tamilnadu

img

அதிமுக அரசின் திவால் பட்ஜெட்.... திண்டுக்கல்லில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

திண்டுக்கல்:
தமிழக அரசின் திவாலான பட்ஜெட் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார்.  தமிழக பட்ஜெட் பற்றி திண்டுக்கல்லில் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமர்ப்பித்திருக்கிறார். அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்டும் இது தான். அடுத்த பட்ஜெட் போடுவதற்கு தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். 

ஒரு உப்புசப்பில்லாத திவாலான  பட்ஜெட்மட்டுமல்ல; முறையான நிதி நிர்வாகம் இல்லாத,மத்திய அரசாங்கத்திடம் தமிழகத்திற்கு வேண்டிய நிதியை கேட்டுப் பெற முடியாததால் பற்றாக்குறை மிக அதிகமாக இருக்கிற பட்ஜெட். மேலும் மக்களுக்கு எந்த நல்வாழ்வு திட்டங்களையும் அறிவிக்கவில்லை. கடந்தஆண்டு பட்ஜெட்டில் 14 ஆயிரம் கோடி பற்றாக்குறை என்று அதிமுக அரசு அறிவித்தது. இந்தஆண்டு பட்ஜெட் பற்றாக்குறை 25 ஆயிரம்கோடியாக உயர்ந்துள்ளது. அரசு எதிர்பார்த்ததைவிட பற்றாக்குறை 70 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏன் எனில் வருவாய் குறைகிறது செலவு அதிகரிக்கிறது.

மத்திய அரசிடமிருந்து ரூ.33 ஆயிரம் கோடிவருவாய் வரும் என்று தமிழக அரசு எதிர்பார்த்தது. ஆனால் மத்திய அரசு மூலம் 26ஆயிரம் கோடி  வரி வருவாய் கிடைத்ததாகவும், 7 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். ஏற்கனவே ஜி.எஸ்.டிமூலம் ரூ.4023 கோடி மத்திய அரசு நமக்கு தரவேண்டும். அதை தரவில்லை. உள்ளாட்சிகளுக்கு ரூ.6900 ஆயிரம் கோடி தரவேண்டும். அதையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. மேலும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப், எஸ்.சி, எஸ்.டி ஸ்காலர்ஷிப் என மத்திய அரசுதமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள்வழங்காமல் மறுத்து வருகிறது. இந்த நிதிகளை பெற மாநில அரசு மத்திய அரசைநிர்ப்பந்தித்துப் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை எதிர்த்துக் கேட்டால் மத்திய அரசு, தமிழக அமைச்சர்கள் மீது ஊழல்நடவடிக்கை என்று எதாவது எடுத்தால் என்ன செய்வது என்று தயங்குகிறார்கள். தங்களுடைய ஆட்சியை பாதுகாப்பது என்ற ஒன்றைத்தவிர மத்திய அரசு கொடுக்க வேண்டிய தொகையை கொடுங்கள் என்று கேட்காததன் விளைவு தான் தமிழக மக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

கடன் வாங்க அமெரிக்க பயணம்       
அரசின் சொந்த வரி வருவாயும் குறைந்துள்ளது. மத்திய அரசின் ஈவுகுறைந்துள்ளது. அதனால் தான் இந்த பற்றாக்குறை. வெளிநாடுகளில் 435 மில்லியன்டாலர் கடன் வாங்கப் போகிறோம் என்கிறார்கள்.சென்னை மாநகர வளர்ச்சிக்கு மட்டும் ஒரு பில்லியன் டாலர் வாங்கப் போவதாக மாநிலஅரசு கூறுகிறது. வெளிநாட்டுக்கு நாங்கள் மூலதனம் வாங்கப் போகிறோம் என்று சொன்னார்கள். ஆனால் இப்போது கடன்வாங்கப் போகிறோம் என்று கூறி உண்மையைவெளிப்படுத்தியுள்ளார்கள். 
வெளிநாட்டில் கடன் வாங்குவது பெரிதல்ல.  ஒழுங்காக நிதி மேலாண்மை செய்யாமல், மத்திய அரசிடம் கிடைக்க வேண்டிய நிதியை கேட்டுப் பெறாமல் தமிழக மக்களை வெளிநாட்டுக் கம்பெனிகளிடம் அடமானம் வைப்பது போல ஒரு பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்திருப்பது வேதனையானது. 

