tamilnadu

img

குற்றச்சதியை நிரூபிக்க முடியாத‌து சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு... மு.க.ஸ்டாலின், தலைவர்கள் விமர்சனம்

சென்னை:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சதியை நிரூபிக்க முடியாத‌து, சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- 

“தொழுகை நடத்தும் இடத்தை அழிக்கும் நோக்கத்துடன், மொத்த மசூதியும் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது”  என்று பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்த பிறகும்; “பாபர் மசூதி இடிப்பு வழக்கினை - அதில் உள்ள குற்றச்சதியை நிரூபிக்க முடியாமல்,சி.பி.ஐ. தோற்று இருப்பது, இந்திய நாடு பாதுகாத்திட வேண்டிய சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.மசூதி மட்டுமல்ல; எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்தையும் ஆக்கிரமிப்பதும், அழிப்பதும் அநியாயத்திலும் அநியாயமாகும்; அப்பட்டமான சட்ட விரோதச் செயலாகும். குற்றவழக்குகளில் - குறிப்பாக உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் நன்மதிப்பைச் சீர்குலைத்த “பாபர் மசூதி” இடிப்பு வழக்கில் - நடுநிலையுடன், எச்சரிக்கையாகவும் நியாயமாகவும் செயல்பட்டிருக்க வேண்டிய சி.பி.ஐ., அப்படிச் செயல்பட ஏனோ தவறிவிட்டது வெட்கக் கேடானது.அரசியல் சட்டத்திற்கு நெருக்கடியை உருவாக்கிய ஒரு முக்கிய வழக்கில், பொறுப்பில்லாமல் ஏனோதானோ மனப்பான்மையுடன், சி.பி.ஐ. செயல்பட்டு - குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழான தனது கடமைகளைத் துறந்திருப்பது, நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது அனைவருக்கும் ஆழ்ந்த கவலையைத் தருவதாகும்” என்று தெரிவித்துள்ளார். 

ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும்அறிக்கை:உச்சநீதிமன்றமே பாபரி பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் அதற்கு முன்பு அங்குக் கட்டடங்கள் எதுவும் இருக்கவில்லை என்று சொல்லியதுடன், தொடர்ச்சியாக முஸ்லிம்கள் அங்கு வழிபாடு நடத்தினார்கள் என்று குறிப்பிட்டது . மேலும் பாபரி பள்ளிவாசல் இடிப்பு நாட்டின் சட்டத்தின் ஆட்சியின் மீது நடத்தப்பட்ட அக்கிரமம் நிறைந்த அத்துமீறல் என்று குறிப்பிட்டது. இத்தனையும் தெரிவித்து விட்டு பாபரி பள்ளிவாசல் இடத்தை எதிர் தரப்பிற்கு அளித்துத் தீர்ப்பு வழங்கியது.லக்னோ சிபிஐ விசாரணை மன்றம் இதேஅடிப்படையில் பாபரி பள்ளிவாசலை இடித்தவர்களைத் தேச விரோதிகள் என்று கூறிவிட்டு அத்தகைய தேசத் துரோகிகளை அயோத்திக்கு கரசேவை செய்வதற்குத் தொடர்ந்து அழைப்பு கொடுத்தவர்களை விடுவித்துள்ளது. இந்திய நீதி பரிபாலனத்தை சவப்பெட்டியில் வைக்கும் பணியை ரஞ்சன் கோகோய் தொடங்கினார். அந்த சவப்பெட்டியின் கடைசி ஆணியைத் தனது தீர்ப்பின் மூலம் அறைந்துள்ளார் எஸ்.கே. யாதவ்.

