articles

img

2024 மே தினச் சூளுரை ஏஐடியுசி - சிஐடியு கூட்டறிக்கை

சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் ம.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:

உழைக்கும் மக்கள் உரிமைப் போரில் பங்கேற்ற அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.   உலகில் வறுமை, சுரண்டல், சமூக அநீதி போன்றவை பாட்டாளி வர்க்கத்தைச் சூழ்ந்துள்ளது;  தீவிர தேசியவாதம், பண்பாட்டுப் பிரிவினைவாதம் ஆகியவற்றோடு பாசிசம் கை கோர்த்துள்ளது. அப்பா விகளான பாலஸ்தீன மக்களின் மேல் இஸ்ரேல்  மிருகத்தனமான இனப்படுகொலை  தாக்குதலைத் தொடுத்துள்ளது. ஜனநாயகம்  மற்றும் தொழிற் சங்க உரிமைகள் மீதான கடுமையான புதிய, புதிய தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் தொழிலா ளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை கொடூரமாகப் பாதித்துள்ளது.  தனியார்மயமாக்கல், ஒப்பந்தம், அவுட்சோர்சிங், டெலிவொர்க்கிங் மற்றும் “சேவைக் குத்தகை”  போன்றவை இந்த கடுமையான நவதாராளவாத தாக்கு தலின் வடிவங்கள் ஆகியுள்ளன. இவற்றுக்கு எதிராக உலகின் பல நாடுகளில் தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.

பாலஸ்தீனத்தின் மீதான உடனடியான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி  தொழிற்சங்கங்கள் பிற மக்கள் அமைப்புகளுடன் சேர்ந்து அமெரிக்காவில் பிரம்மாண்டமான கூட்டணி உருவெடுத்துள்ளது. 

பின்லாந்து, இலங்கையில்...

உலகின் பல சிறந்த சமூக நலத் திட்டங்களுக்கு நன்கு அறியப்பட்டது பின்லாந்து.  ஆனால் தற்போ தைய  அமெரிக்க ஆதரவு, நேட்டோ-சார்பு பின்லாந் தின்  வலதுசாரி பிரதமர் பெட்டேரி ஓர்போ, தொழிலாளர் உரிமைகள் மீதான   தடைகள் மூலம் தொழிற்சங்கங்க ளை உடைக்க முயற்சிக்கிறார். அதற்கு ஃபின்னிஷ் தொ ழிற்சங்கங்களின் மத்திய அமைப்பு (SAK) அரசியல் பொது வேலைநிறுத்தங்கள் மூலம் பதிலளித்துள்ளன.  இலங்கையில்  வேலை நேரத்தை  அதிகரித்தல், நியாயமற்ற பணிநீக்கம், தொழிற்சங்கத்தின் கூட்டுப் பேர உரிமைகளை அகற்றுதல் போன்ற வகையில் 13 தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி புதிய வேலை வாய்ப்புச் சட்டத்தை  அரசாங்கம் முன்மொழிந்துள் ளது. இதனை எதிர்த்த தொழிற்சங்கங்களின் போராட்டம் வீச்சுடன் நடைபெற்று வருகிறது.  இந்தியாவில் இரயில்வேயில் ஒட்டுமொத்தமாக தனியார்மயம் நடந்து கொண்டிருக்கிறது. அரசிடம் இருந்த படைக்கலன் ஆலைகள் நிறுவனமய மாக்கப் பட்டுள்ளன. ஆயுதங்களும், வெடிமருந்துகளும் உற்பத்தி செய்யும் உரிமம் பன்னாட்டு கம்பெனிக ளுக்கு தரப்படுகின்றன. நிலக்கரி, பாதுகாப்பு, தொலை பேசி, விமான நிலையம், பொதுக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, சுரங்கம், மருந்து, துறைமுகம், சாலைப் போக்குவரத்து, மின்சாரம், இரும்பு, எண்ணெய், கனரக இயந்திரங்கள் போன்றவைகளில் தனியார் மயமாக்கம் நடைபெறுகின்றன.

முறியடிக்கப்பட்ட  மோடி அரசின் சட்டங்கள்...

