tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ். எனும் மர்மதேசம்-9 : நூலிழையில் உயிர் தப்பினார் காமராஜர்!

1950 -60 களில் பேச்சுவீரராக மட்டுமல்லாது செயல்வீரராகவும் இருந்தார் கோல்வால்கர். ஜனசங்கம் எனும் அரசியல்கட்சியைக் களத்தில் இறக்கியது மட்டுமல்லாது வேறுசில துணை அமைப்புகளையும் உருவாக்கினார். rss.org கூறுகிறது: தேசம் கட்டும் செயல்களில் ஈடுபடுத்த அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத், கிறிஸ்தவ மதமாற்றத்தை தடுக்க பாரதிய வனவாசி கல்யாண் ஆஸ்ரமம், சோசலிச- மார்க்சிய சித்தாந்தத்திலிருந்து தொழிலாளர்களை விடுவிக்க பாரதிய மஸ்தூர் சங், சாதுக்களை ஒரு பொதுமேடையில் இணைக்க விஸ்வ இந்து பரிஷத் ஆகியவை இந்தக் காலத்தில் அமைக் கப்பட்டன. இவை அனைத்தையும் சேர்த்து “சங் பரிவாரம்” என அழைக்கும் வழக்கம் உருவானது.

ஆக இப்படி அழைக்கும் பழக்கத்தை இவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள்! இந்தப் பரிவாரத்தின் இந்தக்காலத்திய செயல்பாடுகள் முக்கியமானவை. அரசியல்சாசனத்தின் வரைவுக்குழுத் தலைவராக இருந்துஅந்தப் பணியை முடித்த கையோடு மனுசாஸ்திரமாக இருந்த இந்து சட்டத்தை மனித சாஸ்திரமாக மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கினார் அண்ணல் அம்பேத்கர். அவரது மசோதாவில் முன்வைக்கப்பட்டிருந்த திருத்தங்கள்: 1. ஒரு மகனைப் போல விதவை அம்மா மற்றும் மகள்களுக்கும் முன்னோர் சொத்தில் சமமான பங்கு 2. பெண்ணுக்கு விவாகரத்து உரிமை 3. பலதார மணத்திற்கு தடை 4. சாதி மறுப்பு திருமணத்திற்கு அனுமதி 5. வேறு சாதி குழந்தையைத் தத்தெடுக்க அனுமதி. இந்து பெண்களுக்கு நியாயம் வழங்குவதும், இந்து மதத்தில் உள்ள சாதியத் தடைகள் சிலவற்றை நீக்குவதுமே இவற்றின் நோக்கங்கள் என்பது வெள்ளிடைமலை.

இந்து சமுதாயத்தை ஒன்றிணைக்கவும் வலுப்படுத்தவுமே தான் எழுந்து வந்திருப்பதாகச் சொல்லும் ஆர்எஸ்எஸ் இந்த திருத்தங்களை ஆதரித்திருக்க வேண்டுமல்லவா? இல்லை என்பது மட்டுமல்ல, எதிர்த்து தில்லி நகர வீதிகளில் இறங்கியது. வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா தனது “காந்திக்குப் பிந்திய இந்தியா” நூலில் அதை விவரித்திருக்கிறார்: “1949 டிச. 11ல் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஆர்எஸ்எஸ் ஒரு பொதுக்கூட்டம் நடத்தியது. அதில் மசோதாவைத் தாக்கி தலைவர்கள் பேசினார்கள். ‘இந்து சமுதாயத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டு’ என்றார் ஒருவர். மறுநாள் ஆர்எஸ்எஸ்காரர்கள் அரசியல் நிர்ணயசபை கட்டடத்தை நோக்கிச் சென்றார்கள். ‘இந்து சட்ட மசோதா ஒழிக’, ‘பண்டிட் நேரு ஒழிக’ என்று முழங்கினார்கள். பிரதமர், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தார்கள். ஷேக் அப்துல்லாவின் காரைத் தாக்கினார்கள். ஆர்எஸ்எஸ் நடத்திய கூட்டங்களில் பிரதான பேச்சாளராக இருந்தவர் சுவாமி கர்பாத்ரிஜி மகாராஜ். இவர் சட்ட அமைச்சர் அம்பேத்கரின் சாதி பற்றிப் பேசினார். ஒரு முன்னாள் ‘தீண்டப்படாதவருக்கு’ பிராமண பண்டிதர்கள் வகுத்த சாஸ்திரங்களில் தலையிட உரிமை இல்லை என்றார்”.

