tamilnadu

img

குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களை மட்டும் பிரிப்பதை ஏற்க முடியாது... பேராயர் அந்தோணி பாப்புசாமி பேச்சு

மதுரை:
முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு உள்ளது என்று மதுரை உயர் மறைமாவட்ட பேராயரும் தமிழக ஆயர் பேரவை தலைவருமான  அந்தோணி பாப்புசாமி கூறினார்.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மூன்றாவது மாநில மாநாடு மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டை துவக்கிவைத்து மதுரை உயர் மறைமாவட்டபேராயரும் தமிழக ஆயர் பேரவை தலைவருமான  அந்தோணி பாப்புசாமி பேசியதாவது, “மதுரையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்நலக்குழு புத்தெழுச்சியோடும் புத்துணர்ச்சியோடும் செயல்பட்டு வருகிறது. சிறுபான்மை மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அங்குமுதலில் சென்று அவர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.  சிறுபான்மை மக்களுக்கு தீங்கு நேரிட்டால் அவர்களை பாதுகாக்கும் அரணாகவும் உள்ளது. மதுரை கூடல் நகரில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடைபெற்ற போது அவர்களுக்கு துணையாக நின்றதுசிறுபான்மை மக்கள் நலக்குழு.  இந்தஅமைப்பு மதங்களை கடந்து அனைவரையும் உள்ளடக்கியுள்ள ஒரு அமைப்பு. இதன் செயல்பாடுகள் மென்மேலும் வளர வேண்டும்.  இன்றைக்கு நாடு செல்லும் பாதை கவலையளிப்பதாக உள்ளது. நாட்டின் இறையாண்மை, மதச்சார்பற்ற தன்மை, மக்களாட்சி தத்துவம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதே நமது இலக்கு. சமயச் சார்பற்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டே  நாட்டின் அடித்தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்று அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

தேசியக் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.  முஸ்லிம்களும் இந்திய மக்கள்தான். அவர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு, வேலை வாய்ப்பில்சமத்துவம்  வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கான உரிமை, நீதியை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.  மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது மட்டுமல்ல, எதிரானது.   முஸ்லிம்களும் மனிதர்கள் தான் அவர்களை மனிதர்களாக அரசு நடந்த  வேண்டும். 

தேசிய குடியுரிமைச் சட்டம், தேசியமக்கள்தொகை பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் எதிரானது. தேசியக் குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் முஸ்லிம்களைப் பிரிப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் இரவு பகல் பாராது தொடர்ந்துபோராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கு நாம் அனைவரும் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்றார்.

பெண்கள் சக்தி தோற்காது...
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது பேசுகையில், சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க, அரசின் சலுகைகள் எளிதில் கிடைக்கச் செய்யஉள்ளிட்ட பல்வேறு நல்ல நோக்கங்களுக்காக 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தபோது இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அன்றைக்கு மதவாதசக்திகள் லேசாக தலை தூக்க ஆரம்பித்தகாலம். தொடர்ந்து 2019-ஆம் ஆண்டுதேர்தலில் மோடி, அமித்ஷா தலைமையிலான கூட்டம் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கும் அச்சுறுத்தல் தொடங்கியது.இந்த அமைப்பு சிறுபான்மை மக்களுக்கான அமைப்பு மட்டுமல்ல மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமையை நேசிப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இணையலாம். இது ஒரு பொதுவான அமைப்பு. முஸ்லிம்களை மட்டுமல்ல, எந்தசிறுபான்மையின மக்களையும் தனிமைப்படுத்த தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு அனுமதிக்காது. இன்றைக்கு பாஜக அரசு முஸ்லிம்களை அகதிகளாக மாற்றமுயற்சிக்கிறது. அதை அனுமதிக்க முடியாது. அதற்கெதிராக நாம் போராடுவோம். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் போராடி வருகிறார்கள். பெண்களை சக்தி என்பார்கள். அந்த சக்திகள்இன்று தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். அந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார்.

கண்ணகி நீதி கேட்ட மதுரை...
அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் என்.நன்மாறன் பேசுகையில், கண்ணகி நீதி கேட்ட மதுரையில், இன்று தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாநாடு நடத்தி மோடி-அமித்ஷா கொண்டுவந்துள்ள சட்டங்கள் நியாயமா? எனக் கேட்கிறோம். அநீதிகளை எதிர்த்த போராட்டம் தொடரும். கண்ணகியும், கான்சாஹிபும், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும் போராடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரையில் முஸ்லிம் பெண்கள்குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டம் வெல்லும். மற்றொருபுறத்தில் ஆயுள் காப்பீட்டுக்கழகத்தின் ஆயுளை முடிக்கப்பார்க்கிறது மத்திய அரசு. மக்களின் பங்களிப்போடு இயங்கும் ரயில்களை தனியாருக்கு தாரை வார்த்து அதன் சத்தத்தையும் ஒழிக்கமுயற்சிக்கின்றனர். பிஎஸ்என்எல், விமானத்துறையையும் தனியாருக்கு கொடுக்கின்றனர். இதற்கு மத்தியில் தேசியகுடியுரிமைச் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோதச் சட்டங்களை பாஜக அமல்படுத்துகிறது. இதற்கெதிராகவும் நாம் போராட வேண்டியுள்ளது என்றார்.

சுதந்திரமும் முஸ்லிம்களும்...
 ஜாமாத்துல் உலமா சபை தலைவர் எம்.சாகுல் ஹமீது பேசுகையில், தேசிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக மதுரை உட்பட நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு சாதி, மதம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளித்து வருகின்றனர். மனிதர்கள் மனிதர்களாய் இருக்க வேண்டும் என்ற அடையாளம் இந்தப் போராட்டத்தின் மூலம் வெளிப்படுகிறது. சுதந்திரத்திற்காக முஸ்லிம்கள் பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறார்கள். அதை மோடி அரசு நினைத்து பார்த்து இருந்தால் தேசிய குடியுரிமைச் சட்டம் வந்திருக்காது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தாய், தந்தை, எங்கு, எப்போது பிறந்தார்கள் என்ற கேள்வியைக் கேட்கக் கூடாது. வழக்கம்போல் பழைய முறைப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.சிறுபான்மை மக்களின் நலனுக்காக போராடி வரும் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.

;