tamilnadu

img

50% ஓபிசி இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது : சிபிஎம்

சென்னை:
மருத்துவ பட்டப் படிப்புகளில் 50% ஓபிசி இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்தியஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை இந்தஆண்டே அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் அரசியல்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மேலும் காலம் தேவைப்படுவதாகவும், மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நடப்புஆண்டில் ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும் விளக்கம் அளித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.இந்த நிலையில் இவ்வழக்கில் திங்களன்று (அக்டோபர் 26) தீர்ப்பு வழங்கிய நாகேஸ்வரராவ் தலைமையிலான மூன்றுநீதிபதிகள் அமர்வு, மத்திய அரசின் வாதத்தைஏற்று, “இவ்வழக்கில் இடைக்கால நிவாரணம்எதுவும் வழங்க முடியாது” என உத்தரவிட்டது. தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் மனுவையும் நிராகரித்தது.

மார்க்சிஸ்ட் கட்சி கருத்து
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய அளவில் ஒதுக்கப்படும் இடங்களில்இந்த ஆண்டே இடஒதுக்கீடு அமல்படுத்தப் பட வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தை உச்சநீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

விண்ணப்பங்களை பெற்றுவிட்டோம்; அது சம்பந்தமான தொடர் நடவடிக்கைகள் நடந்துவிட்டன; எனவே, இந்த ஆண்டே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று டிஜிட்டல் யுகத்தில் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதமாகும். அரசு நினைத்தால் சில நாட்களிலேயே விண்ணப்பம் பெற்று இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.பாஜக மற்றும் சங்பரிவாரம் எந்தக் காலத்திலும் சமூகநீதி கோட்பாட்டையோ ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. எனவேதான் அவர்கள் மருத்துவ உயர் கல்வியில் தமிழக அரசு கிராமப்புறத்தில் பணிபுரி வோருக்கு இட ஒதுக்கீடு செய்ததை இந்தியமருத்துவக் கவுன்சில் மூலம் தடுத்து நிறுத்தினார்கள்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று உச்சநீதிமன்றம் பல நேர்வுகளில் சொல்லியிருக்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பதை நீதிமன்றம் கடைப்பிடிக்க தவறி இருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனை பாதிக்கக் கூடியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதேசமயம் பாஜக மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சமூகநீதிக்கு எதிரான தன் நிலைப்பாட்டின் காரணமாக தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பெரும் துரோகம் இழைத்திருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

;