headlines

img

இதுதான் மோடியிசம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் குறுகிய தேர்தல் ஆதாயத்திற்காக தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாகவும் மிகவும் தரம் தாழ்ந்த முறையிலும் பேசி வருகின்றனர். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் கடந்த ஐந்தாண்டுகளாக நடந்து வந்தது. தன்னுடைய ஆட்சியின் சாதனைகளையோ, கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறித்தோ மோடி எதுவும் வாய் திறப்பதில்லை. மாறாக, இந்தியாவின் ராணுவத்தைப் பற்றியும், பாதுகாப்புத் துறை பற்றியும் மட்டுமே மோடி பேசி வருகிறார். இதைக் குறிக்கும் வகையில்தான் தன்னுடைய பெயருக்கு முன்னால் ‘‘சவுகிதார்’’ என்று அவர் போட்டுக் கொண்டார். உடனே தொற்று நோய் போல அனைத்து பாஜகவினரும் தாங்களும் ‘‘சவுகிதார்’’ என்று போட்டுக்கொண்டார்கள். 


புல்வாமா தாக்குதலை தடுக்கத் தவறியது மோடி ஆட்சிதான். இந்த தாக்குதல் குறித்து பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் உள்ளன. இவையனைத்தும் மோடி அரசை நோக்கியே எழுப்பப்படுகின்றன. ஆனால் மோடியும், அமித்ஷாவும் எதிர்க்கட்சிகள் ராணுவப்பலத்தை சந்தேகின்றனர், ராணுவ வீரர்களைஇழிவுபடுத்துகின்றனர் என திசை திருப்புகின்றனர். ஆனால் பிரதமர் மோடி கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் புல்வாமா தியாகிகள் பெயரால் வாக்களியுங்கள் என்று பேசி வருகிறார். இதுதான் உண்மையில் வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவது ஆகும்.அபிநந்தன் மீட்கப்பட்டது குறித்தும், மோடிதேர்தல் பிரச்சாரத்தில் பேசி வருகிறார். பாகிஸ்தானுக்கு தாம் விடுத்த மிரட்டல்காரணமாகவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டதாக மோடி தேர்தல் பரப்புரையில் கூறுகிறார். இது உண்மையா என்பது ஒருபுறமிருக்க, தேர்தல்பிரச்சாரத்தில் இதை பேசுவது முற்றிலும் பொருத்தமற்றது விதிமுறைகளுக்கு மாறானது.இந்தியா எப்போதும் அமைதி மற்றும் சமாதானத்தின் பக்கமே நின்று வந்துள்ளது. ஆனால் மோடி அரசு சுயேச்சையான அயல்துறை கொள்கையை கைவிட்டு அமெரிக்காவுக்கு ஆதரவான அயல்துறை கொள்கையை பின்பற்றுகிறது. இந்தியாவிடம் அணுகுண்டுகள் தீபாவளிக்காகவா வைக்கப்பட்டிருக்கின்றன என்று மோடி பேசியுள்ளார். 


இது அண்டை நாடுகளிடையே பகைமையை வளர்க்கவும், அணு ஆயுத மோதலை உருவாக்கவுமே பயன்படுமேயன்றி இந்தியா மற்றும் உலக நலனுக்கு உதவியாக இருக்காது. அணுஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று கூறிவாக்கு கேட்பது என்பது மோடி வகிக்கும் பிரதமர்பொறுப்புக்கு முற்றிலும் பொருத்தமற்றது. இத்தகைய விவாதங்கள் எளிதாக உணர்ச்சியை கிளறிவிடலாமேயன்றி இந்தியாவின் நலனுக்கு ஏற்றதல்ல.காலாவதியாகிக் கொண்டிருக்கும் தன்னுடைய அரசை காப்பாற்றும் கடைசி முயற்சியாக நாட்டின் பாதுகாப்பை பணயமாக வைக்கிறார் மோடி. இத்தகைய பொறுப்பற்ற ஒருவர்மீண்டும் பிரதமராக வராமல் இருப்பதற்காகவாவது பாஜகவும் அதன் கூட்டாளிகளும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

;