tamilnadu

img

வேதியியல் நச்சு கலந்த சேறு முறையில் பணி.... காவிரி டெல்டாவில் எண்ணெய் எடுப்பதற்கான அனுமதியை திரும்பப் பெறுக....

சென்னை:
காவிரி டெல்டா பகுதியில் எண்ணெய் எடுப்புக்கான  சுற்றுச்சூழல் கால நீட்டிப்பு அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அறிவியல் இயக்கத்தின்  பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட போது டெல்டா மக்களும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் முழுமனதோடு அதை வரவேற்றன. அதே வேளையில், காவிரி டெல்டா பகுதியில் ஏற்கனவே நிலுவையில் உள்ள எண்ணெய் எடுப்புத் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றது.  இதற்கிடையே மத்திய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுற்றுச்சூழல் திட்ட வரைவு 2020ல் எண்ணெய் எடுப்பு ஆய்வுப் பணிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஏ -பிரிவிலிருந்து சாதாரண நடைமுறையில் அனுமதி வழங்கக்கூடிய பி-2 பிரிவுக்கு மாற்றுவதாக கூறியிருப்பதையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.  
இந்நிலையில் கடந்த 2013ல் திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் எண்ணெய் எடுப்பதற்கான ஆய்வுக்கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.  அதற்கு  கடந்த 21.08.2013 அன்று சுற்றுச்சூழல் அனுமதி  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டிருந்தது. அனுமதி பெறப்பட்ட 24 எண்ணெய் கிணறுகளில் 5 கிணறுகள் அமைவதற்கான வருவாய் வட்டங்களைக் கூட சரியாகக் குறிப்பிடாமல் வெளியிட்ட அந்த அறிவிப்பைத் திருத்தி கடந்த10.01.2017ல் திருத்தப்பட்ட அறிவிப்பை வெளியிட்ட தையும் குறிப்பிட வேண்டுகிறோம். 

3 ஆண்டுகால நீட்டிப்பு
மொத்தமுள்ள 24 கிணறுகளில் 16 கிணறுகளின் பணி கடந்த 7 ஆண்டுகளில் முடிவடைந்து விட்டது.  1 கிணறுக்கான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீதமுள்ள 7 கிணறுகளுக்கு   சுற்றுச்சூழல் அனுமதி முடிவடைய உள்ள காலகட்டத்தில் காலக்கெடு நீட்டிப்புக் கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.  அதன் அடிப்படையில், இந்த கொரோனா காலகட்டத்தில் காணொலி மூலமாக 20.08.2020 அன்று நடைபெற்ற  மதிப்பீட்டு வல்லுநர் குழுவில் மேற்கண்ட விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  பரிசீலனைக்குப் பின்னர் 3 ஆண்டுகளுக்கான காலநீட்டிப்பு செய்து அதற்கான காரணங்களையும் 05.09.2020 தேதியிட்ட அறிக்கையில் வல்லுநர் குழுவால் குறிப்பிடப்பட்டிருந்தது. அனுமதிக்கான காரணங்களாக  கீழ்க்கண்டவை குறிப்பிடப்பட்டிருந்தன.கடந்த காலங்களில் மேல்மட்ட அளவிலேயே எண்ணெய் எடுக்கும் பணிகளில் கவனம் இருந்தது.  சமீபத்தில் 2 வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஆழமான பகுதிகளில் எண்ணெய்எடுக்கும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.மேற்கண்ட பகுதிகளில் சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கை நில அதிர்வு ஆய்வுப் புள்ளி விபரங்கள்படி மண்ணியல் மற்றும் புவி இயற்பியல் (G&G) தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.எஞ்சியுள்ள 7 ஆய்வுக் கிணறுகளை அதிகமான ஆழத்தில் அமைக்க வேண்டியுள்ளது அதிக வெப்பம், அதிக அழுத்தம் கொண்ட பகுதிகளாக அந்த கிணறுகள் உள்ளன. அத்தகைய ’அதிக வெப்பம் மற்றும் அதிக அழுத்தம்’ உள்ள அந்த பகுதிகளில் மேல்மட்ட நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  

வேதியியல் நச்சு கலந்த சேறு முறையில் பணி
ஓஎன்ஜிசி  நிறுவனம் அதிக வெப்பம் மற்றும் அதிக அழுத்தம் கொண்ட பகுதிகளில் எண்ணெய் எடுப்புப் பணிக்காக ப்ளேடு எனர்ஜி என்கிற அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனையைப் பெற்றுள்ளது.  அதன்படி மேற்கண்ட பகுதிகளில் கிணறு தோண்டும் பணிக்கு குறைந்த நச்சுத்தன்மையும், செயற்கை எண்ணெயும் கலந்த சேறை - LTSOBM (LOW TOXICITY  OIL BASED MUD) – பயன்படுத்துவதற்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஒருங்கிணைத்து எடுக்க பல அடுக்கு நீரியல் விரிசல் முறையை (HYDRO FRACTURING METHOD)  பயன்படுத்துவதற்கும் அந்த நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது.

மேற்கண்ட 24 கிணறுகளில் ஆய்வுக் கிணறு அமைக்க கடந்த 21.08.2013ல் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்தபோது கிணறுகள் தோண்டும் பணிக்கு ’நீர் கலந்த சேறை’ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற முக்கியமான நிபந்தனையோடு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், நாளொன்றுக்கு 25 ஆயிரம் லிட்டர் நீர்மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.  தற்போது அனுமதி நீட்டிக்கப்பட்டு இருக்கக்கூடிய இடங்களில் அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பம் இருக்கக் கூடிய காரணத்தால், அமெரிக்க நிறுவன ஆலோசனையின்படி இந்த 2  நடைமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகத் தெரிகிறது.  அவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டால் கிணறு அமைக்கப் பயன்படுத்தப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் குறித்தோ அல்லது நீரியல் விரிசலுக்கு பயன்படுத்தக்கூடிய கோடிக்கணக்கான லிட்டர்தண்ணீர் குறித்தோ அதனுடன் கலந்து பயன்படுத்தப் படும் நூற்றுக்கணக்கான வேதிப் பொருட்கள் குறித்தோ எந்த விதமான கேள்விகளும் இல்லாமல் அனுமதி நீட்டிக்கப்பட்டிருப்பது  காவிரி டெல்டா பகுதிகளில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே 2015 ல் காவிரி டெல்டா பகுதிகளில் குத்தாலம் எண்ணெய் வட்டாரத்தில் ஷேல் எண்ணெய் எடுப்பதற்கான ஆய்வுக் கிணறு அமைப்பதற்கு ஓஎன்ஜிசி  நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.  கடந்த 25.02.2016 அன்று நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில்  நீரியல் விரிசல் முறையை கையாளுவதைக் குறிப்பிட்டு வளமையான கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டமாக இதைக் கருத முடியாது எனக்கூறி, மக்கள் கருத்துக் கேட்பை நடத்த வலியுறுத்தி சுற்றுச்சூழல் அனுமதி வழங்காததையும் குறிப்பிட விரும்புகிறோம். 

நிலுவையில் உள்ள திட்டங்களை தடை செய்க!
எனவே மேற்கண்ட பகுதிகளில் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி காலக் கெடுநீட்டிப்பை உடனடியாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்விலக்கிக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்துகிறது.காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்துள்ள தமிழக அரசு, டெல்டா பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மேற்கண்ட நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு எளிதில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு ஏதுவாக திருத்தங்களைக் கொண்டு வரும்  சுற்றுச்சூழல் வரைவு 2020க்கு எதிராக தமிழக அரசின் கருத்துகளை அழுத்தமாக பதிவுசெய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;