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் (NDA-1) பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்ப தற்கென தனியாக ஒரு அமைச்சகத்தையே வைத்தி ருந்தார். இப்போது அந்தப் படுபாதகச் செயல் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கும் விகிதம் உலகிலேயே  மிகவும் குறைவாக உள்ள நாடு இந்தியா  எனும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறு வனங்களை தனியார்மயமாக்குவது சுயச்சார் பின்மைக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது.  இந்திய தொழிலாளர்கள் 150 ஆண்டு காலம் போரா டிப் பெற்ற ஊதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு,  சமூகப் பாதுகாப்புகளை உள்ளடக்கிய 44 சட்டங்களை மோடி அரசு மாற்றியது. அதற்குப் பதிலாக சத்தற்ற சக்கையாக, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு களை கொண்டு வந்தது. அந்தச் சட்டங்களை கடந்த நான்கு ஆண்டுகளாக செயலுக்கு கொண்டு வர முடியாமல் இந்திய தொழி லாளி வர்க்கம் ஒன்றுபட்ட போராட்டங்களால் தடுத்தி ருக்கிறது. இவ்வாறு விவசாயிகளுக்கு எதிரான சட்டங்க ளை 700க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொடுத்து விவசாயிகள் கிழித்தெறிந்திருக்கிறார்கள். சர்வ வல்லமை பெற்றவர் என்று பாஜகவினரால் போற்றப் படும்  மோடியே நினைத்தாலும், அதை விவசாயிக ளும் தொழிலாளர்களும் ஒன்றுபட்டுப் போராடி முறிய டிக்க முடியும் என்பதை அனுபவம் நிரூபிக்கிறது.

ஐஎல்ஓ -வின் அறிக்கை

அந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றா லும் கூட, ஏற்கனவே இருக்கும் சட்டங்களை செயல் படுத்துவதை அரசு கைவிட்டு விட்டது. தொழிலா ளர்களின்  உண்மை ஊதியம் மேன்மேலும் குறைந்து கொண்டிருக்கிறது. வேலை செய்பவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் எந்த சட்டப் பாது காப்புமற்ற அமைப்புசாரா தொழிலாளர்களாக இருக்கி றார்கள். நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக குறைந்து கொண்டிருக்கிறது. கல்வி,  வேலைவாய்ப்பு, பயிற்சி ஆகியவற்றைப் பெறுவதில், ஆண்களை விட பெண்கள் ஐந்து மடங்கு பின்தங்கி இருக்கிறார்கள்  என்று ஐஎல்ஓ அறிக்கை தெரி விக்கிறது.  ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் அகற்றுதல்) சட்டம், 1970-இன்படி இருந்த குறைந்தபட்ச சட்டப்பாதுகாப்பையும் முற்றாகப் போக்கும் வகையில்   அவுட்சோர்ஸ் முறை அறிமுகப் படுத்தப்பட்டு பரவலாகி வருகிறது. இதனால் செல் வத்தை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் சுரண்ட லுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் கூலி அடிமைக ளாக நடத்தப்படுகிறார்கள். 30 கோடி தொழிலா ளர்கள், கிக், பிக்ஸட் டேம், நீம் மற்றும் திட்ட ஊழியர்கள் எனும் பெயர்களில் தொழிலாளர் என்ற வரையறை யில் இருந்தே விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர்.      27 கோடியே 73 லட்சம்   தொழிலாளர்களின் எதிர் காலத்திற்கான சேமிப்புகளைப் பராமரித்துவரும் தொழிலாளர் பிராவிடண்ட் ஃபண்ட் சேமிப்புப் பணம், கார்ப்பரேட்டுகள் நலனுக்காக,  பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவது, தொழிலாளர்களின் எதிர் காலத்திற்கு கேள்விக் குறியாகி உள்ளது. 

வெற்று விளம்பர ‘இ’ஷ்ரம்...

