tamilnadu

img

பெண்கள் மீதான குற்றங்களை தடுக்க நீதிபரிபாலன முறையில் மாற்றத்தை கொண்டு வருக.... ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை:
பிற்போக்கான பார்வையே பெண்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமாகிறது. பெண்கள் மீதான குற்றங்களை குறைக்க நீதிபரிபாலன முறையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண்கள்,பெண்குழந்தைகளின்  பாதுகாப்பை காக்கும் நோக்கோடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சில சட்டத்திருத்தங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

வரதட்சணை மரணங்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையை 10 ஆண்டுகளாகவும்,  குற்ற நோக்கோடு  பெண்களின் உடைகளை களையும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு, அதிகபட்சம் 5  ஆண்டுகளாக இருந்த தண்டனையை குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள்  என உயர்த்தவும்  பெண்களை கடத்தும் குற்றத்திற்கு தண்டனையை 5 ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தவும் பாலியல் தொழில் செய்ய 18 வயதிற்குட்பட்டவர்களை கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் குற்றத்திற்கு தண்டனையை 10 ஆண்டுகளில் இருந்து ஆயுள் தண்டனையாக சட்டத்திருத்தம்  செய்யவும் மத்திய அரசுக்கு  பரிந்துரைப்பதாக  முதலமைச்சர் சட்டமன்றத்தில்  அறிவித்துள்ளார் .

மேற்கண்ட சட்டப்பிரிவுகள்  அனைத்தும் இந்திய தண்டனைச்சட்டங்களாகும். இந்திய தண்டனைச்சட்டத்தை திருத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநில அரசால் இந்திய தண்டனைச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யமுடியாது.
தமிழகத்தில்  பெண்கள் ,குழந்தைகள் மீதான  குற்றங்கள் இக்கால கட்டத்தில் அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் மத்தியில் தமிழக அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது . வன்முறைகளை சந்திக்கும் பெண்கள்  காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்வதற்கே காவல்துறையிடம் போராட வேண்டியுள்ளது.

குற்றம்செய்பவர்களுக்கு அரசியல் பலம், பணபலம் இருக்கும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழக்கு பதிவு செய்வது பெரும் சவாலாகவே உள்ளது. பெண்களை இழிவாகச் சித்தரித்து முகநூலில் பதிவிடும் கிஷோர் சாமி போன்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் பாஜக தலைவர் எச். ராஜா போன்றோர் காவல்துறையினரை நிர்ப்பந்தித்து  குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர்.தமிழகத்தில் இதுபோன்ற குற்றங்களை தடுக்க வேண்டிய  பொறுப்பு தமிழக காவல்துறைக்கே  உள்ளது. ஆனால் தமிழக காவல்துறையோ இப்படியான   நெருக்கடியை சில சமயங்களில் சந்திக்க வேண்டியுள்ளது.  பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களில்  30 சதவீதம் முதல் 35 சதவீத குற்றவாளிகள் மட்டுமே  தண்டிக்கப்படுகின்றனர்.பல வழக்குகளில் நீதி தாமதமாகவே கிடைக்கின்றன. 

இந்தியாவில் சாட்சிகளை பாதுகாப்பதற்கான எந்த சட்டமும் இல்லை .   சாட்சிகள்  பாதுகாக்கப்படாததால்  வழக்கை உரிய முறையில் நடத்த முடியாமல்  குற்றவாளிகள் தப்பித்துக்கொள்கின்றனர்.பெண்கள் மீதான குற்றங்களுக்கு குடிபோதை ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. அது குறித்து தமிழக முதல்வர் எந்த கருத்தையும்  சட்டமன்றத்தில் தெரிவிக்காமல் தண்டனையை உயர்த்துவது குறித்து மட்டுமே பரிந்துரைப்பது கேலிக்கூத்தானதாகும்.பெண்கள் குறித்த பிற்போக்கான  சமூகப்பார்வையே  அத்தகைய வன்முறைகளுக்கு மூலகாரணம் .குற்றங்களுக்கு அடிப்படை காரணமான பெண்கள் குறித்த பிற்போக்கான பார்வையை   மாற்றாமல் எப்படிப்பட்ட சட்டங்கள் வந்தாலும் குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்பில்லை. எனவே தமிழக அரசு தண்டனைகளை அதிகப்படுத்த நினைக்கும் இவ்வேளையில்  நீதி பரிபாலன முறைகளில்  மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். டாஸ்மாக் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து,பெண்கள் பற்றிய பிறபோக்குத்தனமான பார்வையை மாற்றுவதற்காக கல்விமுறைகளை கொண்டுவருதல் உள்ளிட்டவைகளின் மீது கவனம் செலுத்துவதே பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை குறைக்க உதவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;