வேலை வாய்ப்புக்கு என்ன திட்டம்?
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் இந்திய அளவிலான அளவீட்டைக்காட்டிலும் கூடுதலாக உள்ளது. எனவே தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்க இந்த பட்ஜெட்டில் என்ன திட்டமிருக்கிறது. அரசுகாலிப்பணியிடங்களை நிரப்ப என்ன ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது? தமிழகத்தில் மனித உரிமை மீறல்கள்தமிழகத்தில் மனித உரிமைகள் பறிக்கப்படுகிறது. பொதுக்கூட்டம் நடத்த முடியவில்லை. ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த முடியவில்லை. எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதியில்லை. அதனை மீறி நடத்தினால் போலீஸ் வழக்கு போடுகிறது. கைது செய்கிறது. இது பற்றி கேட்டால் தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பற்றி மத்திய அரசு பாராட்டுகிறது  என்கிறார்கள். இதுவரை இருந்த மத்திய அரசுகளிலே மிக மோசமான அரசாங்கம் பாஜக அரசாங்கம் தான். அந்த அரசு அதிமுக அரசை பாராட்டினால் இந்த அரசு எவ்வளவு மோசமானது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருந்தால் மத்திய அரசு உங்களை பாராட்டத்தான் செய்வார்கள். நீங்கள் அடிபணிந்து செல்வதால் பாராட்டுகிறார்கள். வேறு ஒன்றும் நீங்கள் சாதனை செய்யவில்லை. கிராமப்புற விவசாய வசதிக்கு பெரிதாகஎதுவும் செய்யவில்லை. பாசனத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். அது போலசில விசயங்களுக்கு நிதி ஒதுக்கியிருப்பது நல்லவிசயம் தான். ஆனால் அது மட்டுமே ஒட்டு மொத்தநிதி நிலை அறிக்கையாக மாறிவிடாது. 

வேளாண் மண்டல அறிவிப்பு  ஒரு ஏமாற்று வேலை    
தஞ்சை தரணியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பசுமை மண்டலமாக அறிவிக்கப்போவதாக முதலமைச்சர்  சொன்னார். முதலமைச்சர் அறிவித்திருக்கிறார் என்று பட்ஜெட்டில் வழிமொழிந்திருக்கிறார்களே தவிர அதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்தநடவடிக்கை எடுத்திருப்பதாக பட்ஜெட்டில் சொன்னார்களா? இல்லை. பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பார்களாம், அங்கு செயல்படும் ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் கிணறுகளை மூடமாட்டார்களாம். பிறகு என்ன பசுமை மண்டலம்? ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை நாங்கள்  அனுமதிக்க மாட்டோம்,ரத்து செய்கிறோம் என்று பட்ஜெட்டில் தெளிவாக சொல்ல வேண்டுமல்லவா? அப்படியென்றால்அந்த திட்டங்கள் செயல்படும்; இன்னொரு பக்கம்நாங்கள் வேளாண் மண்டலமும் அறிவிப்போம்என்பதெல்லாம் மக்களை ஏமாற்றுவதாகும். 

பாலியல் குற்றங்களுக்கு எதிராக  தொடர் போராட்டம்      
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை பாலியல் பலாத்கார கொடுமை எங்கு நடந்தாலும் அதற்கு எதிராககுரல் கொடுக்கும். சமீபத்தில் வேடசந்தூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்தும் அதற்கெதிரான இயக்கங்களை தொடர்ந்து முன்னெடுத்துசெல்கிறோம். 

டாஸ்மாக் வருவாயை  நம்பி அரசு        
தமிழ்நாட்டில் சமீபகாலமாக போதைப்பழக்கம் அதிகரித்துள்ளது. அரை டன், ஒரு டன் கஞ்சா பிடிபட்டது என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வருவதை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் அதிக அளவில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் டாஸ்மாக் தான். கடந்த காலத்தில் 500 கடைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கடைகள் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை. ஏனெனில் டாஸ்மாக்கில்  தான் அதிக வரிவருவாய் கிடைக்கிறது. 

பள்ளியை சுத்தம் செய்ய குழந்தைகளா?
அரசு பள்ளி வளாகங்களை அல்லது  கழிப்பறையை சுத்தம் செய்ய குழந்தைகளிடம்வேலை ஏவுவதை வன்மையாக கண்டிக்கிறோம். பள்ளியை தூய்மையாக வைத்திருக்க ஒரு பள்ளிக்கு ஒரு பணியாளரை நியமிக்க அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது? ஆசிரியர்கள் தங்கள் உரிமைக்காக போராடும் அதே வேளையில் தங்களது பள்ளியின் வசதிக்காகவும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று குறைகளை தீர்க்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

ஆளுங்கட்சி தலையீடின்றி ஊழல் நடைபெறாது         
தமிழ்நாடு அரசு தேர்வாணைய கமிட்டியில்ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் யாரை வேண்டுமானாலும் நியமித்துக்கொள்கிற போக்கு உள்ளது. அதே போல் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதை நாங்கள் பல முறை சுட்டிக்காட்டியுள்ளோம். வி.ஏ.ஓ, ஐ.ஐ.டி.பணிநியமனங்களில் நடைபெற்ற ஊழல் போலவே எஸ்.ஐ. தேர்விலும், அரசு பணியாளர்தேர்வாணையத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது. சிபிசிஐடி விசாரித்து வருகிறது. சிபிஐவிசாரணை வேண்டும் என்பதை ஏன் அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? சிபிஐ விசாரணை முழுக்கமுழுக்க நியாயமாக நடைபெறும் என்று நாங்கள்சொல்ல வரவில்லை. இருந்தாலும் சிபிஐ விசாரணைஎன்றால் அதற்கு ஒரு மரியாதை இருக்கிறது.எனவே ஆளுங்கட்சியினருக்கு தொடர்பில்லாமல் அந்த துறையில் கடைக்கோடியில் உள்ளஊழியர்களுக்கு தொடர்பிருக்காது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது பேட்டியில் கூறினார். பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.       (நநி)
 

;