headlines

img

தேர்தல் ஆணையம் தோல்வியை தழுவியது

தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது என்று தலைமை தேர்தல் அதிகாரி பெருமிதத்தோடு கூறிக்கொண்டாலும் தேர்தலை அமைதியாக நடத்தாமல் இருக்க தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என்பதையும் மறுப்பதற்கில்லை. அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பிரச்சாரம் செய்தது.மக்களிடம் குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்திருப்பது நல்ல அறிகுறியாகும். ஆனால் சென்னையிலிருந்து மாநிலத்தின் பல பகுதிகளுக்கு பயணம் செய்ய வந்தவர்களுக்கு உரிய பேருந்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல, பேருந்துவசதி கேட்டவர்கள் மீது தடியடி நடத்தியது உச்சகட்ட கொடுமையாகும். இதுகுறித்து கேட்டதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் மாநிலஅரசு எதுவும் செய்ய முடியாது என்று நழுவிக் கொள்கிறார். தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து கவலைப்பட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. 


வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது முற்றிலும் பாரபட்சமான நடவடிக்கையாகும். தேனி உட்பட பல்வேறுதொகுதிகளில் மத்திய, மாநில ஆளும் கட்சியினர் பணத்தை வெள்ளமென பாயவிட்ட போதும் தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் கண்களை இறுக மூடிக்கொண்டு விசுவாசம் காட்டின.தேர்தலன்று வாக்குச்சாவடிகளை கைப்பற்றுமாறு பாமக தலைவர் அன்புமணி பகிரங்கமாகவே தன்னுடைய கட்சியினரை தூண்டிவிட்டார். இதுகுறித்து புகார் அளித்த போதும் தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாமக மற்றும் பாஜகவினரின் வெறியூட்டும் பேச்சுக்கள் காரணமாகவே சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில்பாமக மற்றும் இந்து முன்னணியினர் சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கிராமத்தில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாகவும் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகவும் எழும் புகார் குறித்து தேர்தல் ஆணையம் கள்ள மவுனம் சாதிக்கிறது. 


கரூர் மக்களவைத் தொகுதி தேர்தலை நிறுத்தி விடுவேன் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டதேர்தல் அதிகாரியுமான அன்பழகன் வெளிப்படையாகவே மிரட்டியுள்ளார். பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆளும் கட்சியினரின் கைப்பாவையாகவே செயல்பட்டதும், தேர்தல் ஆணையமும் இதைக் கண்டுகொள்ளாததும் வெட்கக்கேடானது. கன்னியாகுமரி தொகுதியில் சிறுபான்மை மற்றும் மீனவ மக்களின் வாக்குகள் திட்டமிட்டேவாக்காளர் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. பாஜக தூண்டுதலின்றி இது நடந்திருக்க வாய்ப்பில்லை. இதே போல மாநிலம் முழுவதும் ஏராளமானோரின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பது அவர்களது ஜனநாயக உரிமையை பறிப்பதாகும். தேர்தல் முடிவுகள் வருவது தாமதமானாலும் ஒன்று மட்டும் தெரிகிறது, தேர்தலை நேர்மையாக நடத்துவதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்து விட்டது.

;