india

img

வெறுப்பைக் கக்கிய பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்?

புதுதில்லி:
தில்லியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கிய பாஜக தலைவர்கள் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் வர்மா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்என்று, தில்லி, காவல்துறை ஆணையருக்கு  தில்லி கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்பிருந்தா காரத், தில்லி மாநில செயலாளர் கே.எம். திவாரி ஆகியோர் தாக்கல்செய்திருந்த மனுவின் மீது, கூடுதல்தலைமை நீதித்துறை நடுவர் இவ்வாறு அறிவிப்பு அனுப்பியுள்ளார்.அனுராக் தாகூர், பர்வேஷ் வர்மா ஆகியோரின் வெறுப்பைக் கக்கும் பேச்சுக்கள் தொடர்பாக பிருந்தா காரத் மற்றும் கே.எம். திவாரி  ஏற்கனவேதில்லி காவல்துறை ஆணையருக்கும்,நாடாளுமன்ற வீதி காவல் நிலையஅதிகாரிக்கும் கடிதங்கள்  எழுதியிருந்தார்கள். ஆனால் அக்கடிதங்கள் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பிருந்தா காரத்தும் கே.எம்.திவாரியும் இப்போது நீதிமன்றத்தை அணுகியுள்ளார்கள்.

இவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில் இவ்வாறு வெறுப்பைக் கக்கிய பாஜக தலைவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம்153-ஏ, 153-பி, 295ஏ, 298, 504, 505, 506 ஆகிய பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள மேற்படி அனுராக் தாகூரும்,பர்வேஷ் வர்மாவும் வன்முறையைத்தூண்டும் விதத்தில் பேசிய பின்னர்தான் தில்லியில் அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது கயவர்களால் மூன்று இடங்களில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளன. தன்னுடைய பதிலை பிப்ரவரி 11க்குள் அளித்திட வேண்டும் என்று காவல்துறை ஆணையரை நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது. (ந.நி.)

;