headlines

img

இந்தியாவின் வண்ணத்தை மாற்ற அனுமதியோம்!

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தூர்தர்ஷனின் இலச்சினை நிறத்தை நீல  நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது மோடி அரசு. இது கடும் எதிர்ப்பை உருவாக்கி யுள்ளது. தூர்தர்ஷன் வெளியிட்டுள்ள அறி விப்பில் ‘எங்கள் மதிப்பு அப்படியே இருக்கும். நாங்கள் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒளிபரப்பு நிறுவனம் அல்ல. அது மதச்சார்பற்ற இந்தியாவின் ஒளிபரப்பு நிறு வனம். மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது, புதிய முடிவுகள் எதை யும் எடுக்கக் கூடாது என்ற தேர்தல் விதி முறை யையும் மீறி ஆர்எஸ்எஸ் விரும்பும் வண்ணத்திற்கு தூர்தர்ஷன் மாற்றப்பட்டுள்ளது. 

மோடி அரசு கடந்த பத்தாண்டுகளாக கார்ப்பரேட்மயம் மற்றும் காவிமயத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை மாற்றி வரு கிறது. அதன் ஒரு பகுதியாகவே தூர்தர்ஷன் இலச்சினை நிறமும் மாற்றப்பட்டுள்ளது. பிரசார் பாரதி நிறுவனம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சார பாரதியாக மாற்றப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அமலாக்கத்துறை மத்திய புலனாய்வுத்துறை மற்றும் வருமான வரித்துறை என ஒவ்வொன்றாக தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கொண்டிருக்கிறது பாஜக. இவர்களது குறுகிய நோக்கத்திற்கு நீதித் துறையையும் கூட வளைக்க முயல்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே இந்த மாற்றமும் அமைந்துள்ளது. 

ஏனைய பொதுத்துறை நிறுவனங்களைப் போலவே பிரசார் பாரதி நிறுவனமும் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிப்பதற் காக கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கப்படுகிறது.

தமிழில் பொதிகை தொலைக்காட்சி என்று பெயரிடப்பட்டிருந்தது. டிடி தமிழ் என்று  மாற்றப்பட்டு காவி வண்ணத்திற்கு மாற்றப் பட்டது. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழின் மீது பாசம் கொண்டவர் போல வேஷம் போடுவார். ஆனால் பொதிகை என்ற தமிழ் பெயர் வன்மத்துடன் மாற்றப்பட்டது. அதன் பொதுத் தன்மையும் சிதைக்கப்பட்டது. இப்போது ஒட்டுமொத்த தூர்தர்ஷனின் நிறத்தையும் மாற்றி யுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட, அனைவருக்கும் பொதுவான ஒளிபரப்பு நிறு வனத்தை தங்களது கட்சி நிறுவனமாக மாற்று வதற்கு மோடி வகையறாவுக்கு உரிமை இல்லை. திருவள்ளுவர், வள்ளலார் எனப்  பலருக்கும் காவி வண்ணம் பூசியவர்கள் இப்போது இந்தியாவுக்கும் காவி வண்ணம் பூசத் துவங்கியுள்ளனர். தேர்தலில் இந்திய மக்கள் இவர்கள் முகத்தில் கருப்பு வண்ணம் பூசுவதன் மூலமே தேசத்தின் பன்முக வண்ணத்தை பாதுகாக்க முடியும். 

;