tamilnadu

img

நாட்டிலேயே முதன் முறையாக வாக்களித்த மனநலம் குன்றியோர்

சென்னை, ஏப். 18-இந்தியாவில் வியாழனன்று (ஏப். 18) நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இங்கு 900 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பெறும் நோயாளிகளில் சுயமாக சிந்திக்கும் வகையில் குணமடைந்த 159 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்ய தேர்ந்தெடுக்கப்பட் டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மத்திய சென்னை தொகுதி யில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றி எடுத்துக் கூறி இரண்டு நாட்கள் தேர்தல் அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரம் வைத்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. வாக்கு அளிக்க வேண்டியதின் அவசியம் குறித்த கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.இதையடுத்து 103 ஆண்கள், 56 பெண்கள் என மொத்தம் 159 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் தங்களது வாக்குகளை செலுத்த வசதி செய்யப்பட்டிருந்தது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோன்று கர்நாடகா, கொல்கத்தா மாநிலங்களிலும் வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. இனி அடுத்து வரும் தேர்தல்களில் இதுபோன்ற வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

;