவதாகவும் பொய்யாகக் குற்றம்சாட்டி இருக்கிறார். தங்கள் கொள்கை களை எதிர்த்திடும் சுரண்டப்படும் ஏழை மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இதையும் அவர் கூறினார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்கள் அதற்கு மிகவும் முக்கியம் என்பதால், இத்தகைய விஷப்  பிரச்சாரம் உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் இருக்கக்கூடும் என  எதிர்பார்க்கலாம். இதே தொனியில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர், யோகி ஆதித்ய நாத்தும், இந்தியாவில் ஷரியத் சட்டத்தை  அமல்படுத்த காங்கிரஸ் விரும்புவதாகக் குற்றம்சாட்டி இருக்கிறார்.

உள், வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் ஆதரவு

பிரதமரின் பேச்சுக்கள், பாஜக-வின் அடிமட்ட வாக்காளர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. மிகவும் மோசமானமுறையில் தோல்வியடைந்த தங்கள் கொள்கைகளால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரிசெய்து மீண்டும் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு இது போன்ற வெறிப் பேச்சுகள் தேவை என்று அவர்கள் கருதுகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக இருந்துவரும் இந்திய மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் மத்தியிலும்கூட இவருடைய பேச்சுகள் ஆதரவினைப் பெற்றி ருப்பதைக் காண முடிகிறது. தங்களிடம் உள்ள செல்வத்தை மறுபகிர்வு செய்வதற்கோ, தங்கள் மீது வரி விதிப்பதற்கோ அவற்றின்மூலம் சமத்துவமின்மையையும், வறுமையையும் குறைத்திடவோ அது தயாராக இல்லை என்பதை நன்கறிந்த அவர்கள் பாஜக-வின் கொள்கை யை முழுமையாக ஆதரிக்கின்றனர்.  

தேர்தல் ஆணையத்துக்கு ‘சோதனை ’ வழக்கு

பிரதமரின் பேச்சுக்கள், மக்கள் மத்தியில் சமூகத்தினருக்கிடையே பகைமையையும் வெறுப்பையும் ஊட்டக்கூடியவை என்றும், எனவே இவை அரசமைப்புச் சட்டத்திற்கும், நாட்டின் சட்டங்களுக்கும், தேர்தல் நடத்தை விதி களுக்கும் எதிரானவை என்றும், தேர்தல் ஆணையத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் இதர எதிர்க்கட்சிகளும் மற்றும் பொறுப் புள்ள குடிமக்களும் முறையிட்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் எதுவும் கூறாது இருந்த தேர்தல் ஆணையம், தற்போது முறையீடுகளை ஆய்வு செய்து வருவதாக அறிக்கை வெளியிட்டிருக் கிறது. தேர்தல் ஆணையம் அதன் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள பொறுப்புகளை நிறை வேற்றுமா என்பதை லட்சக்கணக்கானோர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இதில்  இது தவறும்பட்சத்தில் இந்திய ஜனநாயகம் மேலும் பலவீனமடைந்திடும்.  தேர்தல் ஆணை யம் எந்த அளவுக்கு ‘நேர்மையுடன்’ நடந்து கொள்ளவிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இது ஓர் சோதனை வழக்காகும் . மோடியின் வெறுப்பைக் கக்கும் பேச்சுக்கள் சரிந்துவரும் அக்கட்சியின் எதிர்காலத்தைத் தூக்கி நிறுத்துமா? இந்திய வாக்காளர்கள், தாங்கள் எதிர்கொண்டுவரும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் லஞ்ச ஊழல்கள் குறித்தே மிகவும் கவலப்பட்டுக்  கொண்டிருக்கிறார்கள் என்று தேர்தல் ஆய்வு கள் பல காட்டுகின்றன. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், மோடியின் முயற்சிகள் வீணானவை என்பது மட்டுமல்ல, கண்டிக் கத்தக்கவை என்பதும் மெய்ப்பிக்கப்பட்டுவிடும்.

ஏப்ரல் 24, 2024  
தமிழில்: ச.வீரமணி 

 

;