tamilnadu

img

நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்றும் வழக்கு

மதுரை:
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக உதவிப்பேராசிரியர் நிர்மலாதேவி மீதானவழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடா மல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி, அதே கல்லூரி மாணவிகள் சிலரைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலை., உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்புசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை.யாருக்காக நிர்மலாதேவி அவ்வாறு செய்தார் என விசாரிக்கவில்லை. சிபிசிஐடி காவல்துறையினர் நியாய மாக விசாரிக்காமல் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி வசமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த நிலையில் திங்களன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்ஆஜரான வழக்கறிஞர், “மாணவி களிடம் 164-ஆவது பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறவில்லை. பேரா. நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை. ‘உயரதிகாரிகள் என்ற ஒற்றை வார்த்தையில்’ சுருக்கிவிடும் காவல்துறை, அவர்கள் யார் என விசாரிக்கவில்லை. பல்கலை க்கழகப் பதிவாளர், வேந்தர், துணை வேந்தர், உயர்கல்வித்துறை செயலர், உயர்கல்வித்துறை அமைச்சர் என அனைவரும் உயரதிகாரிகள் என்ற பட்டியலுக்குள் வரும் நிலையில், அந்த உயரதிகாரி யார் எனக் கூறவோ, அவர்களிடம் விசாரிக்கவோ இல்லை. இந்தச் சூழலில்  விசாரணை தொடர்ந்து நடைபெற்றால் சரியான தீர்வு கிடைக்காது. ஆகவே, வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். 

அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,” வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. வழக்கு விசா ரணை முறையாகவே நடைபெற்று வருகிறது. ஆகையால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை” என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

;