world

img

ரூபிள் மூலம் வர்த்தகம் செய்வோம் ரஷ்யா-துர்க்கியே உடன்பாடு

இதுவரையில் அமெரிக்க டாலர் மூலம் தங்கள் வர்த்தகத்தை மேற்கொண்டு வந்த ரஷ்யாவும், துர்க்கியேவும் தங்கள் வர்த்தகத்திற்கு ரஷ்யா நாணயமான ரூபிளைப் பயன்படுத்திக் கொள்வது என்று முடிவெடுத்துள்ளன.

ரஷ்யாவின் நகரங்களில் ஒன்றாக சோச்சியில் நடந்த கூட்டமொன்றில் இதற்கான உடன்பாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும், துர்க்கியே ஜனாதிபதி ரிசெப் தய்யிப் எர்டோகனும் கையெழுத்திட்டனர். ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்த அமெரிக்காவுக்கு இந்த உடன்பாடு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடைகளால் ரஷ்யா பாதிக்கப்படும் என்று கருதப்பட்ட நிலையில், தடைகளை விதித்த அமெரிக்காவும், அதற்கு துணை நின்ற ஐரோப்பிய நாடுகளுமே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன.

உடன்பாட்டில் கையெத்திட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரக்கியேயின் ஜனாதிபதி எர்டோகன், "வர்த்தகத்தை ரூபியில் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த சோச்சி பயணத்தில் மிகவும் நல்ல விஷயம் நடந்துள்ளது. ரூபிளைப் பயன்படுத்துவது என்று விளாடிமீர் புடினுடன் ஒப்புக் கொண்டுள்ளோம். நிதி ஆதாரம் என்ற வகையில் இது பயனுள்ளதாக இருக்கும். வர்த்தக உறவை மேம்படுத்தவும் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதில் இருதரப்பு அமைச்சர்களும் கையெழுத்திட்டிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

ரஷ்யா மற்றும் துரக்கியேயின் இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 10,000 கோடி அமெரிக்க டாலராகும். ரஷ்யாவின் மீர் அட்டையைப் பயன்படுத்துவதில் ஏற்கனவே துர்க்கியே முன்னணியி உள்ளது. இந்த அட்டையை வியட்நாம், ஆர்மீனியா, உஸ்பெகிஸ்தான், பெலாரஸ், கஜகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், தெற்கு ஓசெட்டியா மற்றும் அப்காசியா ஆகிய நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன. விசா உள்ளிட்ட பல்வேறு கடன் அட்டை நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் அட்டைகள் செல்லாது என்று ஏற்கனவே அறிவித்தன. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அட்டைகளுக்கு மாற்றாக ரஷ்யாவின் மீர் அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.

ரஷ்யா மற்றும் துர்க்கியேயின் மத்திய வங்கிகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். விளாடிமீர் புடினுடனான சந்திப்பில் துர்க்கியேயில் உள்ள அக்குயு அணு மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் பற்றியும் பேசியிருக்கிறார்கள். நிலையம் அமையும் இடத்திற்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ள எர்டோகன் முடிவு செய்திருக்கிறார். இந்த மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்கு ரஷ்யா உதவி செய்யவிருக்கிறது. இதற்கு ரஷ்யத்தரப்பில் ஒப்புதலும் தெரிவித்திருக்கிறார்கள்.

டாலர் தவிர்ப்பு

ரஷ்யாவோடு, சீனா, சவூதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் டாலரைக் கைவிட்டுவிட்டு, மாற்று நாணயங்களைப் பயன்படுத்துவது பற்றி ஆலோசனை செய்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தின் அறிக்கையின்படி, டாலரோடு சேர்ந்த யூரோ, பவுண்டு ஸ்டெர்லிங்(பிரிட்டன்), யென்(ஜப்பான்) மற்றும் யுவான்(சீனா) ஆகிய நான்கு நாணயங்களும் பன்னாட்டுப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று சர்வதேச நிதி அமைப்பு(ஐ.எம்.எப்) கூறியுள்ளது.

;