tamilnadu

img

பருப்பு, சமையல் எண்ணெய் விலை உயர்வு... மக்கள் அதிர்ச்சி

சென்னை:
பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 95 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உளுத்தம் பருப்பு கிலோ 110 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும், கடலைப் பருப்பு 65 ரூபாயிலிருந்து 75 ரூபாயாகவும், பாசிப்பருப்பு 100 ரூபாயிலிருந்து 110 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.அதேபோல், மல்லி, மிளகாய் வற்றல் ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்து முறையே 100 ரூபாய்க்கும், 160 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

முதல் தர புளியின் விலை 160 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரித்துள்ளது. சம்பா ரவை கிலோ 84 ரூபாயிலிருந்து 125 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் 105 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும், பாமாயில் 84 ரூபாயிலிருந்து 92 ரூபாயாகவும் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதே நேரத்தில், செக்கு எண்ணெய் வகைகளின் விலை ஏற்ற இறக்கம் இல்லாமல் உள்ளது. விலை உயர்வால் வியாபாரம் மந்தமாகவே நடைபெறுகிறதுகொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட முதல் ஊரடங்கு காலத்தில், மக்கள் பீதியில் அதிக பொருள்கள் வாங்கியது, சரக்கு போக்குவரத்து தடைபட்டது ஆகியவற்றால் மளிகை பொருள் களின் விலை சற்று அதிகரித்து பின்னர் குறைந்ததாகவும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் மளிகை கடை வணிகர்கள் கூறினர் . விலை உயர்வு, பணப்புழக்கம் இல்லாதது ஆகிய காரணங்களால் வியாபாரம் மந்தமாகவே நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிகளவிலான பருப்பு வகைகள் வட மாநிலங்களில் இருந்தே இங்கு கொண்டு வரப்படுகின்றன. டீசல் விலை உயர்வு, நெடுஞ்சாலை சுங்கக் கட்டணம் அதிகரிப்பு ஆகியவையே விலை உயர்வுக்கான காரணம் என்கின்றனர் வியாபாரிகள். இந்த விலை ஏற்றத்தால் மாத செலவில் 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.ஊரடங்கு காலத்தில் எண்ணெய் விலை மட்டும் மூன்று முறை அதிகரித்துள்ளது. தற்போது காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஊரடங்கால் பொருளாதார நிலை மிகவும் பாதித்துள்ள நடுத்தரகுடும்பங்களுக்கு, இந்த அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மேலும் நெருக்கடியையே கொடுத்துள்ளது.

;