‘இ’ ஷ்ரம் எனும் பெயரில் 30 கோடி தொழிலாளர்க ளை வெற்று விளம்பரத்திற்காக பதிவு செய்தனர். அவர்கள் நலனுக்காக இதுவரை ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.  மாநில அரசுகளால் நடத்தப்படும் கட்டிட தொழிலா ளர் நல வாரியங்களை செயலிழக்கச் செய்து, அதில் உள்ள ரூபாய் ஒரு லட்சம் கோடி தொழிலாளர் பணத்தை ஏப்பம் விட ஒன்றிய அரசு முயல்கிறது. ஆண்டுக்கு 25 நாள் கூட வேலையளிக்க முடியாத அளவுக்கு கிராமப்புற 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது. சுமார் 6 கோடி தொழிலாளர்கள் வேலை அட்டை பெற்றிருந்தும் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி அவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.   ஒவ்வொரு ஆண்டும் 70 முதல் 80 லட்சம் இளை ஞர்கள் வேலை வாய்ப்பு தேடி    வருகிறார்கள்.  ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் 5.7 சதவீதத்தில் இருந்து 17.5சதவீதமாக அதிகரித் துள்ளது. அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், வேலை கிடைக்காத இளைஞர்களின் எண்ணிக்கை இரு மடங்காகி இருக்கிறது. வேலை கிடைக்காத மக்கள் தொகையில் 83 சதவீதம் பேர் 34 வயதுக்கு கீழுள்ள இளைஞர்கள் என்று ஐஎல்ஓ  தெரிவிக்கிறது. 

நெருக்கடியில் தவிக்கும்  சிறு, குறு, நடுத்தர தொழில்

கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வரும் சிறு, குறு,நடுத்தர தொழில் கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. பெருந் தொற்று, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மூலப்பொருள் விலையேற்றம்,  உற்பத்திப் பொருள் இறக்குமதி போன்ற காரணங்களால் 2 கோடிக்கும் அதிகமான சிறு குறு நடுத்தரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள் ளன. வேலை செய்து பொருள் ஈட்டுவதாகச் சொல்லப் படுபவர்களின் எண்ணிக்கையில் 58 சதவீதம் -அதாவது ஒன்பதரை கோடிப் பேர்- சுயதொழில் புரிப வர்களாவர். இவர்களில் பெரும்பாலோர் ஈட்டுவது அற்பத் தொகைகளே ஆகும். விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, தவிர்க்க  முடியாத செலவினங்கள் அதிகரிப்பதால்   உலகத்தில் மிகக் கடும் பட்டினியில் உள்ள 16 நாடுகளில் ஒன்று இந்தியா  என்னும் நிலை ஏற்பட்டுள்ளது. புரதச் சத்து குறைபாட்டால் 36 விழுக்காடு   குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கிறார்கள், 38 விழுக்காடு குழந்தை கள் வளர்ச்சிக் குறைபாட்டுடன் உள்ளனர். ஜிஎஸ்டி வரி மூலம் வசூலிக்கப்படும் தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே போகி றது. சாமானிய மக்களிடமிருந்து 67 சதவீதம் வசூலிக் கப்படுகிறது.  ஆனால் பெரும் பணக்காரர்களான 10 சத வீதம் பேர் வெறும் 3 சதவீதம்தான் வரியாகச் செலுத்து கிறார்கள். கார்ப்பரேட் வரி 32 சதவீதம் வரை இருந்தது. இப்போது அது 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டு விட்டது. 1 சதவீதம் என்பது 50 ஆயிரம் கோடியை விட அதிகம்.

