tamilnadu

img

தஞ்சாவூர் பெரிய கோயிலின் 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய ராஜராஜசோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியாரால் தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஐம்பொன் சிவன் சிலைகள், தஞ்சாவூர் கலைக்கூடத்திலிருந்து, சனிக்கிழமை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையால் கைப்பற்றப்பட்டது.

தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழன் 35 ஆண்டுகள் மன்னராக ஆட்சிபுரிந்தார். அப்போது 20 வது ஆண்டில்பெரியகோயிலை கட்டினார். ராஜராஜசோழனின் மனைவி பஞ்சவன்மாதேவியரால் 29-வது ஆட்சியாண்டின் போது இக்கோயிலுக்கு வீணாதர தட்சிணாமூர்த்தி என்கிற தஞ்சை அழகர், திரிபுராந்தகர் ஆகிய இரண்டுஐம்பொன்னால் ஆன சிவன் சிலைகளை செய்து கோயிலுக்கு வழங்கினார்.இந்நிலையில் தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்த தஞ்சை அழகர் மற்றும் திரிபுராந்தகர் சிலைகள் காணாமல் போனது. அந்த சிலைகள் தற்போது அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்தில் இந்த இருசிலைகளும் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை விசாரணை சிறப்பு அதிகாரி ஏ.ஜி.பொன்மாணிக்கவேல், ஏடிஎஸ்பி ராஜாராம் ஆகியோர் கொண்ட குழுவினர் சனிக்கிழமை காலை தஞ்சாவூர் கலைக்கூடத்துக்கு வந்தனர். சுமார் மூன்று மணி நேரம் கலைக்கூடத்தில் ஆய்வு செய்தபின் அங்கிருந்த காப்பாட்சியர் சிவக்குமாரிடம், இந்த இரு சிலைகளும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு சொந்தமானவை, தெய்வதிருமேனிகள் பூஜிக்கப்பட்டு வணங்கக்கூடியவை, அருங்காட்சியகத்தில் வைக்கக்கூடாது எனவும், இந்த சிலைகள் காணாமல் போனது தொடர்பாக தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் கடந்த 2.3.2018-ம் தேதிவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எடுத்துரைத்தார்.இதையடுத்து சிவக்குமார் இரண்டு சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் எடுத்து செல்ல அனுமதித்தார். பின்னர் இரண்டு சிலைகளையும் திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புபிரிவு காவல் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று, வரும் 10-ஆம் தேதி சிலை கடத்தல்தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

;