court

img

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்....

புதுதில்லி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்து,வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர்.இதில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் மக்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பால் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல்வைத்தது. பின்னர் ஆக்சிஜன் தேவைக்காக  உச்சநீதிமன்ற அனுமதியுடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்பட்டு வருகிறது. கடந்த  மே மாதம் 12 ஆம் தேதி முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான  காலக்கெடு ஜூலை 31 சனிக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 6 மாதம் அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதற்கு தூத்துக்குடி மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில், வேதாந்த நிறுவனத்தின் இடைக்கால மனுவை எதிர்த்து,  உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனுவை தாக்கல் செய்து   தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டியதில்லை என்று  வலியுறுத்தியுள்ளார்.அடுத்த வாரம் மனு விசாரணைக்கு வரும் வரை தற்போதைய நிலைப்படி ஆக்சிஜன் உற்பத்தி தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்து, வழக்கை ஒத்தி வைத்தனர்.

ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

;