நமது நாட்டில் நடைபெறும் இந்த அநீதியைக் களைந்து நீதிக்கு உயிர் அளிக்கக் காந்தியடிகள் விரும்பிய இந்தியாவை மீண்டும் கட்டமைக்க விரும்புவோர் ஒன்று சேர்ந்து எல்லா நிலைகளிலும் போராடுவது காலத்தின் கட்டாயமாகும். நீதித்துறையைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் நாளை (வியாழன்) மாலை 4 மணிக்கு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் நகரங்கள், பேரூர்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாகப் பங்கு கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொல். திருமாவளவன்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது. இதற்கு சிபிஐ இந்த வழக்கை உரிய ஈடுபாட்டுடன் நடத்தவில்லை என்பதே காரணம். எனவே, மத்திய அரசு இந்த வழக்கில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்து கிறோம்.சிபிஐ என்பது சுதந்திரமாக இயங்குகிற ஒரு புலனாய்வு அமைப்பு அல்ல; அது மத்திய அரசின் ஏவல் அமைப்பாக மாற்றப்பட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு அண்மைக்காலமாக முன்வைக்கப்படு கிறது. அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக இந்த வழக்கில் சிபிஐ நடந்து கொண்டிருக்கிறது.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் இருந்து கரசேவகர்கள் அயோத்தியில் கூட வேண்டும்; அங்கே இருக்கின்ற பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக செங்கற்களை எடுத்து வர வேண்டும் என்று இந்தியா முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு அன்றையபாஜக தலைவர் எல்.கே. அத்வானி ஆதரவு திரட்டியதை அனைவரும் அறிவோம். அதுபோலவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே பாபர் மசூதியை இடிப்பதற்குத் தூண்டுதலாக இருந்தார்கள் என்பதற்கு ஊடகங்களிலேயே ஏராளமான மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. அப்படியிருந்தும் இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த ஆதாரங்கள் நம்பத்தக்கனவாக இல்லை என சிறப்பு நீதிமன்றம் கூறியிருப்பது வியப்பளிக்கிறது.நீதித்துறை மீதான நம்பிக்கை தகர்ந்தால் மக்கள் ஜனநாயக வழிமுறைகள் மீதான நம்பிக்கையையும் இழந்துவிடுவார்கள். அது நாட்டின் நல்லிணக்கமான சூழலுக்குப் பேராபத்தாக மாறிவிடும் என்று கூறியுள்ளார்.

இரா.முத்தரசன்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட குற்றச் சம்பவங்களை நொடிக்கு, நொடி இடைவிடாமல் மின்னணு ஊடகங்கள் வெளியிட்டு இருக்கின்றன. அச்சு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தொகுக்கப்பட்ட ஆவணங்கள் பதிவாகியுள்ளன. ஆய்வாளர்கள் விரிவாக கள ஆய்வு செய்து, அசைக்க முடியாத ஆதாரங்களோடு குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் அடையாளங்காட்டியுள்ளனர்.இவை எதனையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல் மத்திய புலனாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும்.அரசியலமைப்பு அதிகாரம் பெற்றுள்ள மத்திய புலானய்வு அமைப்பு ஆளும் வர்க்கத்தின் முகமையாகவும், அதிகார மையத்தின். ‘எடு பிடிகளாகவும்‘ மாறி வருவதை, சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு மண்டையில் அடித்து உணர்த்தியுள்ளது.ஆர்எஸ்எஸ் வழி நடத்தும் பாஜக மத்திய அரசின் பாசிசத் தன்மை வாய்ந்த அணுகுமுறை, அரசியலைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளின் மீதான தாக்குதல் கட்டத்திற்கு வளர்ந்திருப்பதை நீதிமன்றத் தீர்ப்புகள் உணர்த்துகின்றன.
பாபர் மசூதி இடிப்பு சமூக விரோதிகளால் நடத்தப்பட்டது எனில் அந்த சமூக விரோதிகள் யார்? அடையாளம் காட்ட வேண்டும்.குற்றம்சாட்டப்பட்டவர்கள் மசூதியை இடிக்கச் செல்லவில்லை; அங்கிருந்த ‘குழந்தை ராமரை’ பாதுகாக்கப் போனதாக கூறியிருப்பது ‘குரூர வன்மம்‘ நிறைந்தது.பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு, மதவெறி வன்முறை கும்பல்களின் கலவரங்களை அதிகப்படுத்தும் என பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது  என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார்.

;