tamilnadu

img

வேதாரணியத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உடைப்பு

நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலை பட்டப்பகலில் கும்பல் வன்முறையால் உடைக்கப்பட்டுள்ளது.

கும்பல் வன்முறை
கல்வியில் பின்தங்கியுள்ள வடமாநிலங்களில் நிகழ்வதை போல் தமிழகத்திலும் கும்பல் வன்முறையால் அம்பேத்கரின் சிலை முற்றிலுமாக உடைக்கப்பட்டு காணொலி காட்சியாக பரப்பப்பட்டு வருகிறது.சாதி கடந்த மிக முற்போக்கான சமூகத்தைகனவு கண்டவர் அண்ணல் அம்பேத்கர். 1952 ஆம் ஆண்டு மத்திய அமைச்சர் பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்வதற்கு இந்து பெண்கள் சட்டதொகுப்பு மட்டுமல்ல பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாததும் காரணமாகும்.  அம்பேத்கரின் பங்களிப்பு என்ன என்பதை இந்திய மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இந்திய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு வரலாற்றுப் பிழையை செய்திருக்கிறார்கள். தலித் மக்களுடைய உரிமைக்காக மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகள்,தொழிலாளர்கள் ,விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், பெண்கள், புலம்பெயர்ந்தவர்கள், சிறுபான்மையினர் எனஅனைத்து பகுதி மக்களுக்காகவும் சிந்தித்தவர்; அதற்காக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டவர் அம்பேத்கர் என்பதை இந்திய சமூகம் உணரவேண்டும்.பிஜேபி போன்ற பாசிசத் தன்மைகொண்ட மதவெறி அரசுகள் இங்கு ஆட்சி பொறுப்பில் இருந்தாலும்  அரசியல் சாசன சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வராமல் எதையும் செய்துவிட முடியாது என்கிற அளவிற்கு மிக வலிமையான ஒரு அரசியல் சாசன சட்டத்தையும் அந்த அரசியல் சாசன சட்டத்தின் மூலமாக மக்களின் ஜனநாயக உரிமைகளையும் உறுதிப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.

வெறுப்பின் உச்சம்
ஆனால் தலித் மக்களுடைய விழிப்புணர்வையும்,முன்னேற்றத்தையும் சகித்துக் கொள்ள முடியாத சாதியவாதிகள் அம்பேத்கர்சிலைகளை உடைத்து தலித் மக்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.இந்த வெறுப்பின் உச்சமாகவே வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் கும்பலாக சேர்ந்து வெறிக்கூச்சலுடன் உடைத்து அதன் காணொலி காட்சியை சமூக வலைதளங்களில் உடைத்தவர்களே பரப்புவது மிகவும் அபாயகரமானது. வடமாநிலங்களில் தலித்துகள் மன்றும் சிறுபான்மையினர் மீது இத்தகைய கும்பல் வன்முறை செயல்கள் நிகழ்த்தப்பட்டு அவை காணொலியாக பரப்பப்படுகிறது. இதனால் இது போன்ற வன்முறை பல இடங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.எனவே வழக்கம் போல் தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் மெத்தனமாக இருந்திடாமல் அரசியலமைப்பின் தந்தை அண்ணல்அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்தியவர்கள் அனைவரையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும்.காணொலி காட்சியில் இடம் பெற்ற அத்தனை பேருக்கும் தண்டனையை உறுதிப்படுத்திட வேண்டும்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்திருவிழாவை காரணம் காட்டி அண்ணல் சிலையைஇடம்மாற்றும் முயற்சியை மாவட்ட அரசு நிர்வாகமே மேற்கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் வி.சி.க இணைந்து அம்முயற்சியை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை அலட்சியம்
 எனவே சிலையை சகித்துக் கொள்ளாத மனநிலை தொடர்ந்து இருந்து வந்துள்ளதை மாவட்ட நிர்வாகம் கணக்கில் கொள்ள தவறிவிட்டது உறுதிப்படுகிறது.இப்போதும்காவல் நிலையத்திற்கு அருகிலேயே நிகழ்ந்த இந்த சிலை உடைப்பை காவல்துறைஎப்படி அலட்சியம் செய்தது என்பதையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.மேலும் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களை மட்டும் கைது செய்யாமல், ராமகிருஷ்ணாபுரம் தலித் குடியிருப்பிற்குள் புகுந்து பெண்கள் மீது கொடூரமான தடியடி பிரயோகம் நடத்தியுள்ளது.படிக்கிற மாணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.காவல்துறையின் இந்த அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறோம்.வன்முறையில் தொடர்பற்ற தலித் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.இப்போது உடனடியாக அதே இடத்தில் அண்ணல் சிலை நிறுவப்பட்டுள்ளதால் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.அமைதியைபராமரிக்கிற அதே நேரத்தில் குற்றவாளிகள் எவரும் தப்பிவிடாமல் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்தும் அந்த குற்றத்தை செய்தவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் அலட்சியமாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி மாநிலம் முழுவதும் முன்னணியினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்திட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர்த.செல்லக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

;