articles

img

பாலியல் சுரண்டலுக்கு எதிரான பயணத்தில் ஒரு புதிய பார்வை - ஜி.ராணி

“பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் நிகழும் இரண்டாம் நிலை பாதிப்பு; பாலினம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான பார்வையிலிருந்து” என்ற தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறையில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் வழக்கறிஞர் உ.நிர்மலா ராணிக்கு தனித்த பங்கு உண்டு. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான அவர், தமது முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட பொருள் தான் இது.

ஆணாதிக்க சமுதாயத்தில் பாலியல் வன் முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இரண்டாம் முறையும் அதே போன்ற பாதிப்புகளுக்கு ஆளாவது என்பது பரவலாக கண்ணு க்குத் தெரியாமல் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் நிலை பாதிப்பு என்பது இந்திய குற்றவி யல் நீதி அமைப்பில் பணி புரியும் அதிகாரிகளின் உணர்வுப் பூர்வமற்ற - எதிர்மறையான அணுகுமுறை மற்றும் பாலியல் வன்முறை குறித்த உண்மையற்ற புனைவுகளை உருவாக்குதல் ஆகியவற்றால்  நிகழ்கி றது. மேலும் குற்றவியல் அமைப்பில் நிகழும் சில உள்ளார்ந்த குறைபாடுகளாலும்; உதாரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான சட்டம் இல்லாத காரணத்தாலும் இது நிகழ்கிறது. இந்தியாவில் இரண்டாம் நிலை பாதிப்பு குறித்து ஓரிரு ஆய்வுகள் மட்டுமே, அதுவும் சிறிய அளவி லேயே  நடந்துள்ளன. அதுவுமே, வழக்கறிஞர் உ. நிர்மலா ராணி மேற்கொண்ட ஆய்வு அளவுக்கு விரி வான அளவில் பிரச்சனையை ஆழமாக ஆய்வு செய்ய வில்லை. மேலும் இரண்டாம் நிலை பாதிப்பை பற்றி பெண்ணுரிமைப் பார்வையிலும் மற்றும் பாதிக்கப் பட்டவர்களின் உரிமைகள் தொடர்பான பார்வைகளில்இருந் தும் வழக்கறிஞர் உ. நிர்மலா ராணி ஆய்வு செய்திருப் பது, இந்த ஆய்வுரையின் தனித்துவமான அம்சமாகும்.

ஆய்வின் வரையறை

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் 2011 - 2013 ஆண்டுகளில் தீர்ப்பு அளிக்கப்பட்ட  வழக்குகளில், பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் 410 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் முறைப்படி நீதிமன்றங்க ளில் இருந்து பெறப்பட்டுள்ளன. ஆணாதிக்க சமூகத்தில் பாலியல் வன்முறை களால் பாதிக்கப்பட்ட பெண்களை- நீதி தேடிச் சென்ற போது தங்களுக்கு நேர்ந்த எதிர்மறையான அனுப வத்தைப் பற்றி- பேச வைப்பது என்பது மிகப் பெரிய சவால் ஆகும். அத்தகைய சவாலை எதிர்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்களிடம் கலந்துரையாடி, புகார் கொடுப்பதில் இருந்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர்கள் சந்தித்த எதிர்மறையான அனுப வங்களை - இரண்டாம் நிலை பாதிப்புகளை ஆய்வுத் தொகுப்பில் தெளிவாக பதிவு செய்துள்ளார் ஆய்வா ளர் உ.நிர்மலாராணி.

1985 - ஐ.நா.பிரகடனம்

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்க ளுக்கான நீதிக்கான கொள்கையை 1985 ஐ.நா. பிரகட னம் வரையறை செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நீதி பெறுவதற்கான வழி முறை மற்றும் அவர்களை நேர்மையாக நடத்துதல்;  மறு சீரமைப்பு; இழப்பீடு; உதவி - ஆகியவற்றை தற்போதைய குற்றவியல் நீதி அமைப்பும் அதன் பங்குதாரர்களும் எவ்வாறு மீறுகின்றனர் என்பதையும் இந்த ஆய்வு விசாரணை செய்துள்ளது. இரண்டாம் நிலை பாதிப்புக்குள்ளாகும் பெண்கள், இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை  வழங்கும் நீதி மற்றும் இழப்பீடு நிதி என்ற எதுவும் கிடைக்காமல் இருக்கும் அவல நிலையை ஆய்வு படம் பிடித்துக் காட்டுகிறது. மேலும் இரண்டாம் நிலை பாதிப்பு நிகழ்வதற்கும் நீதி மறுக்கப்படுவதற்கும் உள்ள தொடர்பை இந்த ஆய்வு கோடிட்டுக் காட்டுகிறது.

