tamilnadu

img

கரூர் எம்.பி. ஜோதிமணியை இழிவாகப் பேசிய பாஜகவின் கரு.நாகராஜன் மன்னிப்பு கோர வேண்டும் : சிபிஎம்

சென்னை:
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களை இழிவாகப் பேசிய பாஜகவின் கரு.நாகராஜன் மன்னிப்பு கோர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு:

மே 18 திங்களன்று இரவு நியூஸ் 7 தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்களை பாஜகவின் சார்பில் விவாதத்தில் கலந்து கொண்ட கரு.நாகராஜன் தரம் தாழ்ந்தும். அநாகரிகமாகவும் விமர்சித்து தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இதை வன்மையாக கண்டிக்கிறது.
நியாயப்படுத்த முடியாத தங்கள் கட்சி மற்றும் ஆட்சியின் நிலைப்பாடுகளை நியாயப்படுத்த முனையும் பாஜக மற்றும் சங்பரிவார் ஆதரவாளர்கள் அதில் தோற்றுப் போகும்போது  தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதை தொடர்ச்சியாக பார்க்க முடிகிறது.பெண்கள் குறித்த பாஜகவின் பார்வை, விவாதங்கள் குறித்தான அவர்களது அணுகுமுறை, ஜனநாயகம் பற்றிய அவர்களுடைய புரிதல் இவையெல்லாம்தான் இத்தகைய அவர்களின் அணுகுமுறைக்கு காரணம்.

கரு.நாகராஜன் தன்னுடைய கருத்துக்கு பகிரங்கமாக வருத்தமும் மன்னிப்பும் கோர வேண்டுமெனவும், இதுபோன்று கன்னியக்குறைவாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்ளும் நபர்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் விவாதங்களுக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும் தொலைக்காட்சி நிறுவனங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;