வறுமை ஒழிப்பு: பொய் தம்பட்டம்

2014 ஆம் ஆண்டில் மாத வருவாய் நகரங்களில் ரூ.1407 என்று வறுமைக்கோடு வரையறுக்கப்பட்டு இருந்தது.  அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி, 10 ஆண்டு களில் வறுமை கோட்டு வருவாய் ரூ.2279 என்று உயர்ந்தி ருக்க வேண்டும். ஆனால் 2023இல் நகர்ப்புற வறு மைக்கோட்டு வருவாய் ரூ.1286 என்று, 2014ல் இருந்ததை விட குறைவாக வரையறுத்தது. 2014ம் ஆண்டை விட குறைவான வருவாயை நிர்ணயித்து விட்டு, 25 கோடி பேரை வறுமை கோட்டிலிருந்து மீட்டுள்ளதாக  பாஜக அரசு பொய்யாக தம்பட்டம் அடிக்கிறது.   இந்தியாவின் பொதுக் கடன் உள்நாட்டு உற் பத்தியை விட (GDP) 82.3 சதவீதமாக அதிகரித் துள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்திய குடும்பங்களின் கடன் அதிகரித்து சேமிப்பு  வீழ்ந்துள்ளது, நாட்டின் பொருளாதாரம் ஆபத்தில் உள்ளது. மக்கள் வறுமையிலும், கடன் வலையிலும்   சிக்கித் தவிக்கின்றனர். நாட்டின் செல்வம் குறிப் பிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் குவிந் துள்ளது.  குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடிய விவசாயி களுக்கு தந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை.  தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் போராட்டங்களின் போது எதிரி நாட்டு ராணுவத்தை எதிர் கொள்வது போன்ற மூர்க்கத்தனத்துடன் பாஜக அரசு கடுமையான தாக்குதல்களை தொடுத்தது.   ராமர் கோவில் திறப்பு விழா கைகொடுக்கும் என்று பாஜக அரசு நம்பியது. சட்டப் பூர்வமான தேர்தல் பத்திர மோசடியை உச்ச நீதிமன்றம் தடை செய்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு  விதிகள் உருவாக்கியது. பொய், மோசடி,ஊழல், ஊதாரித்தனம், ஆணவம், சர்வாதிகாரம், மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல் இவற்றின் மொத்த உருவமான மோடி ஆட்சியை வீழ்த்தி நாட்டை காப்போம் எனும் முழக் கத்துடன் மத்திய தொழிற்சங்கங்களும், ஐக்கிய விவ சாயிகள் முன்னணியும் இணைந்து போராடி வரு கிறோம். இந்த நிலையில் 18 ஆவது மக்களவை தேர்தல் நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி பாஜக மோடி ஆட்சி அகற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியான செய்தி வெளி வரும் நிலை உருவாகியுள்ளது. 

தொடர வேண்டிய  உரிமை மீட்புப் போராட்டங்கள்...

இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொழிலாளர், விவசா யிகள்  போராட்டங்களில் ஆதரவளித்தன; ஜனவரி 30, ஆகஸ்ட் 24 தேதிகளில் தில்லி மாநாட்டு பிரகடனங்க ளை மத்திய தொழிற்சங்கங்களும், ஐக்கிய விவசாய முன்னணியும் இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு தந்துள்ளன. கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளும்  உறுதி அளித்துள் ளன.  ஆட்சி மாற்றத்தின் விளைவாகவும், தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரிப்பாலும்   இழந்த உரிமைகளை மீட்பதற்கு வழி பிறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உரிமை மீட்புப் போராட் டங்களை வெற்றியை நோக்கி தொடர்வோம்.  தோழர் சிங்காரவேலர் இந்தியாவில் முதல் மே தினம் கொண்டாடிய  நூற்றாண்டை கொண்டாட கடந்த ஆண்டு தயாரான போது, தமிழ்நாட்டில் தொழிலாளர்க ளின் வேலைநேரத்தை அதிகரிக்கும் தொழிற்சாலை சட்டத்திருத்தத்தை முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்தது.   தமிழ்நாட்டின் தொழி லாளி வர்க்கத்துடன் மக்களும் இணைந்து போராடி னர். அந்த சட்டத்திருத்தம் திரும்பப் பெறப்பட்டது.   போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக், டிஎன்சி எஸ்சி, ஆவின், மருத்துவம், உள்ளாட்சி  உள்ளிட்ட தொழிலாளர்களின் நியாயமான, நீண்ட நாள் கோரிக்கைகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்ட அம லாக்கம் கானல் நீராக உள்ளது.  போக்குவரத்து, மின்சாரம், சிவில் சப்ளை  போன்ற கேந்திரமான நிறுவனங்களில் ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் போன்ற பெயர்களில் நிரந்தரமற்ற, சட்டப் பாதுகாப்பு ஏதுமற்ற தொழிலாளர்கள் நுழைக்கப் படுகிறார்கள்.

தொழிலாளர்  வரையறைக்கு வராமல்...

