science

img

நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது சந்திரயான் 2

சந்திரயான்-2 விண்கலம் 28 நாள் பயணத்திற்குப் பிறகு, இன்று காலை நிலவின் சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான் 2 கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப்பாதையில் வந்து கொண்டிருந்த விண்கலம் கடந்த ஜூலை 23-ஆம் முதல் ஆகஸ்டு 6-ஆம் தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக புவியீர்ப்பு விசையை விட்டு வெளியே சென்று, நிலவை நோக்கி பயணித்தது. இந்நிலையில், புவி வட்ட பாதையை விட்டு வெளியேறியுள்ள சந்திரயான் 2 விண்கலம், இன்று காலை நிலவின் முதல் வட்டப்பாதையை அடைந்தது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ”சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை அதிகரித்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்று ஆகஸ்ட் 14-ஆம் நாள் 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. இது மிக முக்கியமான பயணமாகும். இதைத்தொடர்ந்து இன்று நிலவின் சுற்றுவட்டப் பாதையை சந்திரயான் விண்கலம் சென்றடைந்தது. சந்திரயான்- 2 திட்டத்தில் இது மிக முக்கியமான சாதனையாகும். இதன் மூலம் நாம் இலக்கை நெருங்குகிறோம். நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும்” என்று கூறினார்.
 

;