tamilnadu

img

கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் மத்திய-மாநில அரசுகள்

பொது விநியோகத்தை கைவிடுவதற்கு  சிஐடியு கூட்டுறவு  ஊழியர் சம்மேளனம் எதிர்ப்பு

சென்னை,ஜூன் 12- அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதன் மூலம் விவசாயத்தை சீரழித்து, பொது விநியோகத்தை கைவிட்டு, கார்ப்பரேட்டுகள்  கொள்ளையடிக்க வழிவகுத்துள்ள மத்திய பாஜக  அரசுக்கும் துணைபோகும் மாநில அரசுக்கும்  தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர்  ஆ.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:    அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை மத்திய அமைச்சரவை ஜூன் 3 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விளைவாக அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம் ,உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் விலை கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதேசமயம் பதுக்கலுக்கும், தங்குதடையற்ற ஏற்றுமதிக்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக இந்திய நாட்டின் விவசாயிகளில் பெரும்பகுதி சிறு-குறு விவசாயிகளே. இவர்கள் தங்களது உற்பத்திசெய்த விளைபொருட்களை சேமித்து வைக்கவோ ,ஏற்றுமதி செய்ய வசதியற்றவர்களாகவே  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவோ, விவசாயக்கடன்களை ரத்து செய்யவோ  மறுக்கும் அரசுகள், கார்ப்பரேட்டுகள் பெற்ற கடன்களை மட்டும் தள்ளுபடி செய்கிறது. அதுபோன்றே  விவசாய உற்பத்தியிலும் கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்து கொள்ளையடிக்க தற்போது வழிவகுக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவுக் கழகத்தை கலைக்க ஏற்பாடு 

ஒருபுறம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து எனும் அறிவிப்பு,  மற்றொருபுறம்  ஆன்லைன்  மூலம் விற்பனை மால்கள் திறப்பு என திட்டமிட்டு செயல்படுகிறது மத்திய அரசு. இவையெல்லாம் ஏதோ தற்போதுதான் நடைபெறுகிறதா என்றால் இல்லை, மத்திய அரசு பொறுப்பேற்றவுடன் பொது விநியோகத் திட்டத்தை செழுமைப்படுத்த இருக்கிறோம் என்ற பெயரில் சாந்தகுமார் என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. குழு அளித்த பரிந்துரைகளைத்தான் தற்போது தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. அத்தகைய பரிந்துரைகளில் ஒன்று தான் இந்திய உணவுக் கழகத்தை (FCI) படிப்படியாக கலைத்து விடுவது என்பதுதான் தற்போது நடைபெற்று வருகிறது .  உலக வர்த்தகக் கழகத்தின் (WTO ) அழுத்தம் காரணமாகவே முடிவெடுத்து செயல்படுகிறது மத்திய அரசு .பெரும் வணிக குழுமங்களுக்கு சந்தையை திறந்துவிட உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது வேளாண்மைத் தொழிலை விட்டு வெளியேறுவது மட்டுமல்ல, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு கிடைத்துவரும் குறைந்தளவிலான பலன்களும்  கைவிடப்படக்கூடும் .                  

சீரழிக்கும் வர்த்தகச் சூதாட்டம்

மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு மாநில அரசும் துணைபோவதுதான் வெட்கக்கேடு. இந்நிலையில் ஒப்பந்த பண்ணை சட்டம், தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (ஒழுங்குபடுத்துதல்) சட்டத்திலும் திருத்தம் செய்துள்ளது . தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் வெளியிட்டு வரும் செய்திக்குறிப்பில் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்கிற ஒரு தகவலையும் அவர் தெரிவித்து வருகிறார். இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. இத்தகைய வர்த்தகச் சூதாட்டத்தின் மூலம் விவசாயத்தை சீரழித்து, பொது விநியோகத் திட்டத்தை அழித்தொழிக்கவே  மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.               ‌ மக்களுக்கான அத்தியாவசிய தேவையான உணவு தானியங்களில் கைவைக்கும் அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்வதோடு  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டத்தை பாதுகாத்திட வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுப்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 

;