articles

img

மின் தொழிலாளர் நிரந்தரம் செய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! - கே.விஜயன்

25 ஆண்டுகளுக்கு முன்னால் 1999 ஆம் ஆண்டு மே 1 அன்று அனல் மின் நிலையம் மற்றும் நீர் மின் உற்பத்தி மின் நிலையங்க ளில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் எட்டாயிரம் பேர் நிரந்தரம் செய்யப்பட்டனர். ஒப்பந்த முறை மூலம் தொழிலாளர்களை நிரந்தர மான பணிகளில் ஈடுபடுத்துவது என்ற ஒன்றிய அரசின் கொள்கை அப்பட்டமான சுரண்டல் வடிவ மாகும். நிரந்தரம் என்ற வார்த்தையை ஒப்பந்த முறை  அழித்தது. தமிழக மின்வாரியத்தில் ஒப்பந்த தொழி லாளர் முறை கொண்டுவரப்பட்டது. மின்விநியோக பகுதிகளில் பீஸ் ரேட் முறை நடந்து வந்தது.  அனல் மின்நிலையங்களில் ஒப்பந்தக்காரர்களை புகுத்தி முதலாளி-தொழிலாளி முறைக்கு வேட்டு வைக்கப்பட்டது. எந்த நிறுவனத்திற்கு உழைக் கின்றாரோ அந்த நிறுவனத்தின் தொழிலாளி என்ற முறையை மாற்றியது. இந்த ஒப்பந்த முறை. ஒப்பந்தக்காரர்- தொழிலாளி என்ற வரையறையை உருவாக்கியது. தொழில்நுட்ப படிப்பு படித்த இளைஞர்கள், வேலை கிடைக்காமல் உள்ளவர்களை அனல் மின் நிலை யங்கள் குறைந்த கூலிக்கு ஆட்கொண்டன. ஒப்பந்த  தொழிலாளரை நிரந்தரம் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தால் நிர்வாகங்கள், ஒப்பந்த தொழிலாளர் தனது தொழிலாளி இல்லை என்று கைவிரித்து தொழிலாளர்களின் நெஞ்சில் குத்தின. தொழிலாளர்களுக்கு எந்த சட்டமும் பொருந் தாது என்பது அதிகார வர்க்கத்தின் பேச்சாக இருந்தது. அந்த சமயத்தில், ஏசியன் விளையாட்டுப் போட்டிக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத் தப்பட்ட தொழிலாளர்களின் நிலை கண்டு நீதிமன்றம் வெகுண்டெழுந்தது. அடுத்த வெளிச்சம் ஒப்பந்தத் தொழிலாளர் என்னும் சுரண்டல் முறைக்கு எதிராக  வானூர்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஆகும்.

அணி திரட்டிய சிஐடியு

அதே காலத்தில் தான் தமிழக மின்வாரியத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை திரட்டு வதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய (சிஐடியு) அமைப்பு ஈடுபட்டது. அனல் மின்நிலையங்களில் தொடர்ச்சியான பணிகளில் ஒப்பந்த முறை இருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அரசு தலையிட வைத்தது.  அரசு ஆணை 950 ( 8.8.90) மூலம் மின்வாரி யத்தின் 19 பணிகளில் ஒப்பந்த முறை தடை செய்யப் பட்டது. ஆனால், அதே வேளையில் மின்வாரிய, தொழி லாளர் கூட்டுறவு சொசைட்டியை கொண்டு வந்தது. எண்ணூர் அனல்மின் நிலையத்தில் துவக்கத்தில் கொண்டு வரப்பட்ட சொசைட்டி பின்னர் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இதுவும் பொருத்தமானதல்ல என்று மத்திய அமைப்பு (சிஐடியு) போராடியது. சில அமைப்புகள் முந்தைய நிலைக்கு இது பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டன.  மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிரந்தர தொழி லாளர் எண்ணிக்கை 50 க்கும் குறைவாக இருந்தது. ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தது.  நான்கு அனல் மின் நிலையங்களில் ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை மொத்தம் ஏழாயிரத்தை தாண்டியது. நிரந்தரமான பணிகளில் மிக மிக குறைந்த கூலி கொடுப்பதை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள். அந்த போராட்டங்கள், மின் உற்பத்தியை நிறுத்தும் அளவுக்கு சென்றது.

8 ரூபாய் கூலி உயர்வு

செங்கல்பட்டில் நடைபெற்ற மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலக்குழு கூலி உயர்வுக்கான போராட்டமாக வேலை நிறுத்த அறைகூவலை மூன்று அனல் மின்நிலையங்களில் அறிவித்தது. இந்த நிலையில், நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது தினம் 5 ரூபாய் ஊதிய உயர்வு அளிப்பதாக நிர்வாகம் சொன்னது. மின்வாரியத்தின் உழைக்கும் வர்க்கத்தின் அன்புக்கு பாத்திரமாக தோழர் து.ஜானகிராமன் தமாஷாக, சார், சென்னை ரத்னா கேப் ஓட்டல் போண்டா 8 ரூபாய் விற்கிறது. இந்த ஊதிய உயர்வு போதாது என தெரிவித்ததை நிர்வாகம் ஏற்றுக்கொண்டு ரூ.8 உயர்வு அளித்தது. மூன்று அனல் மின்நிலையங்களில் முதன் முதலில் 23 ரூபாய் பெற்று வந்த தொழிலாளிக்கு 8 ரூபாய் சேர்த்து ரூபாய் 31 கிடைத்தது. படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் ஊதிய உயர்வு பெற்று நான்கு அனல்மின் நிலையங்களில் கள உதவியாளர்க ளுக்கான ஊதியத்தை அடையும் நிலை ஏற்பட்டது. 