சமூகத்தின் புனைவுகள்

பாலியல் வன்முறைகள் பற்றி சமூகம் புனைந்துள்ள கட்டுக்கதைகள் உண்மையல்ல; அவை அனைத்தும் புனையப்பட்டவை என்பதற்கு உதாரணம், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பொய் தான் சொல்வார்கள் என்றும்; மேலும் பாலியல் உறவு  வேண்டாம் என்று பெண் கூறினால்,வேண்டும் என்று தான் அர்த்தம் என்றும்; அதை நம்பக்கூடாது என்றும் சமூகம் காலங்காலமாக சொல்லி வருகிறது. அதுமட்டு மல்லாமல், இரவில் தனியாக வெளியே செல்லும் பெண்கள் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டால் அவர்கள் விரும்பித்தான் நடந்தது என்றும்; அவர்க ளின் நடத்தை மோசம் என்றும்; அவர்கள் ‘அரைகுறை’ ஆடை அணிந்திருந்தார்கள், அதுதான் காரணம் என்றும் குற்றம் சாட்டுவார்கள்.  இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்காது; தண்டனை மட்டும் தான் கிடைக்கும்.

மார்க்சிய ஒளியில் ஆய்வு

இந்த அம்சங்கள் உட்ப, வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி அவர்களின் ஆய்வு மார்க்சிய பெண்ணிய கோட் பாட்டின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடலாம். முதலாளித்துவ/ ஆணாதிக்க/ பாலின அசமத்துவ சிந்தனையின்  அடிப்படையான வெளிப்பாடு பெண்க ளுக்கு எதிரான பாலியல் வன்முறை. இது ஏன் நடக்கி றது? ஆண் - பெண் இடையிலான ஏற்றத்தாழ்வு; ஆண் உயர்ந்தவன் என்றும் பெண் தாழ்ந்தவள் என்றும் முத லாளித்துவ- நிலபிரபுத்துவ சமூக அமைப்பு வலுவாக கட்டமைத்துள்ளது என்பதே இதன் அடிப்படை. இச் சமூக  அமைப்பில் நிலவக்கூடிய சூழ்நிலைகள், ஆணாதிக்க சிந்தனை வளர்வதற்கும் துணை போகின்றது. ஆனால் மார்க்சியப் பெண்ணியம் என்பது, வெறும் வாய் வார்த்தையோ அல்லது புத்தகங்களில் எழுதி வைக்கப்பட்டவையோ அல்ல; மாறாக 1917ஆம் ஆண்டு புரட்சி நடந்தபோது சோவியத் யூனியனில் ஆண் - பெண் சமத்துவம் நிலை நாட்டப்பட்டது; நிறைய சட்டங்கள் இயற்றப்பட்டன. உதாரணமாக 1917 இல் இயற்றப்பட்ட சட்டம் நூறு ஆண்டுகளை கடந்தும் இந்தியாவில் இல்லை. அதாவது ஜாயின்ட் மேட்ரிமோனி சட்டம். அதாவது, கூட்டுத் திருமணவியல் சட்டம். இன்றைக்கு இந்தியாவில்  கணவன் - மனைவி விவாகரத்து செய்து பிரிந்து போனால் மனைவிக்கு என்ன கிடைக்கும்? குறைந்த தொகையான ‘ஜீவ னாம்சம்’  மட்டும்தான் கிடைக்கும்; அது கிடைப்ப தற்கே கூட நிறைய காலமாகும்.  ஆனால் சோவியத்தின் ஜாயின்ட் மேட்ரிமோனி சட்டத்தில் கணவன் - மனைவி சேர்ந்து வாழும் போது எந்தெந்த பொருட்கள் வாங்கப் பட்டுள்ளதோ, அந்த அடிப்படையில் இருவருக்கும் சம மாக பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இந்த சட்டம் இத்தனை  காலம் ஆகியும்  இந்தியாவில் உருவாக வில்லை.