ஐசிடிஎஸ், ஆஷா, மக்களைத் தேடி மருத்துவம், டெங்கு கொசு ஒழிப்பு, அமரர் ஊர்தி, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போன்ற திட்ட ஊழியர்களை தொழிலாளி என்ற வரையறைக்குள் கொண்டு வராமல் கடுமை யான உழைப்புச் சுரண்டல்  நடைபெறுகிறது. நிரந்தரத்தன்மை வாய்ந்த பணிகளுக்கு வேட்டு வைக்கப்படுகிறது.   உள்ளாட்சி  துறையில் கீழ் நிலை யில் பணி அனைத்தும் அவுட்சோர்சிங்  செய்யப்படு கிறது. சமூகத்தின் அடித்தட்டில் உழல்கிற ஒடுக்கப் பட்ட மக்களின் உரிமைகளை பறித்து, முந்தைய நிலையை விட மோசமாக ஊதியத்தை குறைத்து, வேலைப்பளுவை அதிகரித்து, ஆட்குறைப்பை  திணிக்கிறது. நிரந்தரத் தொழிலாளர் என்ற நிலையே இனி இல்லை எனும் நிலை உருவாக்கப்படுகின்றது. இது  தமிழ்நாடு அரசின் சமூக நீதிக் கோட்பாடுக ளுக்கு விரோதமானதாகும்.  சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேர உரிமை மறுக்கப்படுகிறது.   தலையிட வேண்டிய தொழிலா ளர் துறை, மாநில அரசின் கொள்கைகளுக்கு விரோத மாக, ஒன்றிய அரசின் சட்டத் தொகுப்புகளை வரவேற்று அமலாக்க ஆயத்தமாக உள்ளது.  

அமைப்பு சாராத் தொழிலாளர்கள்...

செயலி மூலமாக, உணவு உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் ‘கிக்’ ஊழியர்கள் பணிப் பாதுகாப்பற்ற சூழலில் குறைந்த  வருவாயில் பணியாற்றுகிறார்கள்.   இவர்களை தொழி லாளர் சட்டத்திற்குள் கொண்டு வர வேண்டிய நிலை யில், அமைப்புசாராத் தொழிலாளர் வாரியத்தில் சேர்க்க மட்டுமே தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.     நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை கறாராகச் செயல்படுத்த வேண்டிய கடமையைக் கொண்ட மாநில அரசாங்கமே, அதைவிடவும் ஆகக் குறைந்த ஊதியத்தை வழங்கலாம் என்று துறைவாரி யான அரசாணைகள் வெளியிடுகிறது.  நிரந்தரமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையாணைகள் சட்டத் திருத்தம், பல ஆண்டுகளுக்கு பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. அதற்கு விதிகள் உருவாக்கி அமல்படுத்துவதற்கு மாறாக அந்த சட்டத் திருத்தத்தையே  நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பெரும் காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது.   

போராட்டங்களைத் தொடர்வோம்

கட்டிடம் மற்றும் இதர உடல் உழைப்புத் தொழிலாளர் வாரியங்களில் பதிவு செய்வதும், நிதிப் பயன்கள் பெறுவதும் பெரும் கஷ்டமாக உள்ளது. இதுவரை ஆன்லைன் முறை வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆன்லைன் முறை ஏராளமான குளறுபடிகளைக் கொண்டதாக இருக்கிறது. வருடக் கணக்கில் அதை சரி செய்யாமலேயே, தொழிலாளர்களை அலைக் கழிக்கும் முறை நல்லதல்ல. நிதிப் பலன்களும்  பாரபட்சமாக வழங்கப்படுகின்றது. நல வாரியங்கள் எந்த அதிகாரமும் இன்றி பெயரளவுக்கு செயல் படுத்தப்படுகின்றன.  அரசு எடுக்கும் முடிவுகளை பின்னேற்பு செய்வதற்காக ஒரு வாரியம் அவசியமே இல்லை. சட்டமன்றத்தின் நிதி நிலை அறிக்கை கூட தொழி லாளர் நலன் என்பதை விட்டுவிட்டு விவாதிக்கும் அளவிற்கு சுருங்கிப் போனது.   தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதம் ஒற்றுமையும், போராட்டமும், சர்வதேசியமும் ஆகும். அந்த ஆயுதம் கொண்டு தொழிலாளர், விவசாயிகள், மக்கள் உரிமைகளை   மீட்கும் போராட்டங்களைத் தொடர் வோம் என்று  இந்த மே நாளில் சபதமேற்போம். தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக! மே தினம் நீடூழி வாழ்க!புரட்சி ஓங்குக!




 

 

 

;