tamilnadu

img

கல்வி தொலைக்காட்சிகள் மூலம் வகுப்பு: வைகோ வலியுறுத்தல்

சென்னை:
கல்வி தொலைக்காட்சியின் மூலம்மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின் றது. இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன.

இணைய வழி வகுப்புகள் நடத்துவதைத் தடை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஜூன் 10 ஆம் தேதி நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய - மாநில அரசுகள் தரப்பில் இணைய வழி கற்பித்தல் வகுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விதிமுறைகள் எதுவுமின்றி இணையவழி வகுப்புகள் நடந்து கொண்டு இருப் பதை மத்திய - மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன.11 விழுக்காடு வீடுகளில்தான் கணினி, மடிக் கணினி, நோட்புக், நெட்புக் போன் றவை இருப்பதாக என்.எஸ்.எஸ்.ஓ ஆய்வு அறிக்கை 2017-18 தெரிவிக்கிறது. ‘ஸ்மைல் பவுண்டேஷன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்திய ஆய்வில், 56 விழுக்காடு பள்ளி மாணவர்களிடம் அறிவுத்திறன் பேசி இல்லாததால், எந்த முறையிலும் ‘ஆன்லைன்’ வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளது.இதன் மூலம் இணையவழி கற்பித்தல் முறை என்பது சமூகத்தில் ஏழை எளிய, வசதியற்ற குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனி என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.மேலும் இணைய வழி வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள், மாணவர்கள் காதொலிக் கருவிகளைப் பன்படுத்துவதும், கண்கள், காதுகளின் திறனைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.எனவே சமச்சீரற்ற முறையில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் இணையவழி  கற்பித்தல் முறையைக் கைவிட்டு, தொலைக் காட்சிகளின் வழியாக, தொலைக்கல்வி வகுப்புகள் நடத்தும் முறையை மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

;