ஆர்எஸ்எஸ்சின் இந்த மூர்க்கத்தனமான எதிர்ப்பு காங்கிரசுக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் பொதுத்தேர்தல் வேறு வந்து கொண்டிருந்தது. நேரு தயங்கி நின்றார். வெறுத்துப்போன அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதுபற்றி 1951 அக். 10ல் அவர் வெளியிட்ட அறிக்கையில் தனது ராஜினாமாவிற்கான காரணங்களில் ஒன்று இந்து சட்ட மசோதாவை நிறைவேற்றாதது என்றார். பட்டியல் சாதி மக்களின் வாக்குகளைக் குறிவைத்து இன்று அம்பேத்கரைப் புகழும் இதே சங் பரிவாரம்தான் அன்று அவரின் கொடும்பாவியைக் கொளுத்தியது, அவரது ராஜினாமாவிற்கு காரணமாக இருந்தது.1952 முதல் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று நேரு தலைமையில் அதன் அரசு அமைந்தது. பிரதான எதிர்க்கட்சியாக வந்தது கம்யூனிஸ்டு கட்சி. இப்போது தைரியம் வரப்பெற்றவராய் 1955-56ல் அந்த மசோதாவை சில மசோதாக்களாகப் பிரித்து நிறைவேற்றினார் நேரு. அதற்கு கம்யூனிஸ்டுகளின் ஆதரவும் இருந்தது. இன்றைக்கு இந்துப் பெண்களுக்கு சில உரிமைகள் கிடைத்திருக்கின்றன என்றால் அதற்கு அம்பேத்கர், நேரு, கம்யூனிஸ்டுகள்தாம் காரணம். இந்துக்களுக்காக இருப்பதாகச் சொல்லும் ஆர்எஸ்எஸ்சோ அதற்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருந்தது. அப்படி அன்று இந்து பெண்களுக்கு எதிராக நின்றவர்கள்தாம் இன்று முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக முத்தலாக் தடை சட்டம் போட்டிருக்கிறார்களாம்! ஆடு நனைகிறதே என்று ஓநாய் ரொம்பவும் கவலைப்பட்டதாம்!

பல மொழிவழி தேசியஇனங்களைக் கொண்ட நாடு இந்தியா என்பதை ஆர்எஸ்எஸ் ஒப்புக் கொள்வதில்லை. ஒப்புக் கொண்டால் அது அதனது மதவழி தேசியத்திற்கு ஆபத்தாகிப்போகும். ஆனால் யதார்த்தம் என்னவோ முன்னதாகத்தான் இருந்தது.தேசிய இனத்தை தீர்மானிப்பதில் மொழியே ஒரு தீவிரப் பங்காற்றியது. சுதந்திரப் போராட்டத்திற்கு மக்களைத் திரட்டவும் மொழிவழி மாகாணக் கமிட்டிகளையே காங்கிரஸ் அமைக்க வேண்டியிருந்தது. அதன் நீட்சியாக மொழிவாரி மாகாணக் கோரிக்கை வலுவாக எழுந்தது. தெலுங்கர்களுக்கு ஆந்திரா கேட்டு பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டதும் அந்தப் பிரச்சனை தீயாய்க் கிளம்பியது. முடிவில் ஆந்திரா மட்டுமல்ல தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என்று மொழிவாரி மாநிலங்களை அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது காங்கிரஸ் ஆட்சி. அதற்காக அமைக்கப்பட்ட மாநிலங்களின் மறுசீரமைப்பு  குழுவும் அப்படியாகவே பரிந்துரை தந்தது.