இரண்டாம் நிலை பாதிப்பின் தீவிரம்

தமிழ்நாட்டில்    9 மாவட்டங்களில் (சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, தேனி, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம்)  நான்கு போலீஸ் சரகங்கள் உட்பட 10 வருடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. • 19 வயதிற்கு குறைவான பெண்கள் 84% பாதிப்பு அடைந்துள்ளனர். • மூன்று வயதுக் குழந்தை முதல் 85 வயது மூதாட்டி வரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். • இவை அனைத்தும் பாலியல் இச்சைக்கு மட்டும் நடக்கும் விசயமாக இல்லை. பெண்களை தன்னுடைய கட்டுப் பாட்டிற்குள், ஆதிக்கத்திற்குள் கொண்டு வரும் நோக்கத்துடன் இச்சம்பவங்கள் நடந்துள்ளன. • 27%  பள்ளிப்படிப்பை முடித்தவர்களும் 91% மணமாகாத பெண்களும் - குறிப்பாக சமூக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இரண்டாம் நிலை பாதிப்பும் காவல்துறையும்

அவமானப்படுத்துவது, தரக்குறைவாக பேசுவது, முதல் முறையாக மனு கொடுக்க வருபவர்களிடம் மனுவை வாங்க மறுப்பது, வெளியில் தெரிந்தால் அவ மானம் என்று மிரட்டுவது, லஞ்சம் வாங்குவது, கால தாமதமாக புகாரை பதிவு செய்வது என காவல்துறை யில் இருப்பவர்கள் தங்கள் பங்கிற்கு இரண்டாம் நிலை பாதிப்புகளை ஏற்படுத்துவது இந்த ஆய்வில் ஏராள மான இடங்களில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை பலமுறை விசாரணை செய்வது, காவல் நிலையம் அடிக்கடி வர சொல்லுவது, வழக்கு நிலை பற்றி சொல்லாமல் காலம் தாழ்த்துவது ஆகியவையும் இதில் அடங்கும்.

அரசு மருத்துவர்கள்

காவல்துறைக்கு இணையாக அரசு மருத்துவர்க ளும் பாதிக்கப்பட்ட பெண்ணை அவமானப்படுத்துவது, 86 சதவீதமான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை செய்திருப்பது, பெண்களை கடுமையான மன உளைச் சலுக்கு உள்ளாக்குவது என அரசு மருத்துவர்கள் தரப்பில் நடந்துள்ள இரண்டாம் நிலை பாதிப்புகள் அதிர்ச்சியளிக்கின்றன. இரு விரல் பரிசோதனை என்பது சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஆனால் இன்றும் இந்த காட்டுமிராண்டித்தனமான - தடை செய்யப்பட்ட பரிசோதனை மருத்துவர்களால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. 72 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனையை 72 நாள் கழித்து செய்துள்ளது ஆய்வில் தெரியவந்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ளா மல் பாலியல் வன்முறைக்கான தடயங்களுக்கான மருத்துவ பரிசோதனை மட்டுமே மேற்கொண்டதும் தெரிய வருகிறது.

அரசு வழக்கறிஞர்கள்

அதே போல, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசால் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞரால் ஏற்படும் இரண்டாம் நிலை பாதிப்புகள் அதிகம். பாதிக்கப்பட்ட பெண்கள் கூண்டில் ஏறி நிற்கும் போது கூட  நமக்காக வாதாடப் போகும் வழக்கறிஞர் யார் என்று தெரியாத நிலை யும் இருந்துள்ளது. மேலும், நீதிமன்றத்திற்கு வரும்போது நீதிமன்ற  வராண்டாவில் அனைத்து நபர்களும் நிற்கும் இடத்தில் - பொதுவான இடத்தில் - நிற்கும் போது, பலரால் பாலி யல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக பல பெண்கள் வேதனையோடு தெரிவித்துள்ளார்கள்.

