tamilnadu

img

சிங்காரவேலு ஆணைய அறிக்கை ஏற்புடையதல்ல

சென்னை:
தர்மபுரி இளவரசன் மரணம் குறித்த நீதிபதி சிங்காரவேலு ஆணைய அறிக்கை குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத் மாநில பொது செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்து பின்வருமாறு.

தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும்,நாய்க்கன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவ்யாவும் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளையும் நிழல்போல் அவர்களை துரத்திய சாதிவெறி நட வடிக்கைகளையும் தமிழகம் என்றும் மறக்கவியலாதது.2013 ஜூலை 4-ஆம் தேதி இளவரசன் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தர்மபுரி அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை தெரிவித்தது.  இளவரசன்,திவ்யா ஆகியோரின் இணைவாழ்வைப் பிரிப்பதற்காக நடைபெற்ற முயற்சிகளும் இதற்குப் பின்புலமாக பாட்டாளி மக்கள் கட்சியும் அதனுடைய வழக்கறிஞர்களும் செயல்பட்டதும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது.

ஆள்கொணர்வு மனுவை தாக்கல் செய்து முதல் இரண்டு முறை இளவரசனுடன் வாழ்வேன் என்று திவ்யா நீதிமன்றத்தில் தெரிவித்த பிறகும் மூன்றாவது முறையாக வரவழைத்து நிர்ப்பந்தித்து திவ்யாவை அவரது தாயாருடன் அனுப்பிய பிறகு தான் அவர்கள் திருப்தி அடைந்தார்கள்.

தற்கொலை அல்ல...
இந்த பின்னணியில்தான் தருமபுரி இள வரசன் மரணம் நிகழ்ந்தது. அவருடைய மரணம் குறித்து தமிழக அரசு நீதிபதி சிங்கார வேலு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது. அந்த ஆணையம் தனது அறிக்கையை கடந்த 2018 ஆகஸ்ட் 21-ஆம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்திருக்கிறது. ஆனாலும் இன்று வரை அறிக்கை வெளி யிடப்படவில்லை. அறிக்கையின் சாரமாக ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த செய்தி கள் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் 2013 ஜூலை 11-ஆம் தேதி இளவரசன் உடலை ஆய்வு செய்த போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை தடயவியல் மருத்துவர் திரு. சம்பத்குமார் அவர்களுடைய கருத்துக் களை  ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இது கொலை என்று எங்களால் நிரூபிக்க முடியாது, ஆனால் தற்கொலை அல்ல என்று ஆணித்தரமாக மருத்துவர் சம்பத்குமார் குறிப்பிடுகிறார். அதேபோல மரணம் குறித்து கருத்து தெரிவித்த மறைந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் திரு. சந்திரசேகரன் அவர்களும் மருத்துவர் சம்பத்குமார் அவர்கள் போலவே கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில் ஆணையத்தின்  முடிவு ஏற்புடையதாக இல்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை இன்று வரை தமிழக அரசு வெளியிடாததும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆணைய அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். அதிகாரப் பூர்வமாக அது வெளியிடப்பட்ட பின்னர் அதன் மீது  சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை யும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தெரிவித்துக்கொள்கிறது.

;