அது, தனது அடிமடியில் கைவைப்பதாக நினைத் தது ஆர்எஸ்எஸ். இந்து தேசியம் என்றால் நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு ஒரே நாடு, ஒரே நிர்வாகம்; எதற்கு மாநிலங்கள், மாநில அரசுகள், மாநிலத் தேர்தல்கள்? 1956 ஜுலையில் அது போட்ட தீர்மானம் கூறியது: “பாரதத்தின் ஒற்றுமையைப் பராமரிக்கும் ஒரே வழி ஒற்றை ஆட்சி முறையே. நாட்டைச் சீர்குலைக்கும் கொள்கைகளைக் கைவிட்டு ஒற்றை ஆட்சிமுறையைக் கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்தியஅரசை வற்புறுத்துகிறது”.(ஆர்எஸ்எஸ் தீர்மானிக்கிறது: 1950-1983) இதே ஆண்டில் தான் எழுதிய “தேவை ஒற்றை ஆட்சிமுறை” எனும் கட்டுரையில் அதை இன்னும் தெளிவாக விவரித்தார் கோல்வால்கர்:“நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சமஷ்டி கட்டமைப்பு பற்றிய பேச்சையெல்லாம் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். பாரதம் எனப்பட்ட ஒரே அரசுக்குள் இருக்கும் ‘சுயாட்சி பெற்ற’ அல்லது அரைகுறை சுயாட்சி பெற்ற ‘மாநிலங்கள்’ எல்லாம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். துண்டுதுண்டான, பிராந்தியவாரியான, தனித்த போக்குடைய, மொழிவாரியான அல்லது இதரவகைப் பெருமிதத்திற்கு வகை செய்பவை எல்லாம் நமது ஒன்றுபட்ட தன்மைக்கு கேடு விளைவிப்பவை. இவற்றின் அடையாளமே இல்லாத ‘ஒரு நாடு, ஒரு அரசு, ஒரு நாடாளுமன்றம், ஒரு நிர்வாகம்’ என்பதைப் பிரகடனப்படுத்த வேண்டும்”. (சிந்தனைக் கொத்து)இந்து தேசியம் என்பதன் அரசமைப்பு வெளிப் பாடு இப்படியாகத்தான் இருக்கும். மொழிவாரி தேசிய இனங்களது இருப்பை மறுப்பதன் இயல்பான நீட்சி இப்படியாகத்தான் இருக்கும். சங்பரிவாரத்தின் ஆட்சி ஜிஎஸ்டியை படு உற்சாகமாக அமல்படுத்தி மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தை அனேகமாக பறித்திருப்பதும், அவற்றை மத்தியஅரசிடம் கையேந்தும் நிலைக்கு கொண்டு
வந்திருப்பதும், இன்னும் பல வகைகளில் அவற்றின் தலைகளில் குட்டிக் கொண்டே இருப்பதும் அவர்களது குருஜியின் இந்த ஆசையை நிறைவேற்றத்தான்.ஆர்எஸ்எஸ்சுக்கு மனிதர்களைவிட மாடுகளை ரொம்பப் பிடிக்கும். வடநாட்டில் பசு மீது வளர்க்கப் பட்டிருந்த முரட்டுபக்தி இதன் வகுப்புவாத வன்ம அரசியலுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

அதை வைத்து பிற மதத்தவரையும் பட்டியல்சாதி மக்களையும் ஒருங்கே வெறுக்க கற்றுக் கொடுத்தார்கள் இந்துக்களுக்கு. தன்னை வைத்து பாலை மட்டுமல் லாது மதவெறி விஷத்தையும் கறக்கிறார்கள் என்பதை அந்தக் கோமாதா அறியாள். 1952லேயே “பசுவதை தடுப்பு தினம்” கடைப்பிடித்தார்கள் என்றாலும் அதன் ஓர் உச்சம் பின்னர் வந்தது.அது நடந்து 50 ஆண்டுகள் கழித்து தி இந்து ஏட்டில் (9-11-2016) ஜெயராம் ரமேஷ் எழுதினார்: “1966 நவம்பர் 7ல் ஆயிரக்கணக்கான சாதுக்கள் கூடி நாடு முழுமைக்கும் உடன் பசுவதை சட்டம் வேண்டும் என்றார்கள். ஜனசங்கம் எம். பி. சுவாமி ராமேஷ்வரானந்தின் வெறித்தனமான பேச்சால் தூண்டப்பட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றார்கள். கதவுகள் மூடியிருக்கவும் நாடாளுமன்ற வீதியிலிருந்த அரசு கட்டடங்களைத் தாக்கினார்கள். அங்கே தனது வீட்டிலிருந்த காங்கிரஸ் தலைவர் காமராஜர் மயிரிழையில் உயிர் தப்பினார்”.