நீதிபதிகளின் அணுகுமுறை

வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளின் உணர்வுப் பூர்வமற்ற அணுகுமுறை, பொறுமையின்மை - உதார ணமாக, சாட்சியம் சொல்லும் போது நீதிபதி, ‘உன் கதையைக் கேட்க தயார் இல்லை; ஒரு தகுந்த  தயா ரிப்பாளரிடம் உன் கதையைச் சொல்; படமாவது எடுக் கப்படும்’ என்று சொல்வதும்; வேறு கோப்புகளை பார்த்துக் கொண்டிருப்பதும், தொடர்ந்து வாய்தா கொடுப்பதும்; மனநலம் குன்றிய பெண்கள் சாட்சியம் சொல்ல முடியாது என்பதால் குற்றவாளிகளை நீதிபதி விடுதலை செய்வதும்;  பழைய - காலாவதியான சட்டங்க ளை பயன்படுத்துவதும் என நிலைமை மிக மோச மாக உள்ளது என்பதை ஆய்வு அம்பலப்படுத்துகிறது.

நீதிமன்ற காலதாமதம்

• ஒரு வழக்கு ஒன்று முதல் 14 வருடம் நடைபெறும் சூழல்
• பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிகுந்தஅவமானகரமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவது
• இந்த அவமானத்தால் பாதிக்கப்பட்ட பெண்களில் நான்கில் ஒருவர் குடியிருக்கும் பகுதியை காலி செய்து செல்வது; பள்ளி இடைநிறுத்தம்.
• மீடியாக்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியில் சொல்வது - என பல வகைகளில் அவமானம் ஏற்பட்டுள்ளது.

மறுக்கப்படும் நீதி

வழக்கறிஞர் நிர்மலாராணி ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 410 வழக்குகளில் 373 வழக்குகள் குற்றவாளிக ளின் விடுதலையில் முடிந்துள்ளது. 88.5% குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 47 வழக்குகளில் தான் தண்டனை பெற்றுள்ளனர். அந்த 47 வழக்குகளில் 7 பெண்களுக்கு மட்டுமே இழப்பீடு கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்லும் போது, ‘பாலி யல் வன்முறை ஒரு சில நிமிடத்தில் நடந்து முடிந்து ஆறாத வடுவாகிவிடும்; ஆனால் நீதிக்காக போராடியது அதை விட மிகப்பெரும் மன உளைச்சலையும் வேதனை யையும் தந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆய்வின் பரிந்துரைகள்

1. பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்.
2. இரண்டாம் நிலை பாதிப்பு குற்றமாக கருதப்பட வேண்டும்.
3. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்குகள் முடிக்கப்பட வேண்டும்.
4. குழு நியமிக்கப்பட வேண்டும்.
5. பாலின வன்முறை வழக்குகளை கையாள்வதற்கு பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.
6.பழைய சட்டங்கள் பயன்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க குழு நியமிக்கப்பட வேண்டும்.- என்று தமது ஆய்வறிக்கையில் தீர்வுகளையும் முன்மொழிந்துள்ளார் நிர்மலா ராணி.

களப் போராளிகளின் முன்னிலையில்...

பொதுவாக  முனைவர் பட்ட ஆய்விதழ் சமர்ப்பித்த லின் போது,  ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர், பட்டம் கொடுப்பவர் என்று மட்டுமே இருப்பார்கள். ஆனால் இந்த ஆய்விதழ் சமர்ப்பித்தல் நிகழ்வில் நூற்றுக்கணக் கான களப்போராளிகள், பிரச்சனையை எதிர்கொண்ட வர்கள், ஆராய்ச்சியாளர்கள், விரிவுரையாளர்கள், பேரா சிரியர்கள் பலர் இருந்தனர்.பெண்ணுரிமைக்கான தமது நீண்ட நெடிய போராட்ட அனுபவச் செறிவோடு வழக்க றிஞர் உ.நிர்மலா ராணி, பத்து ஆண்டு  ஆய்வு மேற்கொண்டு, இந்திய பெண்ணுரிமை இயக் கத்தின் மகத்தான தலைவர் பாப்பா உமாநாத் அவர்க ளின் வாரிசாகவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் வாரிசாகவும் நின்று முனைவர் பட்டம் பெற்றார் என்றால் மிகை ஆகாது.

கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்


 









 

;