tamilnadu

img

சட்டமன்றம் - நாடாளுமன்றம் துவங்கும் நாளில் ஆர்ப்பாட்டம்... மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் நடத்துகின்றன

சென்னை:
சட்டமன்றம் -  நாடாளுமன்றம் துவங்கும் நாளில் மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என இடதுசாரி கட்சிகள் முடிவெடுத்துள்ளன.செப்டம்பர் 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)யின் மாநிலத்தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மாநில செயலாளர் என்.கே.நடராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்  க.கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற கூட்டம் துவங்கும் நாளான செப்டம்பர் 14ம் தேதியன்று கிராமம் மற்றும் நகர அளவில்  கொரோனா பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு இடதுசாரி கட்சிகள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

1. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்

2. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும்.

3.  மத்திய அரசு கொரோனா காலத்தை பயன்படுத்தி, கொண்டு வந்துள்ள தேசிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கொள்கை, மின்சாரத்திருத்த சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களையும் கொள்கைகளையும் கைவிட வேண்டும்.

4. கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை அதிகரித்திட வேண்டும்,பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், மத்திய அரசின் விவசாயிகளுக்கான மானிய திட்டத்தை விவசாய தொழிலாளர்கள் மற்றும்  குத்தகை விவசாயிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

5. நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் கடன் வசூலை ஓராண்டு காலத்திற்கு  ஒத்தி வைத்திட வேண்டும்;  அனைத்து கடன்களுக்கும் ஓராண்டிற்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

6. ரயில்வே, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டங்களை கிராம, ஒன்றிய, நகர அளவில் நடத்த வேண்டும்.  கொரோனா தொற்று தீவிரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கணக்கில் கொண்டு தோழர்கள் உரிய பாதுகாப்புடன் இந்த போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

;