ஜெயராம் ரமேஷ் காங்கிரஸ்காரர் என்று நினைத்தால் தி கேரவான் (7-11-2016) எழுதியிருப்பதை நோக்குங்கள்: “அந்தக்காலத்து தி டிரிபியூன் பத்திரிகையின்படி 1,25,000 பேர் திரண்டிருந்தார்கள். முன்னணியில் இருந்தவர்கள் காவியுடை அணிந்திருந்த சாதுக்கள். அவர்களது கைகளில் வாள்கள், ஈட்டிகள், சூலாயுதங்கள் இருந்தன. ஜனசங்கம் எம். பி. சுவாமி ராமேஷ்வரானந்தின் வெறித்தனமான பேச்சைத் தொடர்ந்து போலீஸ் காவலை மீறிக் கொண்டு நாடாளுமன்றத்திற்குள் புகப் பார்த்தார்கள். போலீஸ் மீது கற்களையும் ஆயுதங்களையும் வீசினார்கள். அவர்களைத் தடுக்க கண்ணீர் புகை குண்டுகளையும் லத்திகளையும் பயன்படுத்திய போலீஸ் முடிவில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. கூட்டம் அரசு கட்டடங்களைத் தாக்கியது. நாடாளுமன்ற வீதியில் அல்லது கன்னோட் சர்கசில் தாக்கப்படாத ஒரு கட்டடம் இல்லை. மேலும் காங்கிரஸ் தலைவர் குமாரசாமி காமராஜ் மற்றும் மத்திய அமைச்சர் கோட்டா ரகுராமையாவின் வீடுகளும் தாக்கப்பட்டன. உள்துறை அமைச்சர் நந்தா நவம்பர் 9 அன்று ராஜினாமா செய்தார். துப்பாக்கிச் சூட்டில் ஒரு கான்ஸ்டேபிள் உட்பட 8 பேர் மாண்டதாக உள்துறை இணையமைச்சர் ஜெய்சுக்லால் ஹாத்தி கூறினார்”.இவர்கள் சாதுக்களாம்! சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முதலாக நாடாளுமன்ற கட்டடத் திற்குள் புகுந்து அதைக் கைப்பற்ற முயன்றவர்கள் இவர்களே. இவர்கள் எப்படி சாதுக்கள் ஆவார்கள்? இவர்கள் அராஜகவாதிகள், பலாத்காரவாதிகள். தலைவர்களது உயிர்களுக்கு இவர்களால் பேராபத்து நேரவிருந்தது. இதை துவக்கத்திலேயே தடுக்கத் தவறினார் என்பதால்தான் நந்தா பதவி விலக வேண்டி வந்தது.

அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா. நாடு முழுவதும் பசுவதையை தடை செய்ய முடியுமா என்று ஆராய ஒரு குழுவை அமைத்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர், பூரி சங்கராச்சாரியார், பொருளாதார அறிஞர் அசோக் மித்ரா, பால்வளத்துறை வல்லுநர் வி. குரியன் போன்றோர் அதில் உறுப்பினர்கள். “1966 நவம்பரில் நடந்த அந்த இயக்கம் ஆர்எஸ்எஸ்சால் நடத்தப்பட்டதே என்று கோல்வால்கர் என்னிடம் கூறினார்” என்று பின்னாளில் எழுதினார் வி.குரியன். (News18.com, 3-12-2018)

பசுவதை தடுப்பு என்ற பெயரில் மனிதவதையில் இறங்கிய ஒரு கூட்டத்தை அன்று கிளப்பிவிட்டது ஆர்எஸ்எஸ்சே எனும் வலுவான குற்றச்சாட்டு வரலாற்று பக்கங்களில் பதிவாகியுள்ளது. அதில் காங்கிரஸ் தலைவர் காமராஜரின் உயிரும் சிக்கியிருந்தது, நல்லவேளையாக அவர் தப்பினார்.

(தொடரும்)

;