tamilnadu

img

புதுக்கோட்டையில் முதல்வரை வரவேற்க 200 மாட்டுவண்டிகளுடன் ஏற்பாடு... மாட்டுவண்டிக்கு மணல் குவாரி அமைக்க சிபிஎம் கோரிக்கை...

புதுக்கோட்டை:
புதுக்கோட்டைக்கு வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க 200 மாட்டுவண்டிகளுடன் ஏற்பாடுகள் தீவிரமாகநடைபெற்று வரும் நிலையில் மணல் மாட்டுவண்டி குவாரியை அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர்எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையும் முதலமைச்சரை கவிநாடு கண்மாயில் இருந்து200 மாட்டுவண்டிகளுடன் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர். இந்நிலையில்தான் மாட்டுவண்டித் தொழிலாளர்களின் அவல நிலையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.உழவு வேலைக்காக 99 சதவீதம் டிராக்டரையே விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், விவசாயத்திற்காக நாட்டுமாடுகள்பயன்பாடு என்பது கிட்டத்தட்ட அருகி விட்டது. ஜல்லிக்கட்டு காளைகளுக்காக நாட்டுமாடுகள் ஒருசில இடங்களில் வளர்க்கப்படுகிறது. இதைத்தவிர மணல் மாட்டுவண்டித் தொழிலில் ஈடுபடுவோர் மட்டுமே நாட்டுமாடுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் படுகிறபாடு சொல்லி மாளாது.

மணல் குவாரி அமைத்து லாரிகளில் ஏற்றுமதி செய்வோரால் பெரும்பாலும் வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது. மாட்டுவண்டிகளில் அள்ளப்படும் மணல் அனைத்தும் மாவட்டத்திற்குள் அந்தந்தப் பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தற்பொழுது மாவட்டத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் லாரிகளில் ஏற்றி கொள்ளை லாபம் ஈட்டும் மணல் மாஃபியாக்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மாட்டுவண்டிகளில் மணல் எடுக்கும் ஏழைத் தொழிலாளர்கள் அதிகாரிகளால் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் கறம்பக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் மாட்டுவண்டிகள் சிறைப்பிடிக்கப்பட்டு தொழிலாளர்களை காவல்துறை யினர் கொடுமைப்படுத்தி வருகின்றனர்.கல்குவாரிகளை கைவசம் வைத்துள்ள அரசியல் பலமும், அதிகார பலமும் உள்ள வர்கள் எம்.சாண்ட் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கொள்ளை லாபம்சம்பாதிக்கும் நோக்கிலேயே மணல் குவாரிக்கான அனுமதி மறுக்கப்படுகிறது. பெருமளவில் நடைபெறும் மணல் கொள்ளையால் இயற்கை வளம் பாதிக்கப்படும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில், மாட்டுவண்டியில் சிறிய அளவில் மணல் அள்ளுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படப் போவதில்லை. மேலும், அந்த பகுதியில் உள்ளமக்களின் கட்டுமானப் பணிக்கே மாட்டுவண்டியில் அள்ளப்படும் மணல் பயன்படுத்தப்படுகிறது. 

எனவே, மாட்டுவண்டியின் வரவேற்போடு புதுக்கோட்டைக்குள் நுழையும் முதலமைச்சர் மணல் மாட்டுவண்டிக் குவாரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என நம்புகிறோம். அவ்வாறு வெளியிடாதபட்சத்தில் அவரை ஊருக்குள் அழைத்து வந்த மாட்டுவண்டிகளை கொண்டே போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியநிலை வரும் என்பதையும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகிறோம். இந்நிலையில், இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மணல் மாட்டுவண்டிகளுக்கான குவாரி அமைக்க வலியுறுத்தி வருகின்ற அக்.28 அன்று பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பதோடு, போராட்டத்திலும் பங்கேற்கிறது. இவ்வாறு எஸ்.கவிவர்மன் தெரிவித்துள்ளார்.

;