tamilnadu

img

15 முறை கடிதம் அனுப்பியும் அலட்சியம் செய்யும் முதல்வர்... அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கொதிப்பு

மதுரை:
தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க 15 முறை கடிதங்கள் அனுப்பியும் இதுவரை அழைத்துப் பேசவில்லையென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் குமுறலை வெளிப்படுத்தியுள்ளது.

சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் ஆ.செல்வம் திங்களன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2019-ஆம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ போராட்டம் நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட 5,078 பேர் மீது 17-பி குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டது.  அதே போல் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த இரண்டும் இதுவரை நீக்கப்படவில்லை. இதனால் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை அரசு ஊழியர்கள் சந்திக்கின்றனர். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது சம்மந்தமாகவும் எங்களை நேரில் சந்திக்கவேண்டுமெனவும் தமிழக முதல்வருக்கு 15 கடிதங்கள் அனுப்பப் பட்டுள்ளன. முதல்வர் இன்னும் எங்களது கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கவில்லை. இது எங்களுக்கு கவலை யளிப்பதாய் உள்ளது. முதல்வர் உடனடியாக ஜாக்டோ-ஜியோவை அழைத்துப் பேச வேண்டும். கொரோனா காலத்தில் முன்களப்பணியாளர்களாக, ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இறந்துள்ளனர். அவர்களில் திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஒருவருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

33 ஆண்டுகளாக பணியாற்றி வரும்சத்துணவு ஊழியர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், மருந்தாளுநர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா  காலத்தில் பணியாற்றிய மருத்துவத்துறை ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படுமென அறிவித்ததை உடனே வழங்க வேண்டும். தமிழ்நாடு கருவூலத்துறையில் 5,882 பேர் பணியாற்ற வேண்டும். தற்போது3 ஆயிரம் ஊழியர்களே பணியாற்று
கின்றனர். இதிலுள்ள காலிப்பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அது மட்டுமில்லாமல் கருவூலத்துறை விப்ரோ நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இத்துறையிலுள்ள பணிகளை அரசு ஊழியர்களே ஏற்றுச் செய்யவேண்டும்.  கருவூலத்துறைக்கு நவீன கணினிகள் வழங்க வேண்டும். தடையின்றி இணைய சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முறையான அரசாணை வழங்காமல் வாய்மொழி உத்தரவாக வே திட்டம் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அரசுஉடனடியாக அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபர்-8-ஆம் தேதி மாவட்ட கருவூலம், சம்பளக்கணக்கு அலுலகம் முன்பாக ஆர்ப்பாட்டமும் அக்டோபர்  23-ஆம் தேதி கருவூல ஆணையர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடும் நடைபெறும்.

4.50 லட்சம் காலிப் பணியிடங்கள்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.  மத்திய, மாநில அரசுத்துறைககளில்  உள்ள 4.50 லட்சம்காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும்.ரயில்வே, எல்ஐசி, ராணுவ தளவாடம், வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மய மாக்கக்கூடாது. விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோக முறையை சீரமைக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் விவசாய விரோதக் கொள்கைகளை மத்திய-மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும். 44 தொழிலாளர் நல சட்டங்களை  நான்காக சுருக்குவதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பதினெட்டு அம்ச கோரிக்கைகளை கோரிக்கைககளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக  தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடைபெறும்.தமிழக முதல்வர் காலம் தாமதிக்காமல் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலம் தாமதம் ஏற்பட்டால் டிசம்பர் மாதம் தர்மபுரியில் நடைபெற இருக்கும் மாநில பிரதிநிதித்துவ பேரவையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது மதுரை மாவட்டத் தலைவர் க.நீதிராஜா, அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ், அரசு ஊழியர் சங்க மாவட்டஇணைச் செயலாளர் மகேந்திரன், பூமிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

;