தமிழகம்

img

எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுக!  நிதின்கட்காரியிடம் தமிழக எம்.பி.க்கள் மனு

 புதுதில்லி, ஜூலை 11- சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்தை கைவிடக்கோரி இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இத்திட்டத்தால் பாதிக்கப் பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன், தருமபுரி மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி கெளதம்சிகாமணி, திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை, காஞ்சிபுரம் கணேசன்செல்வன் ஆகியோர் தில்லியில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். “சேலம் -சென்னை இடையே ஏற்கனவே 3 நெடுஞ்சாலைகள் உள்ளன. சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பிற மாநிலங்களுக்கும் செல்ல சுற்றுச்சாலை வழியாக செல்லவேண்டும். சென்னை-வண்டலூர் மற்றும் சென்னை-காஞ்சிபுரம் வரை உள்ள குறுகிய வழித்தடமே போக்குவரத்து நெரிசலுக்கு  முக்கிய காரணமாகும். இந்த வழித்தடத்தை அகலப்படுத்தினாலே சென்னை-சேலம் பயண நேரத்தை வெகுவாக குறைக்க முடியும். மேலும், புதியதாக அமைய உள்ள 8 வழிச்சாலை திட்டத்திலும் இதற்கான வரைதிட்டம் இல்லை. ஏற்கனவே உள்ள 3 சென்னை-சேலம் வழித்தடங்களுக்கும், புதியதாக அமைய உள்ள 8 வழிச்சாலைக்கும் 40 கிலோ மீட்டர் மட்டுமே பயணதூரம் குறைவு. இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் விரயம் செய்வது மற்றும் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிப்பது ஏற்புடையதல்ல. இதனால் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். மேலும் 8 வழிச்சாலை திட்டம் அறிவித்த நாள் முதல் விவசாயி கள் உடைமைகளையும், நிலங்களையும் பாதுகாக்க குழந்தை களுடன் போராடி வருகின்றனர். எனவே, சென்னை-சேலம் சென்றுவர ஏற்கனவே உள்ள 3 சாலைகளை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விரிவுபடுத்த வேண்டும்” என அவர்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

;