tamilnadu

img

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத ஏமாற்றுக்காரர் மோடி... சென்னை போராட்டத்தில் பெ.சண்முகம் சாடல்

சென்னை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண்துறை சார்ந்த 3 சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று (செப். 21) ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றன.அதன் ஒரு பகுதியாக சென்னையில் கோட்டையை முற்றுகையிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் சென்னை பாரிமுனையில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், விவசாயிகள் விரோத மசோதாக்களுக்கு ஆதரவு அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக் கோரியும் முழக்கமிட்டனர்.பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில்அனைவரும் கோட்டையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினர் மேலும் செல்லவிடாமல் தடுத்தனர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் காவல்துறையினர் பெ.சண்முகம்,  கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, சி.திருவேட்டை, முருகேஷ், தாமோதரன், தனலட்சுமி, குமார், விவசாயிகள் சங்க திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் சம்பத், சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை  கைது செய்தனர்.பின்னர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  

மத்திய அரசால் ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றப்பட்ட வேளாண்துறை சார்ந்த 3 சட்டங்களை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும். அதற்கு ஆதரவளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டு உடனடியாக பதவி விலக வேண்டும். சாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை விட 50 விழுக்காடு உயர்த்தி வழங்குவோம் என்ற வாக்குறுதியை வழங்கித்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது, மோடி பிரதமரானார். ஆனால் கடந்த 6 ஆண்டுகாலமாக மோடி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார். மோடி ஒரு ஏமாற்றுக்காரர். எனவேதான் ஹரியானா, பஞ்சாப். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஒரிசா போன்ற மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

செப்.25ல் சாலை மறியல்
தமிழகத்திலும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் வரும் 25ஆம் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை என 500க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசு இந்த 3 சட்டங்களை வாபஸ் பெறும் வரை நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

;