tamilnadu

img

ரயில்கள் – விற்க -வாங்க அனுக வேண்டிய இடம் புதுதில்லியின் ரயில்பவன்?

திருச்சி:
உலகின் பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் கூட ரயில் போக்குவரத்தை அரசுகள் தான் மேற்கொள்கின்றன. இந்தியாவிலும்கூட இன்றுவரை ரயில்களை அரசு சார்பாக வாரியம்தான் இயக்குகிறது. ரயில்வே நம் தேசத்தின் மிகப்பெரிய ஒரு போக்குவரத்து கட்டமைப்பு. இதில் தனியார்களை ரயில்கள் இயக்க வைக்க இப்போது அரசு பெரும் முனைப்பு  காட்டுகிறது.

தனியார் ரயில்கள் முயற்சி 
இந்த நோக்கத்திற்காக முதலில் நூறு நாட்கள் செயல் திட்டம் வகுத்தது. இரண்டு தனியார் ரயில்கள் என அறிவித்தது.  நாடு தழுவிய எதிர்ப்புகளால் அதை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் வசம் கைமாற்றி விட்டது. இந்நிறுவனம் வாரிய கட்டுப்பாடுக்கு வெளியே இரண்டு ரயில்களை தில்லி –லக்னோ, மும்பை – அகமதாபாத் இடையே இயக்க தயாராகி விட்டது.

வாரியத் தலைவரும் வரைவுத் திட்டமும்!
இது ஒருபுறம் இருக்க, வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு கடந்த வாரம் அளித்த பேட்டியில் 150 தனியார் ரயில்கள் இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்தார். பெரும்பாலான தனியார் ரயில்கள் தில்லி-மும்பை, தில்லி-ஹவுரா பாதைகளில் இயக்கப்
படும் என்றும், இந்த பாதைகளில் மணிக்கு 160 கி.மீ வேக ரயில்களுக்கான  கட்டமைப்புகளை அரசு உருவாக்கி வருகிறது என்றும், மேலும் சில முக்கிய பாதைகள் பரிசீலனையில் இருக்கின்றன என்றும் அவர் கூறிய கருத்து, ரயில்வே தனியார் மயத்திற்கான வரைவுத்திட்டம் அரசின் கைவசம் உள்ளது என்பதை தெளிவாக்கியது. கடந்த செப்டம்பர் 23 அன்று அரசின் சூழ்ச்சித் திட்டம் முழுமையாக வெளிப்பட்டது. அன்றைய தினம் மண்டலங்களின் இயக்க மேலாளர்களுக்கு தனியார் ரயில்கள் இயக்க ஏதுவான பாதைகள் மற்றும் ரயில்கள் கண்டறிய உத்தரவுகள் வந்தன. சென்னை- மதுரை, சென்னை- கோவை, சென்னை- மும்பை, சென்னை- பெங்களூரு என வணிக முக்கியத்துவம் வாய்ந்த 24 பாதைகள் தேர்வும் ஆயின. அதிக பயணத்தேவை உள்ள லாபகரமான இந்த பாதைகளில் லாபகரமான ரயில்களை தேர்வு செய்து விற்க செப்டம்பர் 27அன்று புதுதில்லியில் வாரியம் கூட்டம் கூட்டியது. திட்ட அவசரம் - பின்புலம் மிக்கதுதான் என்பதில் சந்தேகமில்லை. 

