tamilnadu

img

சிறு-குறு தொழில்களை பாதிப்பிலிருந்து மீட்க உதவுக... சி.ரங்கராஜன் குழுவிற்கு சிபிஎம் பரிந்துரை

சென்னை:
சிறு-குறு தொழில்களை பாதிப்பிலிருந்து மீட்க ஓராண்டுக்கு வட்டி விதிக்காமல் அதிகபட்சகடன் வழங்க வேண்டும் என்று   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  

கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கங்கள் குறித்து ஆய்வு  செய்யவும் அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைவழங்கவும் தமிழக அரசு அமைத்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரிவான ஆலோசனைகளை அளித்துள்ளது. அதில் சிறு-குறு தொழில்கள் தொடர்பாக கூறியுள்ள அம்சங்கள் வருமாறு:

தொழில் வளம்
அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்திட வேண்டும். தொழிற்சாலைகளை துவக்கும் போது பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்நிய மூலதனம் சார்ந்த தொழிற்சாலைகள், தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் சுற்றுச் சூழல் விதிகளுக்குட்பட்டு செயல்படும்விதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட வேண்டும். நலிவுற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்,  நூற்பாலைகள் உள்ளிட்ட  பொதுத்துறை தொழிற்சாலைகளை சீரமைக்க வேண்டும். 

சிறு-குறு தொழில்கள்

  சிறு-குறு தொழில்துறையில் (MSME)  தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இத்துறை தமிழக உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சுமார் 40 சதவிகிதம் பங்களிப்பு செலுத்துகிறது. இத்துறையை பாதுகாக்க அரசு தேவையான உதவிகளை  மேற்கொள்ள வேண்டும். 

  பாதிப்பில் இருந்து தொழிலை மீட்டெடுக்கவும், தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்கவும் குறுந்தொழிலுக்கு 5 இலட்சம் வரையிலும், சிறு தொழில் நிறுவனத்திற்கு 15 இலட்சம் வரையிலும் 60 மாத தவணைகளில் திருப்பி செலுத்தக்கூடிய விதத்தில் கடன் வழங்க வேண்டும். ஒரு வருடத்திற்கு வட்டி விதிக்கக்கூடாது. 

 நடுத்தர நிறுவனங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் நடந்த சராசரி ஆண்டு விற்பனை மதிப்பு (TURNOVER) அடிப்படையில் மேற்கூறியவாறு கடன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

  அடுத்து வரும் காலங்களில் சில குறிப்பிட்ட துறைகளுக்கு  முக்கியத்துவம் தருவதன் மூலம், உற்பத்தியையும், ஜி.டி.பியையும் மேம்படுத்த முடியும். விவசாயம், ஜவுளி ஆகியவை கிராம மற்றும் சிறு நகரங்களில் பொருளாதார ஊக்குவிப்பிற்கு பங்களிப்பு செய்யும். 

  பெரு நிறுவனங்களின் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி நிதி, முழுமையாக, கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தமிழக பொருளாதாரம் மீள்வதற்கு பயன்பட அரசுக்கு கிடைக்க வேண்டும். 

  கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்து வதன் மூலம் இதுபோன்ற நெருக்கடிகளை எதிர் கொள்ள முடியும். முகக்கவசம், சானிட்டைசர், பினாயில் தயாரிப்பில்  அனைத்து மட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குறிப்பிட்ட மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகளை உள்ளடக்கி,  கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். 

  மிகச்சிறிய உற்பத்தி மையங்கள் 4 அல்லது 5 பேர் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு  கடன் வழங்கமத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வேலை கிடைக்காத இளைஞர்களை, இளம்பெண்களை மற்றும் சுய உதவி குழுக்களை இவற்றில் ஈடுபடுத்தும் வகையில்  ஆய்வு மேற்கொள்வதும், ஒர்க்கிங் பார்ட்னர் என்ற முறையில் குறிப்பிட்ட காலத்திற்கு இளைஞர்கள்/ இளம் பெண்களை பயன்படுத்துவதும் அவசியம்.

  சிறு-குறு நிறுவனங்கள் 18 சதவிகிதம் முதல் 24 சதவிகிதம் வரை ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டியுள்ளதால் தொழில் நடத்த முடியாமல் திணறுகின்றன. எனவே, இவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி ஏற்கனவே இருந்ததைப் போல 5 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும். 

 சிறு-குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் working capital மற்றும் fixed capital தேவைகளுக்கு கடன் வசதிகள் செய்து கொடுத்திட வேண்டும்.

  நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் பகுதியாக இந்நிறுவனங்களுக்கு wage subsidy அளிக்கலாம்.

;