court

img

எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்: உச்சநீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகளை ஒன்றிய அரசு மதிப்பதில்லை.... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் விமர்சனம்....

புதுதில்லி:
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகள், உத்தரவுகளை  ஒன்றிய  அரசு மதிப்பதில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ள உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தீர்ப்பாயங்களை நடத்த விருப்பம் இல்லையெனில் சட்டங்களை ரத்து செய்துவிடுங்கள் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும்  பல்வேறு தீர்ப்பாயங்களில் காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ளன.இதனை நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் காலஅவகாசம் அளித்தும் கூட இந்த பணி யிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது.அப்போது  தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், உச்சநீதிமன்ற  தீர்ப்புகளுக்கும் உத்தரவுகளுக்கும் ஒன்றிய அரசு மதிப்புவழங்குவதில்லை என்று  கடும்  அதிருப்தி யுடன் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், எங்களது பொறுமையை மிகவும் சோதிக்க வேண்டாம். பரிந்துரைகள் அளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒன்றிய அரசு இன்னும் நிரப்பாமல்இருப்பது ஏன்? உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல்அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தீர்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இப்படியொரு செயல்படாத தீர்ப்பாயங்களை வைத்திருப்பதற்கு பதிலாக தீர்ப்பாயங்கள் அத்தனையையும் மூடிவிடலாமா, அப்படி மூடி விடலாம் என்றால் அதற்கான மாற்று ஏற்பாடு என்ன, தீர்ப்பாயங்கள் இயங்குவது தொடர்பான அனைத்து சட்டங்களையும் நீக்கி விடலாமா என்று பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார்.

செப்டம்பர் 13ஆம் தேதி வரை கடைசியாக உங்களுக்கு கால அவகாசம் வழங்குகிறோம். அப்படி இல்லையெனில் நாங்களே அந்த பணிகளை செய்ய வேண்டி வரும் என்றுநீதிபதி என்.வி.ரமணா எச்சரிக்கை விடுத்துள் ளார். ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர், இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு தகவல்களை தெரிவிப்பதாக கூறினார். அப்போது மீண்டும் தலைமை நீதிபதி, நீங்கள் தகவல் எல்லாம் சொல்ல வேண்டாம்.உடனடியாக எங்களது தீர்ப்பை செயல்படுத்தக்கூடிய வேலைகளை செய்யுங்கள் என்று கடும் அதிருப்தியுடனும் கோபத்துடனும் கூறினார்.

;