சொசைட்டி தொழிலாளர்

அரசு ஆணை மூலம் ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்ட இடங்களில் ஒப்பந்த தொழிலாளர் சட்டம் 1970-ன் படி ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து வேலை வாங்க தொழிற்சாலை துறை அனுமதி வழங்க வில்லை. மின்வாரிய சொசைட்டி தொழிலாளர்க ளுக்கு இதே நிலையே. இந்தப் பின்னணியில் சொசைட்டி தொழிலாளர்களுக்கு முதன் முதலில் போனஸ் பெறப்பட்டது. தோழர் எஸ். பஞ்ச ரத்தினம், சொசைட்டி தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நிரந்தரத்திற்கு  இட்டுச் சென்ற போராட்டம்

இதனிடையே, மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொடுத்த போனசை திரும்பப் பெற மின்வாரியம் முடிவெடுத் தது. அதை எதிர்த்து 11 நாட்கள் வேலை நிறுத்தம்  நடைபெற்றது. மின் உற்பத்தி நின்றதால் அரசு தவிர்த்து விட்டது. இந்த நிலையில்,அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் சிஐடியு தலைவர்க ளான டி.கே. ரங்கராஜன், அ.சவுந்தரராசன், எஸ்.பஞ்ச ரத்தினம் ஆகியோரை அழைத்துப் பேசியதன் பேரில் வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேட்டூர் அனல் மின் நிலையப் போராட்டத்துடன் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டமே நிரந்த ரத்திற்கான ஒப்பந்தம் காணும் போராட்டமாக ஆனது.  ஒப்பந்தத்தை உருவாக்கும்போது ஒரு வருடத்திற்குள் நிரந்தரம் செய்யப்படும். தகுதியான வர்களை மட்டும் நிரந்தரம் செய்யப்படும் என்று அப்போது ஷரத்து சேர்க்கப்பட்டது. அதை சிஐடியு ஏற்க மறுத்தது. இதனிடையே, சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.  அதை எதிர்த்துத் தான் நிர்வாகம் மேல் முறையீடு செய்ய முயற்சித்தது. ஆனால், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தின் முடிவை புறந்தள்ளி, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டாம் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உத்தரவு இட்டார். அத்தீர்ப்பில், தகுதியானவர்களுக்கு மட்டும் நிரந்தர பணி அளிப்பது என்பதை நீதிமன்றம் ஏற்கவில்லை. ஒப்பந்த முறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் எப்படி பணியாற்றினர்களோ, அவர்களை அப்படியே  நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் வானூர்தி வழக்கை ஏற்று உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த மாபெரும் போராட்டம், தீர்ப்பு மற்றும்  உத்தரவுகளைத் தொடர்ந்து, நிரந்தர தொழிலாளர்க ளின் கடைமட்ட ஊழியருக்கு என்ன ஊதியம் மற்றும் என்ன சலுகைகள் வழங்கப்பட்டதோ அதனை 30 ஆல் வகுத்து பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் வழங்க மின்வாரியம் உத்தரவு வெளியாகியது.

கலைஞர் தீர்மானம்

தமிழக அரசு நிரந்தரத்திற்கு தயாராக உள்ள  தொழிலாளர்களை 16.04.98 ன் தீர்ப்பு படி நிரந்தரம் செய்திட முடிவுக்கு வந்தது. அன்றைய முதல்வர்  கலைஞர் அவர்கள் 7.4.99 இல் தமிழக சட்ட மன்றத்தில் எட்டாயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்திட தீர்மானம் முன்மொழிந்து நிறை வேற்றினார்.  அரசின் தீர்மானம் மற்றும் ஆணைகளைத் தொடர்ந்து, மே.1 அன்று டர்பைன், அனல், புனல் மற்றும் கேஸ் டர்பைன் பகுதிகளில் பணியாற்றிய எட்டாயிரம் தொழிலாளர்கள் அப்படியே நிரந்தரம் செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்புப்படி அவரவர் தகுதிக்கு ஏற்ற பணி அளிக்க ஒப்புக்கொள்ளப் பட்டது. 850 பட்டயப் பொறியாளர்கள் தொழில் நுட்ப பணிக்கு சென்றனர். 250 க்கும் மேற்பட்ட பட்டப் பொறியாளர் உதவி பொறியாளர் ஆனார்கள்.

சிஐடியு பங்கு

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பணி நிரந்தர உத்தரவை மின்வாரியம் வெளியிட்ட நாள் ஏப்ரல் 19 ஆகும். பணிக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது.  இந்த மாபெரும் போராட்டத்தை சுரண்டலுக்கு எதிரான போராட்டமாக மே. 1 ஆம் நாள் அன்று நிரந்தரம் ஆன வர்கள் நினைப்பது சரியே. போராட்டமே வாழ்வை  நிர்ணயித்தது. போராட்டத்தில் நிரந்தர தொழிலாளர்க ளும் பங்கேற்க வைத்ததில் சிஐடியுவின் பங்கு பிரதானம். இப்போதும், நவீன தாராளமயக் கொள்கையின் தீவிர அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, நிரந்தரத் தன்மை வாய்ந்த தொழில்களில் “ஒப்பந்த முறை’’ என்னும் சுரண்டல் முறை இன்றும் தீவிரமடைந்துள் ளது. அதை எதிர்த்து, அனைத்து தொழிலாளர்களும் நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ற போராட்டங்கள் தொடர்கின்றன.

கட்டுரையாளர் : முன்னாள் தலைவர்,  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு).




 

;