tamilnadu

img

மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் உடனே திறந்திடுக!

சென்னை:
சம்பா சாகுபடிக்கு நாற்றுவிட கடைமடைப் பகுதி வரை தண்ணீர் சென்று சேர உடனடியாக மேட்டூர் அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை:மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆகஸ்ட் - 13ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், பாசன பணிகளை துவங்கும்வகையில் தண்ணீர் வந்து சேரவில்லை. தமிழக அரசு, தூர்வாரும் பணியை கோடை காலத்தில் மேற்கொள்ளாமல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்ட பிறகு அவசர கோலத்தில் அள்ளித்தெளித்த கதையாக தூர்வாரும் பணியை இப்போது செய்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, கூடுதல் தண்ணீர் திறக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பாசன வசதி தரக்கூடிய வெண்ணாற்றில் இதுவரை நீர் திறந்துவிடப்படவில்லை. மேட்டூர் அணை நிரம்பியும், சம்பாசாகுபடிக்கு நாற்றுவிடும் காலத்தில் தண்ணீர் திறந்துவிடாமல் இருப்பதற்கு தமிழகஅரசின் திட்டமிடுதலில் உள்ள அலட்சியமேகாரணமாகும். கல்லணை கால்வாயிலும் போதுமான நீர் இதுவரை திறக்கப்படவில்லை. இப்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடாமல் காலதாமதம் செய்தால் வடகிழக்கு பருவமழை காலத்தில் பயிர்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, தமிழக அரசு காவிரி டெல்டாபகுதிகளில் கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும் வகையில் உடனடியாக மேட்டூர்அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென தமிழ்நாடுவிவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. அனைத்து ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிடுவதன் மூலம் சம்பா சாகுபடி பணிகள் முழுவீச்சில் துவங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது.
சாகுபடி பணிகளை மேற்கொள்ள உதவியாக போதுமான விதை, உரம், தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதுடன் பயிர்க்கடன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

;