நோக்கம் என்ன?
இப்படி ஒரு சூழல் உருவானால் ரயில்களுக்கு பெட்டிகளை இறக்குமதி செய்வதும், இந்திய தொழிற்சாலைகளில் கொள்முதல் செய்வதும், வாரியத்திடம் குத்தகைக்கு பெறுவதும் தனியார்கள் விருப்பமே. இவர்களின் நிபந்தனைகளும், வர்த்தக சூழ்ச்சிகளும் வரும் நாட்களில் தெரிந்துவிடும். தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளைப் போல் தேசிய ரயில்பாதைகளில் தனியார் ரயில்களுக்கு கட்டணம் வசூல்  என்பதே இன்றைய திட்ட நோக்கம்.  தனியாருக்கு தாரை வார்க்கப் போகும் தங்க நாற்கரப் பாதைகளில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்க கட்டமைப்புகள் பலப்படுத்தப் படுகின்றன. இதற்கு அரசு செலவிடும் தொகை ரூ.13491.25 கோடி. (கடந்த 2017-18 நிதியாண்டு ஒதுக்கீடு). அரசு ரயில்களை விட தனியார் ரயில்கள் வேகமானவை என்று செயற்கையாக காட்சிப்படுத்தப்பட்டு  தனியார்களின் சந்தர்ப்பவாத கொள்ளை லாப கட்டணங்களுக்கு இது  நாளடைவில் வழிவகுக்கும்.  பெரும் மூலதனத்திலான அதிவேக ரயில்கள் கட்டமைப்பும், வந்தே பாரத், தேஜஸ் போன்ற நவீன ரயில் பெட்டிகள் உற்பத்தியும் அதிவேக சொகுசு ரயில்களை வாரியம் இயக்க போதுமானதே. கட்டிமான் ரயில் இதற்கு சாட்சி. அரசுப் பாதைகளில் அரசு ரயில்களுக்கு வேகம், தரம், லாபம் இருக்கும் போது வலிந்து  தனியாருக்கு லாபத்தை பங்கு தரும் நடவடிக்கை இது. இது நாட்டிற்கான  வருவாய் இழப்பாகும்.  

ரயில்வே ஊழியர்கள் நிராகரிப்பு
தனியார் ரயில்களில் பயணச்சீட்டுகள் விற்க ஊழியர்கள் தேவையில்லை. வலைதளங்கள் போதும். அதிலும்கூட கார்ப்பரேட் விளம்பரங்கள் வருவாயை அள்ளிக்குவிக்கும்.  பயணச்சீட்டு பரிசோதனைகள் கிடையாது. வேலை வாய்ப்புகளை தரும் ரயில்வேகுவார்டுகள், குளிர்சாதன மெக்கானிக்குகள் நியமனங்கள்  இருக்காது. இந்த காரணிகள் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வரும் மூன்று ஆண்டுகளில் படிப்படியாக வேலை இழக்கச் செய்துவிடும்.  எனவே ஒட்டுமொத்தமாக இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள் இதை நிராகரிக்கிறார்கள். தனியார்களுக்கு கைமாறப்போகும் முக்கிய பாதைகள் தேசத்தை புவியியல் ரீதியாக இணைப்பவை. எளிய மக்கள், சிறுகுறுவர்த்தகர்கள், நாடோடிகள், யாத்ரிகர்கள் எனபலதரப்பட்ட மக்களின் பயணப் போக்குவரத்தை இவைகள் ஈடு செய்கின்றன. இந்தபாதைகளில் தனியார் இயக்கப் போகும் ரயில்கள் குளிர்சாதனம், நவீனம், ஆடம்பரம் நிறைந்தவை. இவைகள் ஏழை எளியநடுத்தர மக்களுக்கான வாழ்க்கை வாய்ப்பு  கதவுகளை நிரந்தரமாக  மூடிவிடும். ரயில்வேத்துறைக்கான அரசின் இப்போதைய நோக்கம் சரக்கு ரயில்கள் இயக்குவது மட்டுமே. 1856 கிமீ கிழக்கு சரக்கு பாதையும்  1502 கிமீ மேற்கு  சரக்குபாதையும்   திறந்துவிடப்பட்ட பிறகு சரக்கு ரயில்களில் ஏறத்தாழஎண்பது சதவீதம் தனியார் வசமாகிவிடும். எனவே புதுதில்லியின் ரயில் பவன்ரயில்களை விற்கும் இடமாக மாறிக்கொண்டி ருக்கிறதோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. 

- டி. மனோகரன்
டிஆர்இயு  உதவி பொதுச்செயலாளர்

 

;