tamilnadu

img

சில்லரை பால் விற்பனைக்கு தடைபோடுவதா?

சிவகங்கை:
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சிவகங்கையில் 15 ஆம்தேதியன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கே.முகமதுஅலி, தற்போதைய ஆவின்நிர்வாகத்தின் முறைகேடான நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விளக்கினார். சமீபத்தில், தமிழக அரசின் பால்வளத்துறையின் சார்பாக ஆரம்ப பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ஒரு தவறான உத்தரவை வழங்கியுள்ளனர். அதாவது ஆரம்ப சங்கங்கள் கொள்முதல் செய்கிற பால் முழுவதையும் ஆவினுக்கே அனுப்பி வைத்திட வேண்டும். ஆரம்ப சங்கப்பகுதிகளிலுள்ள பொது மக்களுக்கு பால் விற்கக்கூடாதென உத்தரவிட்டுள்ளனர்.இதுவரை சங்கங்களுக்கு பால் வழங்கக்கூடிய குடும்பங்களுக்கும், குழந்தைகளுக்கு வழங்குவதற்காக பொதுமக்களுக்கும் ஒரு பகுதி பாலை ஆரம்ப சங்க அலுவலர்கள் கொள்முதல் விலையை விட ரூ.2, ரூ.3 வரைஉயர்த்தி விற்று வந்தனர். பல பெரிய சங்கங்களில் பால்வெண்டர்கள் என்ற பெயரில்பணியாளர்களை அமர்த்தி பால் கொள்முதலையும், உள்ளூர் பகுதி விற்பனையையும் செய்து வருகிறார்கள். இதனால், அரசின் உதவிஎதுவுமில்லாத நிலையில் இந்த விற்பனையில் கிடைத்த தொகையின் மூலமாகவேசங்கங்களின் செலவுகளை சமாளித்து வருகிறார்கள். 

அரசு உதவி ஏதுமில்லை
தமிழகத்திலுள்ள சுமார் 11,000 ஆரம்பசங்கங்களில் ஒருபகுதி சங்கங்களில்தான் உள்ளூர் பால் விற்பனைக்கான வாய்ப்பு உள்ளது. இவற்றுடன் மற்ற சங்கங்கள் அனைத்திற்கும் பாலுக்கு கொள்முதல் விலை உயர்த்துவதற்கு முன் 1 லிட்டருக்கு 75 காசுகளும், கொள்முதல் விலைஉயர்த்தப்பட்ட நடப்பு மாதத்திலிருந்து 1 லிட்டருக்கு ரூ.1.25 காசுகளும் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையிலிருந்து பிடித்தம் செய்து ஆரம்ப சங்கங்களின் செயல்பாட்டிற்காக வழங்கப்படுகிறது. இதில் அரசின் உதவி எதுவுமே இல்லை.ஆரம்ப சங்கப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கலப்படமில்லாத புதிய பால் இந்த சில்லரை விற்பனை மூலம் கிடைத்து வருகிறது. இதற்கு தடை போட்டால்அந்தப் பகுதி பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்.

தனியார் நிறுவனங்கள் ஆவினுக்கு பாக்கி
தற்போது, ஆவின் நிர்வாகத்தில் மாவட்ட ஒன்றியங்களிலும், மாநில இணையத்தின் மூலமும் தினமும் சுமார் 6 லட்சம் லிட்டர் அளவிற்கு தனியார் பால் நிறுவனங்களுக்கு, பாலாகவே விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஊழலும் நிலவுகிறது. கோவையிலுள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்திற்கு சுமார் ரூ.2.75 கோடி தொகை ஆவினுக்கு இந்த வகையில் பால் விற்றதில் குறிப்பிட்ட காலம் கடந்தும் பணம் வரவில்லை. பல மாவட்ட ஒன்றியங்களிலிருந்தும் ஆவின் நிறுவனம் பாலை விற்றதில் பாக்கிகள் உள்ளன. இந்த நிலையில் ஆரம்ப சங்கங்களில் கொள்முதல் செய்வதில் ஒரு சிறு பகுதிபாலை பொதுமக்களுக்கான - குழந்தைகளுக்கான பால் என்ற பெயரில் விற்பதற்கு தடைபோடுவது சரியல்ல. கடந்த 20 வருடங்களில் தினமும் 1.25 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிற தமிழகத்தில் தினமும் 25 லட்சம் முதல் 30 லட்சம் லிட்டர் வரை தான் ஆவின் கொள்முதல்செய்து வருகிறது. ஆவின் பால் கொள்முதலை இதுவரை உயர்த்தவில்லை. 

மிரட்டுவதா?
இதே காலத்தில் குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பலமடங்கு பால் கொள்முதல் அதிகரித்துள்ளது. ஆகவே, ஆவின் நிறுவனம் தினமும் 50 லட்சம் லிட்டர்அளவிற்கு கொள்முதலை உயர்த்த வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால்ஆவின் நிர்வாகத்திலிருந்து எந்த முயற்சியும் இல்லை. இந்தநிலையில், ஆரம்ப சங்கப் பணியாளர்களை மிரட்டும் வகையில் பால்வளத்துறை உத்தரவிடுவது சரியல்ல.பால் உற்பத்தியாளர்களின் நிர்வாகக்குழுவுக்குத்தான் பணியாளர்களைக் கட்டுப்படுத்துகிற அதிகாரம் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் இல்லாத போது தான் தனி அலுவலர்களின் நிர்வாகத்தில் ஆரம்ப சங்கங்கள் செயல்பட வேண்டியிருக்கும். ஆரம்ப சங்கங்களிலுள்ள பால் உற்பத்தியாளர்கள் வழங்குகிறதொகையிலிருந்துதான் ஆரம்ப சங்க அலுவலகம் செயல்பாடு, அலுவலர்கள் சம்பளம்ஆகியவை உள்ளது. எனவே, தேவையில்லாத வகையில் பால் வளத்துறை ஆரம்பசங்க செயல்பாடுகளில் தலையிட்டு சீர்குலைப்பதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆரம்ப சங்கப் பகுதிகளில் இதுவரை நடைமுறையில் உள்ள சில்லரை பால் விற்பனையைதடை செய்ய வேண்டாம். இதன் மூலம் இந்த பால் நுகர்வோரை தனியார் நிறுவனங்கள் பால் விற்பனைக்கு கொண்டு வந்து விடும் எனவும் சுட்டிக்காட்டுகிறோம்.அரசின், பால்வளத்துறையின் சில்லரை பால் விற்பனைக்கு அறிவித்துள்ள தடையை நீக்காவிட்டால் நவம்பர் மாதம் 3ஆவது வாரத்தில் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள் என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.கூட்டத்தில் பொருளாளர் எம்.சங்கர், துணைச்செயலாளர் பி.ராமநாதன், துணை தலைவர் எம்.சிவாஜி, பி.பெருமாள், டி.ஆர்.ரவிச்சந்திரன், என்.செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

;